Monday 30 January 2012

அம்மா என்றால் மட்டுமில்லை அன்பு ...................................


அம்மா என்றால் அன்பு..........!

கிருஷ்ண தேவராயரின் அவையில் அல்லசானி பெத்தண்ணா திம்மன்னான்னு ஒருத்தர் இருந்தார். பேரு ரொம்ப வித்தியாசமா இருந்ததுனாலே சின்ன வயசுல படிச்சாலும் இன்னும் ஞாபகத்துல இருக்கு. அந்த வகையில இன்னைக்கு நாம பார்க்கப் போகிற திம்மக்காவும் இனிமேல் மறக்க மாட்டோம். படிச்சுப் பாருங்க...கட்டுரை முடிவில மீண்டும் வருகிறேன்.......


==============================================


 

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம். அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.

எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்.



சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர். சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.
பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.

இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.

வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.

மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.

அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாராமல் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஓ ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதாஎன்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்என்று கூறியிருக்கிறார்.

இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.

பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.
என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.

எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மாஎன பேசியபடியும் காணப்படுகின்றன.

நன்றி : திரு. எல். முருகராஜ் - தினமலருக்காக.
===============================================

 ஹா.... கண்கள் பனித்தன . இதயம் இனித்ததுன்னு டயலாக் ஞாபகத்துக்கு வரும்னு நினைக்கிறேன். எவ்வளவோ நாமளும், இந்த மாதிரி உருக்கமான கட்டுரைகளை படிச்சு இருப்போம். ஆனாலும், கொஞ்ச நாளில் இதையெல்லாம் மறந்துட்டு கால ஓட்டத்தில நாமளும் ஓடிக்கிட்டு இருப்போம்.

உன்னால் முடியும் தம்பி படம் வந்ததே, பாலச்சந்தர் சார் படம். அதுலயும் ஒரு பெரியவர் காரெக்டர் இதே மாதிரி வரும். அவர் இதே மாதிரி நிறைய மரம் வளர்த்து , யாரோ ஒரு மரத்தை வெட்டினதுக்கு உயிரையே விடுற மாதிரி , ரொம்ப உருக்கமா ஒரு காட்சி உண்டு.

இந்த உலகம் உயிர்ப்போட இன்னும் சுத்திக்கிட்டு இருக்கிறதுக்கு இந்த மாதிரி சில நல்ல உள்ளங்கள் தான் காரணமோன்னு தோணுது.

நம்ம வாசகர்கள் என்ன பண்ணலாம்?

பீல் பண்ணுறதோட நிறுத்தாம, ஒவ்வொருத்தரும் ஒரு பத்து மரமாவது நட்டு வளர்க்கலாம். காடுகளை அழிக்க ஆரம்பிச்சுதுல, பருவ காலத்தையே வெற்றிகரமா மாத்திப்புட்டோம். இப்படியே போனாஇன்னும் அம்பது வருஷம் கழிச்சு , நம்ம ஊர்ல கூட வெயில் அம்பது டிகிரியை தொட்டுடும். நம்ம பேரக்குழந்தைங்க நிலைமை?

சாலைகளை அகலப்படுத்துறோம்னு , சாலை ஓரம் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி, அதை கூறு போட்டு வித்தாச்சு , எரிச்சாச்சு நம்ம அண்ணாச்சிங்க எல்லாம். அவனை நிறுத்த சொல், நானும் நிறுத்துறேன் எல்லாம் , நாயகன் படத்தோட போகட்டும்.

எல்லாம் அரசாங்கம் பண்ணட்டும்னு ஒதுங்கி போகவேண்டாம்.

நாம வாழ்ந்திட்டுப் போனதுக்கு , அத்தாட்சியா , ஒரு சாதனையா - பத்து நிழல் தரும் மரமாவது நாம வளர்ப்போம். நீங்க இருக்கிற வீட்டுக்கு பக்கமாகவோ, இல்லை உங்க ஊர் சாலை ஓரமாகவோ, ஊர் பொது இடங்களிலோ, கோவிலிலோ , உங்க வசதியை பொறுத்து இருக்கட்டும்.

யார் எல்லாம் சொந்த வீடு கட்டி இருக்கிறீங்களோ, அவங்க எல்லாம் சாக்கு போக்கு சொல்லாம அவசியம் செய்யுங்க. உங்க வீட்டுக்கே , ஒரு மரம் வெட்டப்பட்டு இருக்கும்.

யார், யாருக்கு வீடு கட்ட ஆசை இருக்கோ, அவங்களும் நிச்சயம் செய்யுங்கள். இயற்கை உங்களுக்கு கருணை செய்யும். உங்களுக்கு நிச்சயம் சொந்த வீடு அமையும். உங்கள் குழந்தைகளுக்கு இந்த நல்ல விஷயத்தை கற்றுக்கொடுங்கள்.  குட்டிப்பையன், சின்ன சொம்புல தண்ணி கொண்டு வந்தா, நீங்க உற்சாகமா ஒரு குடம் தண்ணி சுமக்கலாம்.

இதை எல்லாத்தையும் விட ஒரு முக்கிய விஷயம். இந்த கட்டுரை படிக்கும்போதே நீங்களும் உணர்ந்து இருக்கலாம்.

புத்திர சோகம். உறவுகள் கூட நேசம் செலுத்தாமல் இருக்கும்  நிலை.

நமக்கு கடவுளா இருந்து நம்மளை சின்ன வயசுல கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றிய , நம் பெற்றோர்களை நேசிப்போம். எவ்வளவோ மனஸ்தாபம் ஏற்பட்டு , விரிசல் விட்ட உறவுகளை நேசிப்போம்......!


சந்தர்ப்ப சூழ்நிலைலே யார் யார் கிட்டேயோ ஏச்சு பேச்சு வாங்கி இருப்போம்.
எங்கேயோ இருந்து வந்த நம்ம உயர் அதிகாரிகள் எவ்வளவோ நம்மளை பேசி இருந்தாலும் பொறுத்து போறோம் இல்லையா? நம்ம அண்ணன் , தம்பி - சித்தப்பா மக்க, பெரியப்பா மக்க - ஏதோ அந்த சூழ்நிலை, சந்தர்ப்பம் , பொல்லாத நேரம் , எவ்வளவோ பேசி இருக்க கூடும்...... அதை மனசில வைச்சு, அவங்க கூடி பேசி கலக்காமஎவ்வளவு நாள் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறோம்....!

கழுதை போயிட்டுப் போகுது... விடுங்க சார்....! நாம இ(ர)றங்கி வந்து கை குலுக்குறதுல தப்பே இல்லை... என்ன திடீர்னு அவங்க முதல்ல யோசிக்கலாம். நாளைக்கு அவங்களே நம்ம நல்ல மனசை புரிஞ்சுக்கிட்டு ஒன்னு மண்ணா ஆகிடுவாங்க.

நாளைக்கு நாம இருப்போமான்னு , யாருக்கு தெரியும்....! இருக்கிறவரை நேசிப்போம்... இயற்கையை நேசிப்போம்...! கடைலே சரக்கு வாங்க்கிட்டு ஒரு பிளாஸ்டிக் கேரி பாக் வாங்காம , கையிலே சுமந்துக்கிட்டு போனா, நீங்க ஒரு மரத்தை வளர்த்ததுக்கு சமம். நீங்க தூக்கிப் போடப்போற அந்த பை , ஒரு மரத்தை வளர விடாம தடுக்குதாம்....!

அரசாங்கம் திம்மக்காவுக்கு மாசம் ஐநூறு ரூபாய் தான் கொடுக்குதாம்..! என்ன கொடுமை இது சரவணானு  கேட்குறீங்களா?


இந்த அளவுக்காவது நம்ம அரசாங்கம் இருக்குதேன்னு நினைச்சிக்கோங்க....
சுதந்திரம் வாங்குன புதுசுல, நம்ம நாட்டை பத்தி யோசிக்க ஆளுங்க இருந்தாங்க... இப்போ நாம வளரும் வல்லரசாமே ... இப்போ எப்படி நாட்டை பத்தி யோசிக்க..? நாடு வளர்ந்துருச்சு....நாம வளருவோம்..! நல்லா சம்பாதிப்போம்...! நம்மளை பத்தி யோசிப்போம்.... நாம சந்தோசமா இருப்போம்... இப்படித்தான் நாம தேர்ந்தெடுக்கிற தலைவர்கள் இருக்கிறாங்க...!

நாம எங்கே இருக்கிறோம்...? தேடுவோம்... முதல்ல நாம யாரு? எதுக்கு வந்து இருக்கிறோம் னு உணருவோம்...!

ஒரு மரம் கூட நூறு பேருக்கு உதவுது சார்...! ஒரு பசு மாடு எவ்வளோ பேருக்கு பால் கொடுக்குது. நாம வெறுமனே நம்ம குடும்பத்தை மட்டும் பார்த்துக்கிட்டு சாம்பல் ஆகவா, மண்ணோட மக்கிப் போகவா இறைவன் அனுப்பிச்சு இருக்கார்..? நம்ம கடமை என்ன? கண்டுபிடிப்போம்...... அட்லீஸ்ட் இந்த ஜென்மத்திலாவது....

வெறும் கிரிக்கெட்டும், சினிமாவும், நாலு விஷயம் தெரிஞ்ச மாதிரி கித்தாப்ப்பா பேசுறதும்நம்ம வாழ்க்கை இல்லை.  அதை தாண்டி ஒரு அபூர்வ வரம் நம்ம வாழ்க்கை. நம்ம அப்பா , அம்மா ஒரு நிமிஷம் யோசிச்சு இருந்தா நம்ம பிறப்பு இல்லை. பிறந்தபிறகும், அவங்க பாட்டுக்கு நம்மளை கண்டுக்காம இருந்து இருந்தா பசியிலே செத்துப் போயிருந்து இருப்போம். சுத்தி இருக்கிற நம்ம சமூகம், யுத்த பூமியா இருந்து இருந்தா, நம்மளையும் விதைச்சு இருந்து இருப்பாங்க.... போதும், போதும், நீ அங்க ஆத்துன கடமைன்னு அந்த இறைவன் நினைச்சு இருந்தா... நாமளும் காகமா இருந்து நம்ம புள்ளைங்க சாப்பாடு போடாதான்னு கா.. கான்னு கத்திக்கிடுத் தான் இருக்கணும்.... நமது ஒவ்வொரு நாள் வாழ்க்கையும், அவன் நமக்கு இட்ட வரம்.... அர்த்தத்துடன் வாழ்வோம்.....!

Survival  of  the  fittest ....... நாம் சாதிக்க பிறந்தவர்கள் , நிச்சயம் சாதிப்போம்..... தலைமுறை தலைமுறை தாண்டி நம் வாழ்வு ஒரு வரலாறாக நிலைக்க வேண்டும்.....!


சார், என்ன மரம் வளர்க்கலாம்.....? வேம்பு - கருணை பெருகும். உடல் ஆரோக்கியம் வளர்க்கும். புளிய மரம் - செல்வம் பெருகும். ஆல மரம் புகழ் வளரும். அரசமரம் உங்களை ஆள வைக்கும். வாழை உங்கள் சந்ததியை மகிழ்ச்சியில் வைக்கும். துளசி செடி உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைக்க வைக்கும். மா , பலா , பூச் செடிகள்  உங்கள் குடும்ப ஒற்றுமையை நிலைக்க செய்யும். இதைவிட முக்கியம். நமக்கு அளவான, ஆரோக்கியமான உணவு அவசியம். நம் உடல் வளர்க்க. கொஞ்ச நேரமாவது உடல் பயிற்சி, நம்ம வாடகை எடுத்துக்கிட்டு இருக்கிற இந்த உடம்புல உசிரு நிக்க.


நம்ம தாத்தா பாட்டி எல்லாம் ஒழுங்கா செஞ்சாங்க.... நாமதான் கண்டுக்காமே விட்டுட்டோம்...... !


நண்பர்களோட ஒரு பியர் அடிக்குற நேரத்துக்கு, நாம நம்ம லைப் பத்தி யோசிச்சா , நம்ம வாழ்க்கை மேல ஒரு காதல் வரும். ....


போதைல இருக்கிற காலமும், குழந்தைப் பருவமும் ஒன்னு. நாம எல்லாருக்கும் காட்சிப்பொருள்....நாம மத்தவங்களை சந்தோசப்படுத்துவோம். அழவைப்போம். அழுவோம். கவுந்து தூங்குவோம்... நமக்குத்தான் உணர முடியாது. இப்படியே சின்னப் புள்ளைத்தனமா எம்புட்டு காலம் வளர்றது?


எல்லா நேரத்திலேயும், நாம எக்கேடு கேட்டு கிடந்தாலும், நம்மளை நேசிக்கிற ஒரு ஜீவன் அன்னை. எல்லோருக்கும் அந்த அன்னை அரவணைப்பு கிடைக்குமா? சந்தேகம் தான்... ஒன்னும் பிரச்னை இல்லை... நாமே அன்னை ஆகிவிடுவோம்...! நேசமும், பாசமும் நம் கண்களிலும் வழியட்டும்....! அடிமனதில் இருந்து தொடங்கி இதழ்களில் தெரியட்டும், நம் புன்னகையும், இன்சொல்லும்.



கட்டுரையை படித்த பிறகு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் தன்யனாவேன். மற்றவர்களுக்கு பரப்புங்கள் என்கிற வேண்டுகோள் இல்லை. உங்கள் உள்ளே புகுந்து ஒரு விதையை தூவ முயற்சித்த பிரயாசை இந்த கட்டுரை...! 

No comments:

Post a Comment