Tuesday 22 November 2011

கங்கையில் குளித்தால் பாவம் போகுமா? போகாதா?


இறைவனும் இறைவியும் ஒரு நாள் வான வீதியில் போகும்போது, காசிக்கு மேலே போக வேண்டியதா இருந்துச்சு. காசியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து குளிக்கிறதை பார்த்த பார்வதி தேவி, பரமசிவன் கிட்டே, "சுவாமி... இங்கே பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து தினமும் பாவம் போகும்னு நம்பி குளிக்கிறாங்க. அப்படியிருக்க இவங்கள்ல நிறைய பேர் இறந்த பிறகு நரகத்துக்கு வர்றமாதிரி எனக்கு தெரியுதே... இவங்க பாவமெல்லாம் போன மாதிரி தெரியலியே... மக்களை இப்படி நாம ஏமாற்றலாமா? இது நியாயமா?" என்று கேட்கிறார்.


அதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த இறைவன், "தேவி... இங்கே வந்து போறவங்க நிறைய பேர் உண்மையில் கங்கையில் ஸ்நானம் பண்றது இல்லே. அவங்க தங்களோட உடம்பை தண்ணியில நனைக்கிறாங்க. அவ்ளோ தான்."

 


"புரியலையே சுவாமி...!"


"கொஞ்ச பொறு... நான் உனக்கு விளக்குகிறேன்" என்று கூறி, பார்வதியை அழைத்துக்கொண்டு காசி படித்துறை அருகே வந்தார் ஈசன். இருவரும் ஒரு முதிய தம்பதி போன்ற வேடத்துக்கு மாறினார்.


கங்கையில் நீராடிவிட்டு வரும் வழியில் உள்ள பாதை ஓரத்தில் உள்ள பெரிய சாக்கடை நீர் நிரம்பிய ஒரு குழியை காட்டி இறைவன், "தேவி... நான் கீழே காணப்படும் அந்த படுகுழியில் விழுந்துவிடுகிறேன். நீ கூச்சல் போட்டு நான் சொல்வது போல சொல்லி எல்லோரையும் உதவிக்கு கூப்பிடு...!" என்கிறார்.


உடனே உமா தேவியும் அப்படியே "ஐயோ காப்பாற்றுங்கள். ஐயோ காப்பாற்றுங்கள்.... என் கணவர் இந்த குழியில் விழுந்துவிட்டார்..." என்று அபயக்குரல் எழுப்பினார்.


வயதான மூதாட்டியின் கூக்குரலை கேட்டு அநேகர் ஓடி வந்தனர்.


"ஐயா... என் கணவர் தள்ளாடியபடி நடந்து வரும்போது இந்த குழியில் விழுந்துவிட்டார் ஐயா. யாராவது இறங்கி சென்று அவரை காப்பாற்றுங்களேன்..." என்று அழுதபடி கெஞ்சுகிறார்.


"என்ன இது இப்போ தானே கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தோம். போயும் போயும் இந்த சாக்கடை குழியில் இறங்குவதா?" என்று முகம் சுளித்த படி பலர் சென்றுவிட்டனர்.


இன்னும் சிலர், இரக்கப்பட்டு வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றனர்.


மனசாட்சியுள்ள ஓரிருவர் உதவ முன்வந்தனர். அவர்கள் குழியில் இறங்க எத்தனித்த போது, பார்வதி அவர்களிடம், "நில்லுங்கள. பாபங்களே செய்யாதவர்கள் தான் என் கணவரை காப்பாற்ற வேண்டும். உங்களில் எவருக்கு உங்கள் ஜென்ம கணக்கில் பாவங்கள் இல்லையோ அவர்கள் மட்டுமே இறங்குங்கள்!" என்று கூற, அனைவரும் "எங்கள் கணக்கில் பாவங்கள் இல்லாமலா? வாய்ப்பேயில்லை. நாங்கள் நிறைய பாவங்கள் செய்திருக்கிறோம். மன்னித்து கொள்ளுங்கள் தாயே" என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.


இப்படியே பொழுது கழிந்துகொண்டிருக்க, காசியில் நீராடிவிட்டு வந்த எவராலும் உதவ முடியவில்லை.


கடைசீயில் ஒரு இளைஞன் வந்தான். அவன் மூதாட்டி (பார்வதி) கூறியதை கேட்டபிறகும் துணிவுடன் இறங்கினான். "நில்லுப்பா. நான் சொன்னதை கேட்டாய் அல்லவா?" உன்கணக்கில் பாவமே இல்லையா?"

"ஆம் தாயே. நேற்றுவரை என் கணக்கில் அனேக பாவங்கள் இருந்தன. ஆனால், நான் தற்போது தான் கங்கையில் புனித நீராடிவிட்டு வருகிறானே. கங்கையில் நீராடினால் பாபங்கள் தொலையும் என்பது சாஸ்வதம். அப்படியிருக்க என் கணக்கில் எப்படி பாவங்கள் இருக்கும்? என்றான்.


இறைவன் இறைவியை பார்த்து "இப்போது புரிந்ததா தேவி? நரகில் ஏன் கூட்டம் அதிகமாக வருகிறது...!" என்று புன்முறுவல் செய்கிறார்.


இளைஞனின் பதிலால் மகிழ்ந்த இறைவனும் இறைவியும், அவனுக்கு தரிசனம் தந்து வாழ்த்திவிட்டு மறைந்தனர்.


இந்த கதையை யார் சொன்னது என்று பார்க்கிறீர்களா? பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணா பரமஹம்சரை தவிர வேறு யார் இந்த கதையை கூறியிருக்க முடியும்....!


இதுபோல தான், நாம் சடங்குகளை ஏதோ ஒப்புக்கு செய்யாது, அவற்றின் உண்மை தத்துவத்தை உணர்ந்து நம்பிக்கையுடன் செய்தால் மட்டுமே பலன் கிட்டும். சரியா நண்பர்களே...?

No comments:

Post a Comment