Sunday 4 March 2012

அய்யோ, கரப்பான் பூச்சி !!!



                     அவ்வளவு எளிதில் சாகமுடியாத சாகாத இதன் உடலமைப்பே அப்படிப்பட்டது .மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியில் தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உயிர் வாழ்ந்து வரும் இனம். டினோசார் காலத்துக்கு முன்பிருந்தே பூமியில் ஏற்ப்பட்ட மாறுதல்களை நிதானமாக பார்த்து ரசித்த பூச்சி இது.

                      பூமியில் இருபது கோடி ஆண்டுக்கு முன்பு நிலவிய கடும் உறைபனியிலும் ,தற்போது 45 டிகிரி  கொளுத்தும் வெயிலிலும் சமாளித்து தப்பிப் பிழைத்து வாழ்ந்து வருகிறது. ஒருமாதம் வரையிலும் உணவில்லாமல் உயிர் வாழக் கூடியது. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. இதனுடைய மீசைகள் ஆண்டெனாக்கள். வாசனை, உணவு, பகை என அனைத்தையும் அவற்றின் மூலம் உணரும். நாலாயிரம் மிகச்சிறிய லென்சுகள் உள்ள இதன் கூட்டுக் கண்  விழிகளை எந்தத் திசையிலும் இதனால் திரும்பிப் பார்க்க முடியும்.கரப்பானின் வயிற்றிலும் கூட பற்கள் போன்ற அரவை உறுப்புகள் உள்ளன.

                பெண் பூச்சிகள் தன் வாழ்நாள் முழுக்க முட்டை போட்டபடியே இருப்பதால், இவை வெகு விரைவிலேயே  பல்கிப்பெருகி வாழ்கின்றன. சீனாவில் கரப்பான் பூச்சிகளைத் தூய்மையான சூழலில் வளர்த்து, உணவாக வறுவல் செய்து சத்துணவாக உண்கிறார்கள். நமக்கு உவ்வே !!!. சீனாவில் ஆஹா!          மனிதனும், பெரும்பாலான உயிரினங்களும் தலையில்லாமல்  உயிர் வாழ முடியாது. நாம் மூக்கு வழியாகச் சுவாசிக்கும் காற்றில் இருந்து ஆக்ஸிஜன் தனிப்பட்டு  ரத்தத்துடன் கலந்து செல்களுக்கு சென்று உயிர் தருவதால்,தலையை வெட்டினால்,சுவாசிக்க,சாப்பிட இயலாது. மூளைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு உடலின் பிற பகுதிகள் இயங்காது. உடலில் ஓடும் இரத்தம் அழுத்தம் அதிகம் உள்ளதால், அதிக இரத்தம் வெளியேறும். இதயம் நின்றுவிடும். ஆனால், இதற்கு எந்தப் பிரச்சனையுமில்லை. இதன் உடல் பல துண்டுகளாகப் பிரிந்து, அவற்றின் ஓரங்களில் ஸ்பைரகில்ஸ்  எனும் சிறுசிறு துவாரங்கள் இருக்கும்.அவற்றின் வழியே கரப்பான் சுவாசிக்கும். ஆக்ஸிஜன் நேரடியாக இதன் திசுக்களில் கலந்துவிடும்.

                   இவை குளிர் ரத்த உயிரிகள். வெப்ப ரத்த உயிரிகள் போல நிறைய உணவு, நீர் தேவையில்லை. ஒரு முறை சிறிது உண்டாலே, பல மாதங்கள் உணவு தேவைப்படாது. இதற்கு நம்மளவு ரத்த அழுத்தம் கிடையாது. இதன் ரத்தத்தில்  ஹீமோகுளோபின் இல்லை. அதனால் இதன் வெண்ணிற இரத்தம், தலை துண்டித்தாலும், அதிகமாக வெளியேறாது. தலை இழந்து, உண்ணாமல் இயற்கையாக இறப்பதற்கு பல மாதங்கள் ஆகும். ஆனால், அதிகம் அசைய முடியாமல் ஒரே இடத்தில கிடக்கும். இதைப் பிற பூச்சிகள், கோழி, எலி, பூனை விழுங்கினால் மட்டுமே இறக்கும்.இதன் நீண்ட நேர்த்தியான,அசைந்து கொண்டே இருக்கும் இரண்டு மெல்லிய மீசைகள் இவற்றின் உணர்வு உறுப்புக்கள். கைகளும்,காதுகளும்,மூக்கும் இவையே! பல்நோக்கு உறுப்பு!                            
                            இந்த மீசைகள் மூலமாக கரப்பான் பூச்சிகள் அதிக உழைப்பின்றி உணவு இருக்கும் இடங்களை கண்டுபிடித்துவிடும். சுவர் விரிசல்களில், கை கழுவும் பீங்கானில் ,பாத்திரம் தேய்க்கும் தொட்டியில் ஒளிந்திருக்கும். இவற்றின் உணர்வு மீசைகள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பது இதனால்தான்!  

                    உணவு,உணவு என்று கூறுவது என்ன?  இரவில்தான் பெரும்பாலும் இவை உலவும். பகலில் சாமான்,பெட்டி,பாய்,பீரோ இவற்றின் பொருட்களும்,காகிதம்,புத்தகம்,செருப்பு,தோல் பொருட்கள்,மூட்டுப் பூச்சி,இறந்து கிடக்கும் பிற பூச்சிகள் என அனைத்தையும் கடித்து,அரித்து,அரைத்துத் தின்று விழுங்கினாலும், மாவுப் பொருளும், இனிப்பும் இதற்கு மிகவும் பிடிக்கும். மாவு ஆலை, ரொட்டி தயாரிப்பிடங்களில் அதிகம் காணப்படும். இது உண்பதைவிட, கெடுத்து எச்சம் இட்டு  அழுக்காக்கி, பாழாக்குவதே அதிகம். பல இன கரப்பானுக்கு அருவருப்பான நாற்றம் உண்டு. இதன் நாற்றம் அருகில் உள்ளவர்களையும் பற்றிக்கொள்ளும்.நாம் தொட்டால் , நம் கையும் நாறும். மட்டுமின்றி கரப்பான் பூச்சிகள், காச நோய், காலரா,குஷ்டம்,வயிற்றுப் போக்கு, டைபாயிடு போன்ற நோய்களைப் பரப்புவதற்கு துணையாயிருக்கிறது. கக்கலாத்தி எனவும் அழைக்கப்படும் இவை வீடுகளில் தொல்லை கொடுக்கும் அருவருப்பான தீங்குயிரி. இதில் சுமார் 1,600 இனங்கள் உள்ளன.  

  பெரும்பாலான பூச்சிகள்போல கரப்பானுக்கும் ஆறு கால்கள் உள்ளன.  ஆண் பூச்சிகள் சற்று பெரிய சிறகுகளுடன், இரண்டு சிறிய சிறகு உறைகளும் பெற்றுள்ளன.  இவையே பறக்கக்கூடியவை.  பறப்பவை ஆண்.  பறக்காதவை பெண். பெண் பூச்சிகளுக்கு சிறகுகள் இல்லாததால் பறக்காது.  இவற்றின் உடலில் முனைப்பகுதியல் முட்டைப்பையைப் பெற்றிருக்கின்றன.  அந்தப்பை, பளபளப்பாக, சிவப்பாக இருக்கும்.  சிறு பணப்பை போன்ற அமைப்பில் இரண்டு அறைகளுடன் இருக்கும் இதன் ஒவ்வொரு அறையிலும் எட்டு எட்டு முட்டைகளை இடும்.  வெதுவெதுப்பான இடங்களில் ஒய்வு பெறச் செல்லும்போது,  தமது முட்டைப்பைகளை கழற்றிப் பாதுகாப்பான இடங்களில் வைக்கும்.  அலட்சியமாக ஒதுக்காது.  அந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் பூச்சிகள், முழு வளர்ச்சியடைந்த கரப்பான்போலவே தோற்றமளிக்கும்.  சிறிதாக, வெண்மையாக காணப்படும் இவை வளரும்போது பலமுறை தோலுரிக்கும்.  ஏழுமுறை தோலுரித்த பிறகு பெரிய பூச்சிகளாகும்.  உரிக்கப்பட்ட கரப்பான் தோல்களை வீடுகளில் பல இடங்களில் பார்க்கலாம்.  பழுப்பு நிறத்தில் இருக்கும்.  கோயில்களின் இருட்டு மூலைகளில் விபூதிக் குடுவைகளில் இதன் முட்டைகள் கலந்துவிடுவதுண்டு.  கரப்பான் பூச்சிக்கு உண்மையான தாடைகளும், உறுதியான பற்களும் உள்ளதால், துணி, புத்தகங்களை அழிக்கின்றன.  பல நூல் நிலையங்களை கரையானோடு சேர்ந்து இவை அழித்துள்ளதாகப் பதிவுகள் உள்ளன.  இவை அழிக்கும் துணிகள் விலை மதிப்புள்ளவை.  பட்டுப்புடவைகள் இவற்றின் முக்கிய இலக்கு.  அதனால் தானோ பெண்கள் கரப்பானிடம் பயப்படுகிறார்கள்

  நமது உடல் நலனைக் கருதி, பொருள்கள் பாழாவதைத் தவிர்க்க, இவற்றின் முட்டைகளைக் கண்டால் நசுக்கி அழித்துவிடுவது நல்லது.  சமையல் அறைகளில், சேமிக்கும் இருட்டு அறைகளில் இவை எளிதில் சென்றால், மின்னல் வேகத்தில் தப்பி ஓடி ஒழியும்.  திருப்பிப் போட்டாலும் பல மணி நேரம் துடித்துக்கொண்டு பழையபடி தப்பித்துவிடும்.  இதன் உடல் தலை, மார்பு, வயிறு என மூன்று பிரிவுகளால் ஆனது.    ரத்த உடற்க்குழி கொண்டது.  இதன் உடல் தோல் கைட்டின் என்ற கொம்புப் பொருளால் ஆனது.  கால்கள் நீண்டவை.  வலிமையானவை. சுணை முடி கொண்டவை.  துறைமுகங்களில் அதிகம் காணப்படுகின்றன.  அங்கிருந்து உள்நாடுகளிலும், உலகம் முழுவதிலும் பரவுகின்றன.  வீட்டிற்கு வெளியே கற்களுக்கு கீழும், உதிர்ந்த இலைச் சருகு, மடிந்த மரம், மரப்பட்டை அடியிலும் வாழ்கின்றன.  பழுப்பு நிறக் கரப்பான் பெரிப்ளானடா அமெரிக்னா. சில சிறிய வகை கரப்பான் பிளடேல்லா ஜெர்மானிகா, கிழக்கிந்திய கருங்கரப்பான் பிளாட்டா ஒரியண்டாலிஸ்.

  கரப்பான் ஒழிப்பதற்கு வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.  இவை மிகுந்திருக்கும் இடத்தில் குலோர்டேன், டீ.டீ.டி, சோடியம் புளோரைடு, சோடியம் புளுவோ சிளிகடே, தையோசைநெட், பைரித்திரம் போன்ற பல பூச்சிக்கொல்லி விஷமருந்துகள் தெளிப்பார்கள்.  சுண்ணாம்புக்கட்டி போல வெள்ளை நிற மருந்துக் கட்டியால் இவற்றைச் சுற்றி கோடு கிழித்தால், அவை அந்த வாடை பட்டு இறந்து விடுகின்றன.  இவையெல்லாம் விஷப்பொருள்கள் என்பதால் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இப்போதைய பூச்சிகளில் மிகவும் பழமையான பூச்சி கரப்பான்.  இதன் உடல் அமைப்பு எளிமையானது.  மிகப் பழமையான, டைனோசர் காலத்துக்கு முந்தைய புதைபடிவங்களில் இதன் படிமம் இருந்துள்ளது.  பூகம்பம் ஏற்படுவதை முன்னதாகவே அறிந்து ஒளிந்துகொண்டு தப்பிக்கும் திறன் கொண்டது.  சுனாமி, பூகம்பம், வெள்ளம், வறட்சி ஏற்பட்டு பூமியில் சிலபகுதிகள் அழியும்போதும், அங்கு வாழும் கரப்பான் பூச்சிகள் இவற்றால் பாதிப்பு அடையாமல் தப்பித்துவிடுகின்றன.  வீடு, பள்ளி, தொழிலகம், பொது இடங்களில் சுத்தமும் சுகாதாரமும் பராமரித்து, கரப்பான் பெருகாமல், உணவுப் பொருள்கள் மீது கரப்பான் படாமல் விழிப்புடன் இருப்பது அவசியம்.  பெருகியபின் தவிப்பதை விட வராமல் தடுப்பதே சிறப்பு……….   

No comments:

Post a Comment