Tuesday 7 February 2012

நவதானியக் களஞ்சியம் - திணை ...




உணவே உயிர்:

நமது உடலில் சக்தி இருக்கும் வரை தான், உயிர்ப்பு ,இயக்கம் எல்லாமே...அந்த சக்தியைத் தருவது சரிவிகித உணவு. அத்தகைய சரிவிகித உணவை நமது முன்னோர்கள், பலவகையில் பகிர்ந்து உட்கொள்வதன் மூலம் பெற்றார்கள். அதற்க்கு அடிப்படை அக்காலத்தில் மிகுந்திருந்த பயிரினப் பல்வகைமை (crop diversity) . காலத்தின் கோலமாகப் பயிரினப் பல்வகைமையை அழித்தும், ஒரே வகை உணவுப் பொருளை (அரிசி) உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்ப்படுத்திக் கொண்டும், சக்திக் குறைபாடு, நோய்த் தாக்கம் போன்ற இன்னல்களுக்கு ஆளாகிறோம்.

சீனத்து ஐந்து தானியங்கள்.(five grains of china):

 ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பே சீனத்தில் செனாங் (shennong) என்ற பெயருடைய தெய்வீக உழவனின் (divine farmer)  தலைமையில் மக்கள் உணவுக்கென்றே ஐந்து வகை தானியங்களை பயிர் செய்ததாக வரலாறு சொல்கிறது. அந்த ஐந்து தானியங்களும் சீன மொழியில் வுகு (wu ku)  என்று அழைக்கப் பட்டது. அது சீனத்து ஐந்து தானியங்கள் என்று வரலாற்றிலும் இடம் பெற்றன. அவை முறையே, ச்சி(chi)  என்ற திணை, சூ (shu) என்ற கம்பு, ம்மை (mai) என்ற கோதுமை, தாஒ(tao) என்ற அரிசி, சை (sie) என்ற சோயா முதலியன ஆகும்.

திராவிடத்து நவதானியங்கள். (Dravidian nine grains)

இந்தியாவில், ஆந்திரா , கர்நாடகப் பகுதிகளில், கிமு 2800 காலத்தில் பழங்காலக் குடியிருப்புகள் கண்டறியப்பட்ட இடங்களில் , காட்டுத் தானிய (wild food grains) சேமிப்பு இருந்தது உணரப்பட்டுள்ளது. காலம் ஆகஆக இந்தியாவிலும் சீனாவைப் போல பலவகைகள் விரிவாகியுள்ளது. பின் அது இந்திய நவதானியங்கள் என்றும் பெயர் பெற்றது...

சரி நாம் இப்போது நவதானியப் பட்டியலின் முதன்மையான திணையைப் பற்றிப் பார்ப்போம்.

1.திணை.
பூர்வீகமும் சொந்தங்களும்.

இன்றிலிருந்து சுமார் 7000 ஆண்டுகளுக்குய் பின்னோக்கிப் பார்க்கக்கூடிய மிகப் பழமையான வரலாற்றைக் கொண்ட பயிர் திணை. கிமு 5000 ஆண்டுகளில் சீன இந்தியப் பகுதிகளில் பயிர்விக்கப்பட்ட முக்கிய உணவுப் பயிராக இருந்து, கிமு.3000 வாக்கில் , ஐரோப்பிய நாடுகளிலும் விவசாயப் பயிராக இடம் பிடித்தது. சீனம்தான் இதற்கு பூர்வீக பூமியாகக் கருதப்படுகிறது. கம்பு, சோளம், திணை போன்றவை பனிக்காயடு (panicoid grasses) புற்கள் என்ற தொகுதில் வரும் நரிவால் புல் இனக்கூட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

சட்டப்பூர்வப் பெயரும் , அங்கீகரிக்கப் பட்ட மாற்றுப் பெயரும்...

செடேரியா இட்டாலிகா (setaria italica) என்பதுதான் திணையின் சட்டப்பூர்வ தாவரவியல் பெயர். இது தவிர பாணிகம் இட்டாலிகம் (panicum italicum), கேயிட்டோகோலா இட்டாலிகா (chaetochola italic) என்று நூற்றுக்கணக்கான அங்கீகரிக்கப்பட்ட மாற்றுப்பெயர்களும் அதற்கு உண்டு.

திணை ரகங்கள்

பழந்திணை,  பெருந்திணை, கருந்திணை, செந்திணை, வெண்திணை , உப்புத்திணை,  கல்லந்திணை,  கோரவந்திணை,  முயல்கண்ணன் திணை, மூக்கன் திணை என்று பல திணை வகைகளை நமது முன்னோர்கள் பிரித்தரிந்துள்ளது வியப்பிற்குரியது.

திணையும் தமிழும்

திணையோடு தமிழருக்கு சங்ககாலத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது. "முதைச்சுவர்  கலித்த மூரிச் செந்திணை" என்று அகநானூற்றிலும்,  ‘’திணைக்காலுள் யாய்விட்ட கன்று மேய்க்கிற்ப்பதோ"  என்று கலித்தொகையிலும் , "பாய்ந்தால் செந்திணை " என்று குறிஞ்சிப்பாட்டிலும், " குருதிச் செந்திணை" என்று திருமுருகாற்றுப்படையிலும் , "செந்திணைப் பிடியும் தேனுமருந்துவர்" என்று கண்ணப்ப நாயனார் புராணத்திலும் , திணை தமிழர் வாழ்வோடு எவ்வளவு தொடர்புடையது என்பதைப் பற்றி அறிய முடிகிறது...

திணையும் சத்தும்

நூறுகிராம்  திணையில் நார்ச்சத்து உட்பட்ட பலவகை சர்க்கரை சத்துக்கள் 73.1 கிராம்,  நீர் 12.5 கிராம்,  புரதச்சத்து 10.5 கிராம்,  கொழுப்புச்சத்து 2.7 கிராம்,  சாம்பல் சத்து 1.2 கிராம் அடங்கியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.... புரோலின் என்ற தனித்துவ அமினோ அமிலமும் , பாண்டோதனிக் அமிலம் என்ற பன்னிரண்டு வைட்டமின் ஆகிய முக்கிய வளர்ச்சிப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. திணையின் நிறம் வெளிர் மஞ்சளில் ஆரம்பித்து , ஆரஞ்சு, சிவப்பு , கருப்பு , பழுப்பு என்று பலவாறாக இருக்கலாம்.

திணையும் சமையலும்

திணையும் தேனும் கலந்து வள்ளி முருகப்பெருமானுக்குக் கொடுத்த கதையும் , கந்த சஷ்டியில் திணைமாவு , தேன் , வெள்ளம் கலந்து நெய்வேத்தியம் படைப்பதும் நாம் அறிந்த செய்திகள்...சமீப காலமாக திணையரிசிப் பணியாரம், திணையரிசிப் பாயாசம் ஆகிய சுவையான தின்பண்டங்கள் செய்வது அதிகரித்து வருவது வரவேற்க்கத்தக்கதே...

திணையும் உடல்நலமும்

பன்னிரண்டு வகையான திணைவகைகளையும் ஆய்வு செய்து பல தாவரவியல் விஞ்ஞானிகள்,  சாம்பல் சத்தும், நார்ச்சத்தும் மற்ற தானியங்களுக்குக் குறைவில்லாமலும்,  புரதமும், கால்சியமும், சற்றுத் தூக்கலாகவும் இருப்பதை விளக்கியுள்ளனர். ஆனால் பொதுப்படையாகவே, தைராய்டு நோய் உள்ளவர்கள் அதிகமாகத் தானியங்களைச் சேர்ப்பது தைராய்டு பெர்ஆக்சிதேஸ் (thyroid peroxidase) செயல்பாட்டைத் தடை செய்து நோயை அதிகரிக்கச் செய்யும் என்ற கருத்தும் உண்டு........

வாழ்க்கையில் நவரச உணர்வுகள் நிதர்சனமானவை.  அதுபோலவே உணவிலும் நவதானியங்கள் தவிர்க்கக் கூடாதவை....இன்றிலிருந்தே குழந்தைகளுக்கு நவதானியங்களின் அறிவையும் நவதானிய உணவுகளையும் கொடுத்து நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்......
           
வாழ்க வளமுடன்.....

No comments:

Post a Comment