Friday 18 November 2011

அறுபத்துமூன்று நாயன்மார் வரலாறு - அப்பூதியடிகளார்.

       சோழநாட்டில் திங்களூர் என்னும் பதியில் தோன்றியவர் அப்பூதியடிகள். சிவனாரிடத்து பேரன்புடையவர். பெருந்தவத்தினர். இவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். திருநாவுக்கரசு நாயனாரிடம் இவருக்கிருந்த பற்று ஈடு இணையற்றது. அதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 
               காமம், குரோதம் முதலிய குற்றங்களில்லாதவர். தமது குடும்பத்தாருடன் இல்லறத்தை நல்லறமாய் நடத்துபவர். 
               இவர் தமது வீட்டிற்கும் , வீட்டில் உள்ள பொருட்களுக்கும், தாம் நடத்தி வந்த கல்விச்சாலை, தண்ணீர்ப்பந்தல் ஏன், தமது பிள்ளைகளுக்கும் கூட திருநாவுக்கரசு என்றே பெயரிட்டு அழைத்து வந்தார். நாள் முழுவதும் நாவுக்கரசர் பெயரை ஒரு மந்திரமாகவே அவர் சொல்லி வந்தார்.
                திருநாவுக்கரசரின் அருட்தொண்டை இவர் அறிவாரேயன்றி அவருடைய முகத்தை இவர் ஒருமுறை கூட பார்த்ததே இல்லை. 
                திருநாவுக்கரசருக்கு ஒருமுறை திங்களூரின்  வழியே செல்ல வேண்டியிருந்தது. அது கோடை வெப்பம்  உச்சத்தில் இருந்த ஒரு நாள். மிகுந்த தாகவறட்சியுற்ற நாவுக்கரசர், அருகிலிருந்த தண்ணீர்ப் பந்தலுக்குச் சென்றார். பந்தலின் முகப்பில் தன்னுடைய பெயரில் அறிவிப்புப் பலகையைக் கண்டார். தம்பெயரில் மேலும் பல அறச்சாலைகள் இருப்பதைக் கண்டு பெரிதும் வியப்படைந்தார். 
               அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் அவ்வூரில் அப்பூதியடிகள் என்றொரு தொண்டர் இருப்பதையும் , அவர் தாம் திருநாவுக்கரசரிடம் கொண்ட பற்றின் காரணமாக தமது சாலை, குளம், சோலை என தமக்குரிய அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்ற பெயரை சூட்டியிருப்பது தெரிய வந்தது.
             அடிகளின் வீடு இருக்கும் இடத்தைக் கேட்டுக்கொண்டு அங்கே சென்றார் திருநாவுக்கரசர். தன் வீட்டு வாயிலில் ஒரு சிவனடியார் வந்திருப்பதைக் கண்ட அப்பூதியடிகள், வெளியே வந்து அவரை வணங்கினார். வந்திருப்பது திருநாவுக்கரசர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. 
             திருநாவுக்கரசர் அடிகளிடம், ''யாம் திருப்பழனம் என்னும் பதியில் இறைவனை தரிசித்துத்  திரும்பிக்கொண்டிருக்கிறோம். உம்முடைய அரச்செயல்களைக் கண்டு வியப்படைந்து உம்மைக்கான வந்தோம். அது சரி , நீர் உம்முடைய பெயரில் அறச்சாலைகள் அமைக்காமல் வேறொரு பெயரில் அமைக்கக் காரணம் யாது?'' என்றார். 
           அதைக்  கேட்ட அப்பூதியடிகள் நிதானம் இழந்தவராய், ''நீவீர் நல்ல மொழிகளைக் கூறவில்லை. பல்லவ மன்னன் சமணர்களுடன் சேர்ந்து செய்த பாதகச்செயல்களை முறியடித்து, சிவநெறியில் சிறந்து நிற்கும் ஒருவருடைய பெயரையே  வேறொரு பெயர் என்கிறீர்? திருத்தொண்டின் மூலம் இம்மையிலேயே மேன்மையடைய முடியும் என்பதை, என்போன்றோருக்கு உணர்த்திய ஒருவருடைய பெயரையா வேறொரு பெயர் என்றீர்? உம்முடைய வார்த்தை என்னை வருத்தமடையச் செய்கிறது... சிவனடியார் வேடம் பூண்ட நீர் யார்?'' என்றார்.
            பண்பில் சிறந்த அப்பூதியடிகளின் பக்தியையும் பெருமையும் உணர்ந்த நாவுக்கரசர், ''சமணப்படுகுழியில் இருந்து மீட்டெடுக்க சிவபெருமானால் சூலைநோய் தந்து ஆளப்பெற்ற தெளிவுணர்வில்லாத  சிறுமையோன் யான்'' என்றார். 
           அதனைக்கேட்ட  அப்பூதியடிகளார், சிரம்மீது  கரம்குவித்து அருவியெனக்  கண்ணீர் பெருக்கினார். அவருக்கு வார்த்தை குழறிற்று; மேனி சிலிர்த்திற்று. அப்படியே பெருமானின் கால்களில் விழுந்து விட்டார். 
           திருநாவுக்கரசர் தாமும் அவரை எதிர் வணங்கி , அவரைத் தமது கரங்களால் எழுப்பிக்கொண்டார்.  அப்பூதியடிகள் அருள்நிதியம் பெற்ற வறியவரைப் போல , ஆடிப்பாடி ஆரவாரம் கொண்டார். அந்த ஈடுஇணையற்ற பரமானந்த நிலையை பெரியபுராணம் இப்படிக் கூறும்................
                             
                                   ''மற்றவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்தருள 
                                    அற்றவர்கள் அருள் நிதியம் பெற்றாற்போல் அருமறையோர்
                                    முற்றவுலங் களிகூர முன்னின்று கூத்தாடி
                                    உற்ற விருப்புடன் சூழ ஓடினார், பாடினார்''     -   என்று. 
    
          திருநாவுக்கரசரின் வருகையைத்  தனது மனைவி மக்களுக்கு எடுத்துரைத்து, பாத பூசை செய்தார். மேலும் அவரை விருந்துண்ணும் படி வேண்டினார். அவருக்காக அறுசுவை உணவு சமைக்கப் பட்டன. 
          அப்பூதியடிகள் தனது புதல்வர்களுள் மூத்த திருநாவுக்கரசரைக் கூப்பிட்டு, தோட்டத்தில் வாழைக்குருத்து அரிந்து வரும்படிக் கூறினார். மூத்த திருநாவுக்கரசும் வாழைக் குருத்து அரிய தோட்டத்துக்கு விரைந்தார். அப்போது ஒரு பாம்பானது அவனின் கைகளில் தீண்டியது. 
           பாம்பின் விஷம் தலைக்கேறும் முன் அரிந்த வாழைக்குருத்தை பெற்றோரிடம் தர ஓடிவந்தான். திருநாவுக்கரசர் விருந்துன்பதர்க்கு இடையூராகிவிடும்படி நான் இதனை யாரிடமும் சொல்லமாட்டேன் என்று தீர்மானித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். 
           பாம்பின் விஷம் தலைக்கேறி உயிர்விடும் நிலை வரவும், வாழைக்குருத்தை  தன் தாயிடம் தந்து விட்டு நிலத்தில் சரிந்தான். மகனின் உடலில் உள்ள அடையாளத்தைக் கண்டு அவன் பாம்பினால் தீண்டப்பட்டான். என்றறிந்த பெற்றோர், இதனால் நாவுக்கரசர் விருந்துண்ண இடையூறு ஏற்படுமென அஞ்சி பிள்ளையின் உடலை ஒரு பாயில் சுற்றி மறைத்து வைத்தனர். 
          அப்போது தனது தொழுகையை முடித்துவிட்டு வந்த திருநாவுக்கரசரை, துக்கத்தை தமது உள்ளத்தில் புதைத்துக்கொண்டு, ''வாருங்கள் திருவமுது செய்யலாம்'' என்றழைத்தார்  அப்பூதியடிகள். 
          அப்போது திருநீறு அணிந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளுக்கும் அவரது மனைவிக்கும் தந்தருளினார். பிள்ளைகளுக்கும் திருநீறு தர வேண்டி, அவர்களை அழைக்கக் கூறினார். 
           அப்பூதியடிகள் என்ன சொல்வது என்றறியாது திகைத்தார். அவரும் அவரது மனைவியும் ஒருவரையொருவர்  பார்த்து துக்கத்தின் உச்சிக்கே சென்றனர். வாழ்வில் எந்தவொரு மனிதனுக்கும் அப்படியொரு இக்கட்டான சூழ்நிலை வந்திருக்க முடியாது. 
           அவர் ஒருவாறு நிதானித்துக்கொண்டு, ''அவன் இப்போது இங்கு உதவான்'' என்றார். அச்சொல்லை கேட்டு உள்ளளவில் தடுமாற்றமடைந்த திருநாவுக்கரசர், ''மெய் விரித்துரையும்'' என்றார். தனது மகனை இழந்த வருத்தமும், தனது தெய்வம் விருந்துண்ண முடியாமல் போனதே என்ற வருத்தமும் சேர்ந்து மிகுந்த இக்கட்டிற்க்குள்ளான அப்பூதியடிகள், தமது கண்கள் அருவியாகி, நிகழ்ந்ததைக்  கூறினார். 
             அதைக் கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானவராய், திருநாவுக்கரசர், ''நீர் கூறுவது நன்றாய் உள்ளது. உலகில்  யாரேனும் இப்படி செய்வார்களா? '' எனக்கூறி அம்மகனை உயிர்ப்பிக்க , சிவபெருமான் திருவருள் வேண்டி பதிகம் பாடினார்.

                                   ''ஒன்று கொலாமவர் சிந்தையுயர்வரை 
                                    ஒன்று கொலாமுயரும் மதிசூடுவர் 
                                    ஒன்று கொலாமிடு வெண்டலைகையது 
                                    ஒன்று கொலாமவர் ஊர்வதுதானே'- (தேவாரம்) 

             மூத்த திருநாவுக்கரசர் அக்கணமே உயிர் பெற்று எழுந்தார். அப்பர் சுவாமிகள் அவருக்கு திருநீறு கொடுத்தார். 
             அந்த நிகழ்வால் சுவாமிகள் அமுது கொள்வதற்கு இடையூறு நேர்ந்தது என்று அப்பூதியாரும் அவரது மனைவியும் வருந்தினர். உடனே திருநாவுக்கரசர் உணவு கொள்வதற்காக அவரது வீட்டிற்குத் திரும்பினார். பின்னர் அவரோடு அப்பூதியாரும் அவர் தம் பிள்ளைகளும் சேர்ந்து விருந்துண்டனர். 
             அதன்பின் திருநாவுக்கரசர் திங்களூரில் சில நாட்கள் தங்கியிருந்து விடைபெற்றார். அப்பூதியடிகளின் திருத்திண்டின் பெருமையை நாவுக்கரசரே பதிகம் பாடி சிறப்பித்திருக்கிறார். 
             திருநாவுக்கரசரின் திருவடிகளையே தமது வாழ்வில் முதன்மையாகக் கொண்டவர் அப்பூதியடிகள். அதுவே அம்பலத்தாடும் பெருமானை அடையும் வழியாகவும் அவர் கொண்டிருந்தார். 

No comments:

Post a Comment