Sunday 4 December 2011

மேஷம் : 2012 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்





அஸ்வினி, பரணி , கார்த்திகை - முதல் பாதம் - நட்சத்திரங்களில் பிறந்த மேஷ ராசி நேயர்களுக்கு.........

ஜனவரி

உடல் நலத்தில் பாதிப்பு இல்லாவிட்டாலும் உங்கள் மனநிலையில் அடிக்கடி மாறுதல் உண்டு பண்ணும் காலம். சிந்தித்து முடிவெடுக்க முடியாமல் மனம் தடுமாறும். தொழில் வகையில் சிறு முடக்கம் ஏற்படும். அதேசமயம் மாற்றத்தை உண்டு பண்ணும். உங்கள் கடன் படிப்படியாக அடைபடும். கோர்ட், கேஸ் என இருந்தால் அவை வெற்றி பெறும். உங்கள் எதிரிகள் உங்களிடம் சமாதானத் தூது பேசுவார்கள். உங்கள் குழந்தைகளின் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். அடமானம் வைக்கப்பட்ட நகை, வீடு, நிலம் ஆகியவற்றைத் திரும்பப் பெறும் வாய்ப்புகள் உருவாகும்.

பிப்ரவரி

நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ தொழில் செய்யும் இடத்திலோ வாய்மூடி அமைதி காப்பது நல்லது. உங்கள் உடல் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். மற்றபடி பெரிய பாதிப்புகள் இல்லை. கணவன்- மனைவி உறவைப் பொறுத்த வரையில் மிகவும் நல்ல ஒற்றுமை காணப்படும். ஊடல் கூடலுடன் அமையும். மிகவும் சந்தோஷமாக இருக்கும். திருமணம் ஆகாத ஆண்- பெண்களுக்குத் திருமணம் நடைபெறுவதுடன் குழந்தை பாக்கியம் தாமதமாகாமல் உரிய காலத்தில் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மார்ச்

இந்த மாதம் மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். கல்வியில் தடை, தேக்கம் இருந்த நிலை மாறி நல்லதொரு முன்னேற்றம் தரும். தகப்பனார் வழியில் உதவி கிடைக்கும். நோய் பாதிப்பு அடைந்த தந்தைக்கு நோய் நீங்கும். புனித தெய்வீகப் பயணம் ஏற்படும். மேலும் ஆலயப் பொறுப்பு ஏற்று நடத்தும் சூழ்நிலை, திருப்பணி செய்யும் வாய்ப்புகளும் உருவாகும். தாயாருக்கு சற்று உடல்நலன் பாதிக்கப்படலாம். மூத்த சகோதர சகோதரிகளால் பிரச்சினையும், இளைய சகோதரர்களால் ஆதாயமும் நிகழும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும்.

ஏப்ரல்

வியாபாரிகளுக்கும் கூட்டுத்தொழில் பார்ப்பவர்களுக்கும் தொழில் வகையில் கருத்து வேறுபாடு, அரசு வகையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் ஜாமீன் பொறுப்பு ஏற்றுக் கையெழுத்து போன்றவற்றை போட வேண்டாம். தெய்வ பலம் மிகுந்து காணப்படுவதால் புகழ் கீர்த்தியில் எந்த பங்கமும் ஏற்படாது. பொருளாதாரப் பற்றாக்குறைக்கு இடமில்லை. குழந்தைகள் வழியிலும் தகப்பனார் வழியிலும் சிறப்புகள் ஏற்படும். தொழில் வகையில் பிற்பாதி சிறப்படையும். ரியல் எஸ்டேட் தொழில் பார்ப்பவர்களுக்கு கவனம் தேவை. வீடு, மனை சம்பந்தமாகப் பிரச்சினைகள் ஏற்படும். நிதானமாகக் கையாளவும்.

மே:-

மனைவியின் உடல் நலத்தில் சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டு, அதனால் பணம் விரயமாகும். உங்களின் வயதான தாத்தாவிற்கு கர்மம் செய்யும் நிலைமை ஏற்படும். தாய்மாமன், மாமனார் உடல்நலமும் பாதிக்கப்படும். பயப்படும்படியான சூழ்நிலை உருவாகாது. சிறு வைத்தியச் செலவுகள்தான் வந்து போகும். புதிய வாகனம் வாங்குதல், புதிய கட்டிட நிர்மாணங்கள் போன்றவை ஏற்படும். கல்வியைப் பொறுத்தமட்டில் மிகவும் விசேஷமான பலன்கள், உயர்வுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. அரசுவகையில் உதவிகள், ஆதாயம் ஆகியவை ஏற்படும். உங்கள் உடல் நலத்தைப் பற்றிய பயம் தேவையில்லை.

ஜூன்

வாழ்க்கையில் எவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் கொடுத்த வாக்கு காப்பாற்றப்படும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியப் பணி- தங்களின் உடல்நிலையை கவனமாகப் பாதுகாத்துக் கொள்வதுதான். மனைவியின் உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும், மாறி மாறி ஏற்படும் வைத்தியச் செலவுகளைத் தடுக்க முடியாது. அரசு வகையில் முன்பிருந்த நிலைமை மாறி பிரச்சினைகள் தோன்றும். தொழில் வகையில் நெருக்கடியான நிலை காணப்படும். ஆனாலும் அவை தானாக சூரியனைக் கண்ட பனிபோல மாறிவிடும். கடன்கள் ஒவ்வொன்றாக அடைபடும்.

ஜூலை

மாணவர்களுக்கு கல்விநிலையைப் பொறுத்த வரையில் நல்ல முன்னேற்றகரமான நிலைமை ஏற்படும். எதிர்பாராத வெற்றியும் கிடைக்கும். புதிய வண்டி வாகன யோகம் ஏற்படும். பணப் புழக்கத்தைப் பொறுத்தமட்டில் பாதிப்பு வராது. தொழில் இடமாற்றம், கூட்டுத் தொழில் வகையில் பிரிவு ஏற்படும். தனியாகத் தொழில் ஆரம்பிக்கும் நிலை உருவாகும். சகோதர உறவில் பாதிப்பு மற்றும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். தெய்வீகப் பெரியவர்களின் சந்திப்பு அல்லது தொடர்புகள் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனை ஒன்றை நீண்டநாட்களாக நிறைவேற்றாமல் இருந்தால் அதை நிறைவேற்றி விடவும்.

ஆகஸ்ட்

கணவன்- மனைவி உறவைப் பொறுத்த அளவில் எந்தவிதமான பெரிய பாதிப்புகளுக்கும் இடம் இல்லை. இந்த ராசியில் பிறந்த பெண்களுக்குத் திருமணம் கைகூடும் சூழ்நிலை உள்ளது. ஆண்களுக்கு சற்று தாமதமாகும். எப்பொழுதும் உடல்சோர்வு மற்றும் அசதி இருந்துகொண்டே இருக்கும். ஓயாத உழைப்பும் ஓய்வில்லாத நிலையும்கூட ஒரு காரணமாகலாம். அரசு வகையில் அனுகூலமான மாற்றங்கள் ஏற்படும். புரோக்கர் தொழில், வண்டி மற்றும் பூமி மனையை நம்பித் தொழில் செய்பவர்கள், வீடு கட்டும் கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்குச் சிறப்பான நேரம்.

செப்டம்பர்

மிகவும் புத்தி சாதுரியத்துடன் செயல்பட்டு எதிலும் முதன்மை என்ற இடத்தைப் பிடிக்க விவேகமாகச் செயல்படுவீர்கள். கிட்டத்தட்ட பலவிதத்திலும் பாதிக்கப்பட்டு சங்கடம் அனுபவித்த நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. உடல்நலம் மிகவும் உற்சாகத்துடன் காணப்படும். ஆனால் கணவன்- மனைவி உறவில் அவ்வளவாக திருப்தி இல்லை என்றே சொல்லவேண்டும். ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் தோன்றும். மனைவியின் உடல் நலமும் அடிக்கடி பாதிக்கப்படும். தேவையற்ற சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட சண்டை வரலாம். மனைவியை அனுசரித்து விட்டுக் கொடுத்துச் செல்வதில் ஒன்றும் தவறில்லை.

அக்டோபர்

உங்களின் நாவை அடக்கி மிகவும் மென்மையாகப் பேச வேண்டும். புகழ், கீர்த்தியைப் பொறுத்தவரையில் எந்த பங்கமும் ஏற்படாது. கவலையின்றி இருக்கலாம். தெய்வீக சிந்தனை, தீட்சை, உபதேசம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். பெரியவர்களின் மூலம் அது கிடைப்பதற்கான வாய்ப்பும் உருவாகும். தெய்வபலம் மிகுந்து காணப்படும். கடன் தொல்லைகள் இருந்தாலும் பாதிப்புக்கு இடமில்லை. தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சகோதர வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறி ஒற்றுமை ஏற்படும்.

நவம்பர்

இந்த மாதம் வெளியூர் பயணங்கள் வெற்றி தரும். இந்தியாவிற்குள்ளேயே அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வகையில் அந்நிய இனத்தவரால் இடையூறு மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவை பெரிய பாதிப்பாக அமையாது. திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆண் குழந்தை பெற கும்பகோணம் குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும். அரசாங்க வகையில் அனுகூலம் ஏற்படும். பின் பகுதியில் தொழில் வகையில் இருந்து வந்த போட்டி, பொறாமைகள் மாறும்.

டிசம்பர்

அரசு வகையில் உதவிகள் உண்டாகும். குழந்தைகளின் கல்வியில் மந்தமான சூழ்நிலை காணப்படும். படிப்பில் கவனக் குறைவும் ஏற்படும். திருமணம் தாமதம் ஆகிவந்த ஆண்களுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயமாகும். தாய்மாமன் அல்லது மாமனார் வகையில் பொருளாதார உதவி தாராளமாகக் கிடைக்கும். இளைய சகோதரர் வகையில் உதவியும் அனுகூலமும் ஏற்படும். நண்பர்கள் வகையில் இருந்த வருத்தங்கள் மாறி உதவிகள் மற்றும் அனுகூலமும் ஏற்படும். மிகவும் தைரியமாகச் செயல்படுவீர்கள். தெய்வ அனுகூலம் பரிபூரணமாக உண்டு.

No comments:

Post a Comment