Friday 2 March 2012

பூர்வ ஜென்மம் ....




         “பூர்வ ஜென்மம்னு ஒன்னு இருக்கு. அதோட நல்லது கெட்டது பொறுத்துத்தான் நம்ம வாழ்க்கை அமையும்ங்கிறது மட்டும் , என்னாலே மனப் பூர்வமா ஒத்துக்க முடியலை. எங்க மதமும் அதை வலியுறுத்துவதில்லை. கொஞ்சம் எனக்குப் புரியும்படி விளக்க முடியுமா?”
காஞ்சிப் பெரியவரிடம்  வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பக்தர் இந்த கேள்வியைக் கேட்டாராம்.


நம்மிலும் நிறைய பேருக்கு அந்த கேள்வி இருக்கும். ஒரு சிலர் மட்டும் ஓஹோன்னு இருக்கிறப்போ, நமக்கு ஏன் அந்த மாதிரி அமைவதில்லை என்று. நம் முயற்சியால் முன்னுக்கு வருவது ஒரு புறம். அதிர்ஷ்டம், வாய்ப்பு என்று இருப்பது நமக்கு மட்டும் ஏன் அமைய மறுக்கிறது
 சரி, இங்கேபெரியவர் என்ன சொன்னாரு பார்ப்போம்.


பெரியவர் தனக்கு அருகில் இருந்த இன்னொரு வெளி நாட்டு அன்பரை அழைத்து, மடத்துக்கு அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அவரை கொஞ்சம் அழைத்துப் போய்விட்டு அங்கு என்ன நடக்கிறது என்று கவனித்து வரும்படி சொல்லி அனுப்பி இருக்கிறார். அது ஒரு பிரசவ ஆஸ்பத்திரி.


இருவரும் சென்று வந்த பிறகு, தன்னிடம் கேள்வி கேட்ட அன்பரைப் பார்த்து கேட்டாராம். அங்கு பிறந்த பச்சிளம் குழந்தைகளைப் பார்த்தீர்களா? அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள் ? ஒரு குழந்தை ஆரோக்கியமாக பிறக்கிறது. இன்னொன்று தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கும் நிலையில் இருக்கிறது. ஒன்று மிக அழகாக , இன்னொன்று சுமாராக. ஒரு குழந்தை, நல்ல வசதி படைத்த பெற்றோர்களுக்கு பிறக்கிறது. இன்னொன்று மருந்து கூட வாங்க முடியாத ஏழைக்குப் பிறக்கிறது.
பிறந்த உடனேயே தாயை இழந்து தவிக்கும் சில குழந்தைகளும் இருக்கிறது. சில குழந்தைகளை வளர்க்க முடியாமல் தத்து கொடுக்கும் சூழல் ஏற்படுகிறது.  இது போக எவ்வளவோ சொத்து சுகம் இருந்தும், கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லையேன்னு ஏங்கித் தவிக்கிறவங்க எவ்வளவோ பேர்...
இப்படி, எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள்....  பூர்வ ஜென்ம, அவரவர் வினைப்பயனுக்கேற்ப - அவர்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக , ஒரு குழந்தை பிறக்கும்போதே ஆரம்பித்து விடுகிறது.


நீங்க சொல்றபடி, இறந்தபின் அவனது எல்லா பாவங்களையும் இறைவன் மன்னித்து விடுகிறான் என்று இருந்தால், எல்லா குழந்தைகளையும் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் அல்லவா இறைவன் அனுப்பி இருக்க வேண்டும்...
அந்த அன்பர் இந்த கருத்தை ஒத்துக் கொண்டாராம்.


போன ஜென்மத்தில் எப்படி இருந்தோமோ, தெரியாது. ஆனா, இந்த ஜென்மம் நம்ம கையிலே தான் இருக்குது. நல்லது பண்ணுவோம். நாம நல்லவனா மாறுறது, நம்ம சந்ததிக்கே நல்லது.. நாம நல்லவனா இருந்தா மட்டும் போதாது, நம்ம குழந்தைகளை , பேரன் பேத்தியை அந்த வழிக்கு இட்டுச் செல்லும் பெரிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.


எது தப்பு என்று நமக்குத் தெரியும். நம் மனதுக்கு தெரியும். சமூகத்தின் பார்வைக்குப் படாமல் , யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு நாம் செய்யும் தவறுகள், நமக்கோ , நம் குழந்தைகளுக்கோ எதோ ஒரு ரூபத்தில் பலத்த சம்மட்டி அடியாக விழும். ....


ராமாயணம், மகாபாரதம், திருவிளையாடல் புராணம் என்று நம் குழந்தைப் பருவத்தில் நமக்கு கிடைத்தவை எல்லாம், வருங்கால சந்ததிக்கும் கிடைக்க வேண்டாமா? TV சீரியல்களையும், கார்ட்டூன்களையும் மட்டும் பார்த்துக் கொண்டு ஒரு சந்ததி வெகு வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.
இதைப் போல நம் தாத்தா , பாட்டி நம்மை கவனித்து இருந்து இருந்தால் -  ஒழுக்கம், நற்பண்புகள் என்பதே நம் தலை முறைக்கே கிடைத்து இருக்குமா என்பது சந்தேகம் தான்.  மேற்கத்திய பாணியில் - வன்முறை தலைவிரித்து ஆடவிருக்கும் எதிர்கால வாழ்க்கை நம் கண்முன்னே இருக்கிறது. வெகு வேகமாக நெருங்கி விட்டோம்.




ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி அல்லது அதற்க்கு மறுநாள் என்று , குலதெய்வத்துக்கு இரவு முழுக்க பூஜை செய்வார்கள், எங்கள் கிராமத்தில். ஊரே அவரவர் குலதெய்வம் இருக்கும் கோவில்களில்தான் இருக்கும். குறைந்தது, வீட்டிற்கு ஒருவராவது நிச்சயம் செல்வார்கள்.
நான் சிறுவனாக இருக்கும் பொழுதுவிடிய விடிய கண் முழித்து - பூஜையை பார்த்ததுண்டு. ஒவ்வொரு ஜாம பூஜை முடிவிலும், பிரசாதம் கொடுப்பார்கள். நிறைய கூட்டம் இருக்கும். வெளியூரில் , வெளி நாட்டில் இருந்து கூட சரியாக அந்த நாளில் குலதெய்வ தரிசனம் செய்ய வந்து விடுவார்கள்.


அது ஒரு மரியாதை. இந்த நிலைமையில் சந்தோசமாக வைத்து இருக்கிறாரே என்பதற்காக , அல்லது இந்த கஷ்டம் வந்து இருக்கிறது - நிலைமை சீக்கிரம் சரியாக்கு என்பதற்காக  - இப்படி பல கோரிக்கைகள். அந்த தினம் வந்து , தரிசனம் முடித்து சென்று விட்டால் - அந்த வருடம் முழுக்க , ஏதாவது பெரும் சங்கடங்கள் , ஆபத்துக்கள் வராமல் - துக்க நிகழ்ச்சி ஏதும் நிகழாமலும், மங்கல காரியங்கள் தொடர்ந்து நடக்கவும் - குலதெய்வம் கருணை புரிவது மிக மிக முக்கியம். பரம்பரை, பரம்பரையாக தாத்தன், முப்பாட்டன் காலத்திலிருந்து  
வணங்கப்பட்ட தெய்வத்தை, நாம் வணங்குவது எப்பேர்ப்பட்ட அரிய விஷயம்.


இந்த சிவ ராத்திரிக்கு எங்கள் குலதெய்வத்தை வணங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கூட்டம் முன்னைக்கு கணிசமாக குறைந்து இருந்தது தெளிவாகத் தெரிந்தது. வந்து இருந்தவர்களிடமும், முக்கால்வாசிப் பேர் இரவு முழுக்க தூங்கிக் கொண்டுதான் இருந்தனர். கையோடு போர்வை எடுத்து வந்து இருந்தனர். குழந்தைகள் தூங்கினால் சரி. பெரியவர்களும் செய்தால்...? முழித்து இருந்தவர்களில் பெரும்பாலும் வயது முதியவர்கள். கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் என்னைப் பார்த்தனர். எம்புட்டு பாவம் செஞ்சு இருக்கானோ - இவ்வளவு பக்தியா சாமி கும்பிடுறானேன்னு என்னைப் பத்தி நினைச்சு இருப்பாங்களோ, தெரியலை... ஒருவேளை, எனக்கும் வயசு ஆகிடுச்சோ ..?


ஒருவேளை, புராணங்கள் , கடவுள் எல்லாம் வெறும் கேலிக்கூத்து சமாச்சாரங்கள் என்று நம் மனது நினைக்கத் தொடங்கி விட்டதோ....
இல்லை கடவுள் அருள் இல்லாமலேயே , நம் வாழ்க்கையில் நாம் தொடர்ந்து போராடுவோம் என்கிற நம்பிக்கை அதிகமாகிவிட்டதோ தெரியவில்லை.


 சரி, பூர்வ ஜென்மம் பற்றி - கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள பிரியப்படுகிறேன். பொறுமையாக படித்துப் பாருங்கள். 

===============================================================


 பூர்வ ஜென்மம் என்று ஒன்று உண்டா? பூர்வஜென்மத்தில் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்தில் நாம் நன்மைத்தீமைகளை அனுபவிக்கிறோம் என்பது உண்மையா?”

ஜென்மங்கள் பற்றிய விஷயத்தில் கடவுளுக்குச் சம்பந்தம் என்ன?”
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதிலைக் கூறுமுன் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பராமாசாரிய சுவாமிகள் எழுதியுள்ள ஒரு சிறு நூலிலிருந்து விஷயங்களை வைக்கிறேன்.

கடவுளை நோக்கிச் செய்கின்ற பிரார்த்தனை அல்லது வேண்டுகோள் பலனுடையதாக இருக்குமா? அப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா? அப்படி இருப்பார் என்றால், நமக்கும் அவருக்கும் எவ்விதத்தொடர்பும் இருக்கின்றதாகத் தெரியவில்லையே! அவ்வித மூட நம்பிக்கை நமது நாடைவிட்டுப்போனாலன்றிநம் நாடு முன்னேற முடியாது என்று சொல்கின்ற பலர், ஆலய வழிபாட்டிலும், வீட்டு வழிபாட்டிலும் தலை சிறந்த நமது தமிழகத்திலேயே உற்பத்தியாகி இருக்கிறார்கள். இவை வெளி நாடுகளிலிருந்து விதைத்த விதைகளால் ஏற்பட்டவை. இப்படிப்பட்ட கேள்விகளையும் இதற்கு மேலதிகமான கேள்விகளையும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கேட்டு, அவர்களுக்கெல்லாம் பல நியாயங்களும் நிரூபணங்களும் கொடுத்து ஒத்துக்கொள்ளுமாறு நமது அருளாளர்களும் ரிஷிகளும் செய்து, அவற்றைப் பின் சந்ததியார்கள் யாவரும் உணர்ந்து கொள்ளுமாறு ஏடுகளில் எழுதியும் உதவியிருக்கிறார்கள். அந்த உண்மைகளை நாம் திருவருளால் கண்டுணர்ந்து இன்று வெற்றிமுரசு கொட்டி கையாண்டு வருகிறோம்.

அவ்வாறு கேட்கின்ற ஒருவரிடம்,நாம் முதலாவதாக ஒரு கேள்வி கேட்கிறோம்; “நீ இந்த உலகத்தில் பிறந்து, நன்றாக உண்டு வளர்ந்து, இவ்வாறு பேசுவதற்கு மூல காரணம் உன்னுடைய அப்பாவும் அம்மாவும்தான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா?” என்பதே அந்தக் கேள்வி. ஆம்என்று ஒப்புக் கொண்டால் மட்டும் மேற்கொண்டு பேசுவோம்.

மனிதனான எவனும் ஒப்புக்கொள்ளாதிருக்க முடியாது. உன்னை உன்னுடைய அம்மாதானே பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டித்தாலாட்டி உணவு கொடுத்து வளர்த்து வந்தாள்? அப்படியிருக்க நீ யாருடைய குழந்தைஎன்று கேட்டால், ‘நீ ஏன் அம்மாவின் பெயரைச் சொல்லாமல் அப்பாவின் பெயரைச் சொல்லி, அவருடைய மகன் என்று சொல்கிறாயேஎன்று கேட்போம். உன்னைப்பெற்றெடுத்து உனது தாயார்தான் என்பதே அவள் சொல்லித்தான் தெரியுமே தவிர, நீ அறியாதிருக்க, தகப்பனார் பெயரை உன் தாயார் சொன்னதைக் கேட்டுத் தானே ஒப்புக்கொண்டு சொல்லிவருகிறாய்?” என்போம். ஆம்என்று சொல்லாமல் தீராது.

தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பானார் யார் என்று தெரியாத நிலையிலிருந்தால், தாயார் விலாசத்தைப் போட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை., தாயார் பெயரைச்சொல்லாத்தும், தகப்பனார் பெயரைச் சொல்லாத்தும் உலக முழுவதிலும் நடைபெறுவதாகும். அதற்குமூல காரணம் ஒன்று உண்டு. அதாவது, ஒரு விளைநிலம் ஒருவனுக்குச் சொந்தமாக இருக்க, அதில் உழவு செய்து வித்திட அவனுக்குத்தான் அந்த நிலத்தில் விளைந்து வந்த பயிர் சொந்தமாகும். அதுபோல் மனைவி, கணவனுடைய உடைமை, வித்திட்டவனும் கணவன், ஆகவே, கணவனது உடைமையாக மனைவியிடத்தில் உற்பத்தியான குழந்தைகள் சொந்தத் தந்தையின் குழந்தைகளாகின்றன.

அதனாலேயே பெண்களெல்லாம் கற்புடையவர்களாக இருக்க வேண்டுமென்பது உலக நீதி.

இரண்டாவது கேள்வி: உனக்குக்கல்யாணமாகியிருக்கிறதா?” என்பதாகும். ஆம்என்பான். பிள்ளைகள் இருக்கின்றனவா” ‘ஆம், இருக்கின்றனர்!’ “நீயும் உன் மனைவியும் விரும்பிய வண்ணம் குழந்தைகள் பிறந்தனவா?” ‘இல்லவே இல்லைஎன்பான்.

நேருஜிக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் ஆண் குழந்தைகள் கிடையாது என்பதும், பல பெரிய பணக்காரர்களுக்கும்,பதவியில் உள்ளவர்களுக்கும், சில வைத்திய நிபுணர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் குழந்தையே கிடையாது என்பதும், யாவரும் அறிந்த உண்மையாகும்.

அதற்கும் உண்மையான காரணம் உண்டு. அது எந்த மனிதனும் தனது விருப்பம்போல் ஆண் மகவுக்குரிய வித்தையோ, பெண் மகவுக்குரிய வித்தையோ உற்பத்தி செய்து உண்டாக்கிக் கொள்ள முடியாததேயாகும். அந்த வித்தை, எல்லாம் வல்ல கடவுள் கொடுத்துத்தான் எந்தத் தந்தையும் பெறவேண்டியிருகிறது. கடவுள் கொடுக்கத் தந்தை பெற்று, தாயார் அதனைப் பெற்றதன் காரணத்தினாலேயே தாய் தந்தையரைப் பெற்றவர்கள்அல்லது பெற்றோர்கள்என்று சொல்லுகின்றோம்.

இந்த உண்மையை உணர்ந்த அருளாளர்கள், தந்தை இரண்டு மாதம் தங்குகின்ற நாற்றங்காலாகவும், தாயாரைப் பத்து மாதம் வளர்கின்ற விளைநிலமாகவும், இரண்டையும் உடையவர்கள் கடவுளே என்றும், அவற்றில் வித்திட்டவரும் கடவுளே என்றும் கண்டு, ஆண்டனே உலகத்தில் பிறந்திருக்கிற எல்லா மனிதர்களுக்கும் எல்லா பிறவிகளுக்கும் உண்மையான அம்மையப்பன் ஆகின்றான் என்றும் அருளியிருக்கின்றார்கள்.

இந்துக்கள், கடவுளை அம்மையே அப்பாஎன்றும், ‘எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவருக்கும் தந்தை தாய் தம்பிரான்என்றும், கிறிஸ்தவர்கள் நாமெல்லாம் பரமண்டலத்திலிருக்கின்ற பிதாவினது குழந்தைகளேஎன்றும்; இஸ்லாமியர்கள் கடவுளே மனிதர்களைப் படைத்தார்என்றும் கூறி வருகிறார்கள். யாரும் உயிர்களைக் கடவுள் படைத்ததாகச் சொல்லவில்லை.

மூன்றாவது கேள்வி: உனக்கு ஒரு பெயரிடப்பெற்றிருக்கிறதல்லவா? அந்தப் பெயர் கண்ணுக்குத் தெரியாத உயிருக்கு இடப்பட்டதா? கண்ணுக்குத் தெரிகின்ற பாரமுள்ள உடலுக்கு இடப்பட்டதா?அல்லது வேறொரு பாரமில்லாத உன் உடலுக்கு இடப்பட்டதா? எப்பொழுது இடப்பட்டது? யாரால் இடப்பட்டது?” என்று கேட்போம். நான் பிறந்த பின்தான் பெயரிட்டிருக்கிறார்கள்; ஆணா பெண்ணா என்று பார்த்து என் பெற்றோர்கள்தான் பெயரிட்டிருக்கிறார்கள்.என்றுதான் எவரும் சொல்வர்.

ஆனால் உண்மையில் மனிதராகப் பிறந்திருக்கிற எவருக்கும் பெயரிட்டவர் கடவுளே யாவர். ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச்செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப்பிராமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச்செலுத்தி, முன்னரேயே அத்தகைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு சுருக்கெழுத்துப் போன்ற இரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரக நிலையில் பிறக்க வேண்டுமென்று கடவுளே தீர்மானித்து, அதன்படி பிறக்கச் செய்து, அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்பம் துன்பம் அனுபவித்து  வருமாறும் ஆட்சி புரிந்து வருகிறார். அந்தப்பெயரும் சொப்பனத்தில் பாரமுள்ள உடலின் உதவியின்றி, இன்பம் துன்பம் அனுபவிக்கின்ற, பாரமில்லாத உள்ளுடலுக்கே இட்டிருக்கிறார்.

இந்த அரிய பெரிய பேருண்மையை முதல் முறையாகக் கேட்கின்ற அனைவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஒருவேளை, நமக்கு மூளைக்குகோளாறாக இருக்கலாமோ என்றுகூட ஆத்திரக்கார்ர்கள் நினைக்கக் கூடும். நாம் இதனுடைய உண்மையைச் சோதித்து உணருவதற்காக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்த பின் இவ்விதம் கூறுகின்றோம்.

திருவள்ளுவர்:

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

என்றும்,

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றும் கூறியிருப்பதனால், நாம் கூறும் இந்த உண்மையைச் சோதித்துப்பார்த்தபின், அதைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே தவிர, கேட்ட மாத்திரத்தில் யாரும் எதையும் மறுத்தால் அது அறிவுடைமையாகாது.

பெயர்களைக்குறித்துக் கிறிஸ்துவ வேத நூலில் பிரசங்கி ஆகம்ம், அதிகாரம் 6, வசனம் 10 - ல் இருக்கின்றவன் எவனும் தோன்று முன்னமே பெயரிடப்பெற்றிருக்கிறான். அவன் மனுஷன் என்பது தெரிந்திருக்கிறதுஎன்றும், இரேகை சாஸ்திரத்தைக் குறித்து யோபு ஆகமம் , அதிகாரம் 37, வசனம் 7-ல் தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படி, அவர் சகல மனுஷருடைய கையையும் அறியும்படி, முத்தரித்துப் போடுகிறார்என்றும் கூறியிருக்கிறது.

உதாரணமாக நாகர்கோவில் ஸ்ரீ ஆறுமுக நாவலரது நாடி சாஸ்திர ஏட்டில், அவருடைய பெயரை ஐந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டி என்று கண்டிருந்தது. ஐந்து +ஒன்று +ஆறு; வதன் என்றால் முகம்; ஆறுமுகம் என்பது ஆண்டவன் இட்ட பெயர்.

ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவ அன்பருக்கு, ‘சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் இவன் தன் நாமம் என்று கண்டிருந்தது. என்று எழுத்து வரிசையில் ஆறாவது எழுது சூ’; ஒன்பதாவது எழுது சைஅவரது தந்தை இட்ட பெரும் சூசைஎன்பதாகும். ஆண்டவன் கொடுத்த பெயரும் சூசை என்பதாகும்.

ஓர் இந்துவைப்போல் மாறுவேடம்  போட்டுக்கொண்டு சென்ற, மதுரையிலுள்ள இஸ்லாமியருக்கு அப்துல் ரஹ்மான்என்று பெயர் கூறப் பெற்றிருக்கிறது.

ஓர் ஆங்கிலேயர் பார்த்தபொழுது, ‘முழத்தில் பாதி இவன் தன் நாமம்என்றிருந்தது. அவரது பெயர் ஜான்என்பதாகும். கோவையில் கௌமார மடதை நிறுவிய தலைவருக்கு இராமக் குட்டிஎன்றும், பின் துறவு பூண்டு இராமானந்தர்ஆவார் என்றும் கண்டிருந்தது. இவற்றின் உண்மைகளை, சென்னை அரசாங்கத்தார் கை ரேகைகள் சம்பந்தமாக, ‘சபதரிஷி நாடியின் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்து பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கௌசிகர் நாடி, சீவக-சிந்தாமணி, அநாகத வேம் முதலிய பிற இரேகை சாஸ்திரங்களும் இருக்கின்றன.

கடவுள் கொடுத்திருக்கும் அவ்விதத் தீர்ப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்குக் காரணம், அவரவர் சுய அறிவுக்கு  முன் பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளில் ஏற்பட்ட வேற்றுமைகளே தவிர, கடவுளது பட்சபாதமுள்ள செயலால் அல்ல என்பதற்குரிய நிரூபணங்களும், இரேகை சாஸ்திர , ஏடுகளில் காணப்பெறுகின்றன.
கடவுள் கொடுக்கிற நியாயத் தீர்ப்பில் தவறு ஏதும் இருக்க முடியாது.

மதுரை ஆதீன கர்த்தர் மேற்கூறிய கருத்துப்படி, நம்முடைய பிறப்பும், நமக்குப் பெயரிடப்படுவதும், நமது வளர்ப்பும், முற்பிறவியும் மறுபிறவியும் ஆக எல்லாமுமே இறைவன் கையில்தான் இருக்கின்றன.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோஎன்றும் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள்.

முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை.
முதல் இடை கடைநமது வசத்திலில்லை

என்றான் மகாகவி பாரதி.

எந்தத்தாயின் வயிற்றில்,எந்த நேரம் நாம் பிறக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன பெயர் சூட்டப்படும்  என்பதையும் இறைவன் குறிக்கிறான்.

பின்னாளில், நாம் வைத்துக்கொள்கிற புனைப் பெயரைக்கூட இறைவனே குறித்திருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.

உதாரணமாக,
என் பெற்றோர் எனக்கிட்ட பெயர் முத்தையா.

இது வைத்தீசுவரன் கோவில் சுவாமியின் பெயர்.

அந்த சுவாமி எங்கள் குலதெய்வம்.

என் சகோதரருக்கு மறுபெயர் முத்துக்குமரன்.

என் பெயரை மாற்றி ஒருபுனைபெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியபோது கண்ணதாசன்என்று பெயர் எனக்கேன் தோன்றிற்று?

அப்போது பாரதிதாசன், சக்திதாசன், கம்பதாசன் என்றெல்லாம் பலர் இருந்ததால் அதுமாதிரி ஒரு பெயரை வைத்துக்கொள்ள விரும்பினேன்.

உண்மைதான்.

காலங்களால் அந்தப் பெயர் பொருத்தமாகிவிட்டது.

கண்ணனும் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை!

நானும் எட்டாவது குழந்தை.

கண்ணனை வணங்கத் தொடங்கிய நாளில் இருந்து எனக்கு அமைதியும் ஞானமும் வரத் தொடங்கின.

சரியாகத் தேடிப் பார்த்தால் ஏதாவது ஒருநாடி சாஸ்திரத்தில் இதை நான் காணக்கூடும்.

பூர்வ ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன் என்பதும் தெரியக்கூடும்
நாடி சாஸ்திரம் அதையும் சொல்கிறது என்கிறார் ஆதீனகர்த்தா.

உதாரணமாக,

எகிப்து தேசத்தில் முன் பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே, இன்று திருநெல்வேலி ஜில்லாவில் சிங்கப் பட்டி ஜமீன்தாராகப் பிறந்திருக்கிறார்என்றுஅநாகத வேதம்என்று நாடி சாஸ்திரத்தல் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

அதில்,முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும் குறிப்பிடப் பெற்று அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய வியாதி பூரணமாகக்  குணமாகி விட்டதாம்.

ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறதும் என்னும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.

பதவீம் பூர்வ புண்ணியானால்என்பது வடமொழி சுலோகம்.

மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்என்பதும், தமிழ் மூதுரை.

முற்பிறப்பின் பகரும்  வினைகளே  அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.

அலகாபாத்தில் செல்வந்தர் மகனாக் பிறந்தவர் பரத கண்டத்தில் பிரதம மந்திரியானதும், சேரிவாழ் மக்களிடையே பிறந்தவர் பாதுகாப்பு மந்திரியானதும், மராட்டியக் குடிமகன் ஒருவர் நிதி மந்திரியானதும், காஞ்சியிலும் திருவாரூரிலும் நடுத்தரக் குடம்பத்தில் பிறந்தவர்கள் முதல் மந்திரிகளானாதும் அவர்களூடைய திறமையினாலா? முயற்சியினாலா?

எட்டாம் வகுப்பை எட்டிப் பார்க்காத ஓர் ஏழை தமிழகத்தின் தலைவனாகி, ஆயிரம் பள்ளிக் கூடங்கள் கட்டி நூற்றுக்குத்தொண்ணூறு பேரை படிக்க வைத்தது எப்படி முடிந்தது.?

இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்

என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன?

ஒவ்வொரு உயிரின் வாழ்வும் தாழ்வும், வறுமையும் வளமும், நோயும் சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனில் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன? முற்றி முதிர்ந்த ஞானம் இவற்றை அடையாளம் கண்டு கொள்கிறது.

முயற்சியால் ஆக்க்கூடிய திருவும், தெய்வத்தின் இயக்கத்தால் கிடைப்பதே.

ஆண்டவனில் ஆகக்கூடி யாரும் தப்ப முடியாது.

ஒருதலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது நாத்திகம் பேசியதால் வந்ததுஎன்றார்கள்.

ஆத்திகம் பேசிய ரமணருக்கு ஏன் வந்தது?

சிலருக்கு பொடி போட்டதால் வந்தது என்றார்கள்.

பொடி போடாதவர்களுக்கு ஏன் வந்தது?

புகையிலை உபயோகிப்பதால் வருகிறதுஎன்கிறார்கள் மருத்துவர்கள்.

அதை உபயோகிக்காதவர்களுக்கு ஏன் வருகிறது?

ஆத்திகராக இருந்ததால், ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்.

நாத்திகர்களும் நீண்ட நாட்கள் வாழ என்ன காரணம்?
அளவோடு சாப்பிடுகிறவர்கள் அதிக நாள் வாழலாம் என்கிறார்கள்.

அளவின்றிச்சாப்பிடுவோரும் வாழ்வதற்கு என்ன காரணம்?

இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத்தவிர வேறு என்ன காரணம்?

எந்தக கணக்கைக்கொண்டு தெய்வம் வழங்குகிறது?

ஒவ்வொரு பிறவியின் கணக்கைக் கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.

நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆகவே, நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

நாம் பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும், அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்புடைத்து

என்றான் வள்ளுவன்.

ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பாகவே, நம்மவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த பிறப்பு என்பது நம்முடைய ஆசையின் படியே விளைய இறைவன் அனுமதிப்பானானால், அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்து, இந்தப் பிறவியில் என்னிடம் நன்றியோடு நடந்தவர்களுக்கெல்லாம், அந்த நன்றியைத் திரும்பிச்செலுத்த விரும்புகிறேன்


ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்.
=================================================

No comments:

Post a Comment