Saturday 19 November 2011

ஏழிசையாய் இசைப்பயனாய் வாழ்ந்த எம்.கே. தியாகராஜ பாகவதர்


 


உலகில் இன்பம் (சிம்மேஉன்னதமான இசை என்பது புராண காலத்திலிருந்து மிகவும் போற்றப்பட்டு வந்த ஒரு கலை. இசை என்பது குரலிசையாகவும் இசைக் கருவியின் மூலம் வரும் இசை என இரு வகையாகப் பிரிக்கப்பட்டு ரசித்து வரப்பட்டன. இந்த கால கட்டத்தில் தெய்வ ஆராதனையாக பாடலுடன் ஆடலும் சேர்ந்து பரிமளிக்கத் தொடங்கியது. தமிழிசை வளர்வதற்கும், அந்த இசைபால் ஓர்  ஈர்ப்பு வருவதற்கும் முக்கிய காரணமாக சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்கள் தான் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் என்ற நால்வர். இவர்களை அடுத்து ராமலிங்க ஸ்வாமிகள், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தஞ்சை பொன்னய்யா, தஞ்சை வடிவேலு, இலக்குமணப்பிள்ளை, பாபநாசம் சிவன் போன்ற பலர் தமிழிசை வளர்ச்சிக்கு உதவியவர்கள். இந்த இசை மேதைகள் தஞ்சை தரணி பெற்றெடுத்த விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள். இதே தஞ்சை தரணியில் பிற மொழியில் பாடல்கள் இயற்றி இருந்தாலும் சாகாவரம் பெற்ற தியாகய்யர், சாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் போன்றோரும். செம்மங்குடி சீனிவாச ஐயர், மஹாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி, மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி சிப்ரமண்ய ஐயர், துறையூர் ராஜகோபால சர்மா, மன்னர் குடி நரசிம்ம ஐயங்கார், மாதிரிமங்கலம் நடேசஐயர், டி.என்.ராஜரத்தினம்பிள்ளை, மாயவரம் கிருஷ்ணய்யர், ஸ்ரீ வாஞ்சியம்மணி ஐயர், முடி கொண்டாள் வெங்கடராம ஐயர் கோனேரி ராஜபுரம் வைத்தயநாதஐயர், வழூவூர் ராமையாபிள்ளை, மணக்கால் ரங்கராஜன், கே.பி. சுந்தராம்பாள், என்.சி.வசந்த கோகிலம், சரித்திர நாவல்களுக்கு பெயர்போன கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல மேதைகள் உதித்த புண்ணயபூமி தஞ்சை தரணி. நாடகம், சினிமா, சாஸ்திரிய சங்கீதம் என்ற மூன்று துறையிலும் மகோன்னதமாக விளங்கிய எம்.கே. தியாகராஜபாகவதர் உதித்ததும் தஞ்சை தரணியில்தான். இசை நாடகப் பேரொளி, திரைஉலகின் ஏக சக்ராதிபதி, சங்கீத கலா சாகரம், கந்தர்வகானரத்ன ஏழிசை மன்னர் என்ற பல பட்டப் பெயர்களுடன் சரிரம், சாரிரம் இரண்டுமே பொன்போன்று அமைந்து, உலா வந்த அந்த மாபெரும் இசை மேதையைப் பற்றி கூறுமுன், 1920 நூற்றாண்டுகளில் கலை வளர்ந்த விபரம் அறிவோம்.

கி.பி. 1798-ல் தஞ்சையை ஆண்ட இரண்டாவது சரபோஜி மன்னர்தான் தஞ்சை பெரிய கோவில் விழாக் காலங்களில் ஆண்டு தோறும் நாடகம், நாட்டிய நாடகம் நடக்க பெரிதும் உதவியவர் என்று சரித்திரம் கூறுகிறது. பக்திரசமான புராணக்கதைகளுக்கு வீரம் செரிந்த கதைகளும் நாடகங்களுக்கு கருவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. நாட்டியத்தை சதிர்கச்சேரி என்று அழைக்கப்பட்ட காலம் அது.

20 வது நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடக்தின் முன்னோடியாக இருந்தது தெருக்கூத்துகள். பக்திரசம் கொண்ட தெருக்கூத்துக்கள் மக்களிடையே கடவுள் பக்தி, தேசப்பக்தி, ராஜசேவை இவைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. இருந்தாலும் அந்த கால கட்டத்தில் நாடக நடிகர்களை கூத்தாடிகள் என்றும் இந்த தொழில் ஒரு இழிவான தொழில் என்ற நிலையும் இருந்ததை மறுப்பதற்கில்லை.

நடிகர்களுக்கு சமுதாயத்தில் ஒரு கௌரவத்தையும் மதிப்பையும் பெற்றுத்தந்த முதல் கலைஞர் திரு.தியாகராஜ பாகவதர்தான் என்று சொன்னால் மிகையாகாது. அந்த கால கட்டத்தில் பல நாடக் கம்பெனிகள் குறிப்பாக மதுரைபாலமீன ரஞ்சனி சங்கீத சபா, ஸ்ரீ பால சண்முகாநந்த சபா, கன்னையர் கம்பெனி, நவாப் ராஜமாணிக்கத்தின் மதுரை ஸ்ரீ தேவி பால விநோத சபா, ஸ்ரீ ராம பால கான விநோத சபா, எஃப்.ஜி.நடேச ஐயரின் திருச்சி ரசிக ரஞ்சனி சபா போன்ற கம்பெனிகள் பிரபலமடைந்ததும் அல்லாமல் பல மகோன்னத கலைஞர்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள், டி.கே.எஸ்.சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன், காளிரத்னம், கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், கே.பி.காமாட்சி, பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ராமசந்திரன், எஸ்.வி.சகஸ்வரநாமம், எம்.வி.மணி. தியாகராஜ பாகவதர், போன்றவர்களை கலை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். டி.சந்தர்ராவ் பரமேஸ்வர ஐயர், டி.வி.ராமகிருஷ்ணன், ரங்கசாமி ஐயங்கார், கே.எஸ். அனந்தநாராயண ஐயர் போன்றோர் பெண் வேடமிட்டு நடித்த கலைஞர்கள்.

சாகாவரம் பெற்றுவிட்ட இசை சக்கரவர்த்தி திரு.தியாகராஜ பாகவதர் அவர்களின் பங்கு நாடக, சினிமா, சாஸ்திரிய சங்கீத உலகில் எப்படி போற்றப்பட்டது  என்பதையும் பொருள் செரிந்த அவருடைய பாடல்களைப் பற்றியும் சற்று ஆராய்வோம்.

சித்திரம், சிற்பம், மாட மாளிகைகள், நிர்மாணம், போன்ற புராண  இதிகாசங்களிருந்து மிகப் பிரபலமான சிற்பிகள் ஸ்பதிகள் உதித்த மகோன்னதமான விஸ்வகர்மா குலத்தில் உதித்த திலகம் தான் திரு. தியாகராஜ பாகவதர். தேவலோகத்தில் பல மாட மாளிகைகளை நிர்மாணித்த் விஸ்வகர்மா.

பூலோகத்திலும் அதிலும் தென்னிந்தியாவில் விஸ்வகர்மா குல ஸ்பதிகளும் சிற்பிகளும் நிர்மாணம் செய்த கலை நயம் படைத்த ஆலயங்கள் எண்ணிலடங்கா, கலைக்கென்று பிரசித்தி பெற்ற ஒரு ஒப்பற்ற குலமாம் விஸ்வகர்மாகுலம் அதன் திலகமாக 1.3.1910 அன்று ஷராப்பு கடை கிருஷ்ணமூர்த்தி ஆசாரியின் மூத்த புதல்வராக உதித்தவர் திரு. தியாகராஜ பாகவதர் அவர்கள். அவர் பிறந்த போது அவருடைய குடும்பத்திற்கு ஏழ்மையான சூழ்நிலை. பிறவியிலேயே தியாகராஜ பாகவதர் கேட்போர் மதிமயங்கும் அபார குரலினிமை வரப்பிரஸாதமாக அமைந்து லட்சமிகடாஷம் இல்லையென்றாலும் கலைத்தாயின் பரிபூர்ண ஆசியும் அனுக்ரஹமும் தியாகராஜனக்கு இருந்தது. சிறு வயதில் சில காலம் மாயவரத்தில் இருந்து விட்டு பெற்ற தாயின் ஊரான தஞ்சைக்கு தியாகராஜனின் குடும்பம் குடிபெயர்ந்தது. தியாகராஜனின் பாட்டனார் திரு. முத்துவீர ஆசாரிக்கு திருச்சி பாலகரையில் ஒரு சிறிய ஓட்டு வீடு இருந்தமையால் தியாகராஜனின் குடும்பம் நிரந்தரமாக திருச்சிக்கு குடிபெயர்ந்தது. நகைகளுக்கு நகாசு செய்யும் தொழில் நடத்தி வந்தார் திரு.கிருஷ்ணமூர்த்தி. சிறுவயதில் தியாகராஜன் அதி அற்புதமாக பாடினாலும் அவருடைய தந்தையார் தியாகராஜனை சங்கீத உலகிற்கு அனுப்ப விரும்பவில்லை. காரணம் அப்போது சங்கீத்தில் பெரிய மதிப்பும் இருந்ததில்லை வருமானமும் இருந்ததில்லை. இதன் விளைவாக தியாகராஜன் படிப்பதற்கு திருச்சி பாலக்கரையில் உள்ள பழைய ஜபமாதா கோவில் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். சங்கீதத்தில் இருந்த ஆர்வம் தியாராஜனுக்கு படிப்பில் இல்லை. பள்ளி சென்று வந்ததும் நகைக்கடையில் வேலை. இந்த சூழல் தியாகராஜனுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. தந்தை இல்லாத போது நகைக்கடையில் பாட ஆரம்பித்து விடுவான் தியாகராஜன். தெருவில் போவோர் வருவோரெல்லாம் தியாகராஜனுடைய தேவ கானத்தில் மயங்கி நின்று விடுவார்கள்.

தந்தைக்கு தியாகராஜன் பாடியது பிடித்தது தான் இருந்துதென்றாலும், வாழ்க்கைக்கு அது ஒவ்வாத விஷயமாகபட்டது அவருக்கு. பள்ளிக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு பலமுறை உய்யக்கொண்டான் ஆற்றில் இறங்கி பாட ஆரம்பித்து விடுவார் தியாகராஜன்.. உய்யக்கொண்டான் ஆற்றில் கரையிலிருக்கும் குழுமியானந்த சுவாமிகள் மடத்திற்குப் போவதையும சுவாமிகளை தரிசிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் தியாகராஜன். இதனால் தானோ என்னவோ பிற்காலத்தில் வாழ்க்கையை வெறுத்து ஏறத்தாழ சித்தராகவே விளங்கினார் பாகவதர்.

சிறுவயதில் தியாகராஜனின் சங்கீத ஆர்வம்  அதிகமாக அதிகமாகத்  தந்தையின் கெடுபிடியும் அதிகமாக இருந்தது. விளைவு ஒரு நாள் தியாகராஜன் வீட்டை விட்டே போய் விட்டார். துடித்துப்போன பெற்றோர்கள் தியாகராஜரை தேடாத இடமில்லை. கடைசியில் ஒரு நண்பர் மூலமாக கடப்பாவில் தியாகராஜரைப் பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார் தியாகராஜரின் தகப்பனார். தியாகராஜர் கடப்பாவில் இருந்த காலத்தில் அவன் பாடிய பாட்டுக்கள் தேவகானமாக இருந்து மக்களை மெய்மறக்கச் செய்திருந்தன. கடப்பாவிலிருந்து திரும்பும் போது திருப்பதி சென்று ஏழுமலையான் தரிசனமும் செய்து விட்டு வீடு திரும்பினர் தந்தையும் மகனும். இனியும் தியாகராஜனின் சங்கீதத்திற்கு அணைபோட்டு உபயோகமில்லை என்றறிந்த தியாகராஜரின் தந்தை தியாகரஜரின் விருப்பப்படியே நடந்து கொண்டார். அந்த காலகட்டத்தில் தியாகராஜன் கலந்து கொள்ளாத பஜனை கோஷ்டியே திருச்சியில் இல்லை. ஒரு சமயம் தியாகராஜனின் பாட்டை நேரில் கேட்ட திரு.நடேச ஐயர் தியாகராஜன் தன் நாடக கம்பெனியில் பால பார்ட் நடிகனாக நடிக்க தியாகராஜனின் தந்தையின் அனுமதியுடன் சேர்த்துக் கொண்டார்.
                 10 வயது பாலகனாக மேடையில் தோன்றி சிறுத்தொண்டன் நாடகத்தில் சீறானனாகவும், ஹரிச்சந்திராவில் லோகிதாசனாகவும் நடித்துப் பாடி ஜனங்களின் ஏகோபித் பாராட்டுக்களையும் வரவேற்பையும் தியாகராஜன் அடைந்தான். இந்த வெற்றி, தியாகராஜனை ஊக்கு வித்து திருவாரூர் சென்று நாடக உத்திகைளை அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்ற நடராஜ வாத்தியார் நரசிம்ம ஐயங்கார், சூசையாபிள்ளை போன்றவர்களிடம் கற்க உதவியது இந்த காலகட்டத்தில் திருவையாற்றிற்கு அடிக்கடி போய் சங்கீத வித்வான்களின் கர்நாடக சங்கீதத்தை கேட்டு தனக்கும் அப்பேர்பட்ட பயிற்சி வேண்டும் என நினைத்தார் தியாகராஜர். தியாகராஜரின் பாடல் சிறப்பினை நாடகம் மூலம் அறிந்திருந்த மதுரை பொன்னு ஐயங்கார் என்ற பிடில்வித்வான் இலவசமாக தியாகராஜருக்கு சாஸ்த்ரிய சங்கீத பயிற்சி சுமார் ஆறு ஆண்டுகாலம் அளித்தார். தியாகராஜர் தனது 16ம் வயதில் திருச்சி பெரிய கம்மாளத் தெருவில் உள்ள காளி கோவிலில் மதுரை பொன்னு ஐயங்கார் பிடில்வாசிக்க அபிநவநந்திகேஷ்வரர் தட்சாணா மூர்த்திபிள்ளை கஞ்சிரா வாசிக்க தட்சிணாமூர்த்தி ஆசாரி மிருதங்கம் வாசிக்க கச்சேரி செய்தார். 3 மணிநேரம் கானமழை பொழிந்தார். கட்டுக்கடங்காத கூட்டம். தியாகராஜர் சாஹித்யத்தை கவனித்தவிதம் சாஹித்ய கர்த்தாவின் மனோநிலையை அறிந்து பாடர்களின் பொருளுணர்ந்து பாடிய பாங்கு ஆலாபனை, சுரப்பிர யோகம் கூடியிருந்த ஜனங்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரி முடிந்ததும் தட்சிணமூர்த்தி பிள்ளை அவர்கள் "தியாகராஜர் கர்நாடக இசைக்கு முருகன் அளித்த வரப்பிரசாதம் இதுவரை நான் பலகச்சேரிகள் கேட்டிருக்கிறேன். இது மாதிரி ஒரு அற்புதமான கச்சேரி நான் இது வரை கேட்டதில்லை. இன்று முதல் இந்தப்பிள்ளை வெறும் தியாகராஜன் அல்ல தியாகராஜ பாகவதர்" என்று கூறினார்.
                                                                                                                          (தொடரும் )

பெயர்:  எம்.கே.தியாகராஜ பாகவதர்
பிறந்த தேதி:  01.03.1910.
பிறந்த இடம்:  மாயவரம்
தந்தை :  கிருஷ்ணமூர்த்தி
தாய் :  மாணிக்கத்தம்மாள்
சகோதரிகள்:  அமிர்தவல்லி, புஷ்பவல்லி, பங்கஜவல்லி
சகோதரர்கள்:  எம்.கே.கோவிந்தராஜ பாகவதர், எம்.கே.சண்முகம்
மனைவி:  கமலாம்பாள்
மகள்கள்:  சுசீலா, சரோஜா
மகன்:  ரவீந்திரன்
முதல் நாடகம்:  அரிச்சந்திரா
வேடம்:  லோகி தாசன்
முதல்படம்:  பவளக்கொடி
கடைசிப் படம்:  சிவகாமி
மொத்தப் படங்கள்:  14 படங்கள்
மறைவு:  01.11.1959.
                                                                                                                       

No comments:

Post a Comment