Saturday 4 February 2012

எது என் தங்கம்? எது என் உரிமை? ..........


கோவையில் மட்டும் ஆ·ப் சீஸனில் நாளொன்றுக்கு நூற்றம்பது கிலோ தங்க ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. அட்சய திரிதியை, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிருஸ்துமஸ் போன்ற பண்டிகை சீஸனில் என்ன கணக்கு என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள் ஆனால் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்வது என்னவென்றால், ஒழுங்காக பதியப்பட்ட கணக்கு எதுவும் கிடையாது என்பது தான்.

கோவை நகரத்தில் வங்கத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளிகள் மட்டுமே சுமார் நாற்பதாயிரம் பேருக்கும் மேல் இடம்பெயர்ந்து வந்துள்ளார்கள் இது அங்கே அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சொல்லும் கணக்கு  (இதே கோவை நகர பெங்காலி நகைத் தொழிலாளர் சங்கத் தலைவர் 25 ஆயிரம் என்கிறார்). இதுவும் தவிர கேரளத்தைச் சேர்ந்தவர்கள் வங்காளிகளுக்குக் குறையாத எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து வந்துள்ளனர்.

கோவையில் மட்டும் சுமார் ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டு லட்சம் பேர்கள் வரை இத்தொழிலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர். இது நகைக்கடை, சேல்ஸ்மென், பட்டரைகள், பேக்டரிகள், டையிங் யூனிட் தொழிலாளிகள், சாக்கடையில் தங்கத் துகள் சலிப்பவர்களையும் உள்ளிட்ட தோராயமான கணக்கு.

இன்றைய தேதியில் கோவையில் மட்டும் சுமார் பத்தாயிரம் யூனிட்டுகளும், நூற்றுக்குக்கும் அதிகமான பேக்ட்டரிகளும்  இருக்கிறது . இந்த பேக்டரிகள் சில நேரடியாக ஏற்றுமதியிலும் கூட ஈடுபட்டிருக்கின்றன. ஒரு பேக்டரி என்பது முப்பதிலிருந்து ஐம்பது வரையிலான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு யூனிட்டில் சுமார் பத்து தொழிலாளிகள் வரை வேலை செய்வார்கள். ஒரு பேக்டரியில் எல்லாவிதமான நகைகளும் உருவாக்கப்படும். யூனிட் என்பது சின்னச் சின்ன ஜாப் ஆர்டர் எடுத்து செய்யும் சிறிய பட்டரை.

 2002 ம் ஆண்டு உலக தங்க கவுன்ஸில் வெளியிட்ட அறிக்கையின் படி :- இந்திய தங்க வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 600 கோடி டாலர்கள், சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள், ஒரு லட்சம் பட்டரைகளிலிருந்து தங்க நகை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். உலகத்திலிருக்கும் தங்கத்தில் 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதம் வரை இந்தியாவில் இருக்கிறது.

உலக கோல்டு கவுன்சிலின் மதிப்பீட்டின் படி சென்ற ஆண்டு அக்ஷய திரிதியை நாளை முன்னிட்டு விற்கப்பட்ட தங்கத்தின் அளவு மட்டும் 49 டன்கள்;  இதில் 60% தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் விற்கப்பட்டுள்ளது. இதில் கேரளத்தில் மட்டும் 40% (அதாவது பத்து டன்கள் அதாவது பத்தாயிரம் கிலோ!!!) தங்கம் விற்கப்பட்டுள்ளது.

இனி இந்த பிரம்மாண்டமான பளபளக்கும் புள்ளிவிபரங்களுக்குப் பின்னே காலகாலமாய் புழுங்கிச் சாகும் தொழிலாளிகள் நிலை குறித்தும் இத்தொழிலில் கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாய் நிகழ்ந்துவந்த மாற்றங்கள், அதற்குக் காரணமாயிருந்த மறுகாலனியாதிக்க பொருளாதார சூழல் குறித்தும் கொஞ்சம் பார்க்கலாம்.

1991 என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. 1990 ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கு இருந்த தேவையை  விட, உலகளவில் தங்கத்துக்கு இருந்த தேவையை விட அதிகமாகும். ( ஆதாரம் www.gold.org)

இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம்,  நகை உருவாக்கத் தொழில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கியது. ஆசாரிகளின் வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர், இனிமேலும் அவர்களிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது. கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைகளைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இந்தக் கடைகளும் கூட தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்க பார்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன.

இது நகைப் பட்டரைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை அவர்கள் கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் இழந்தனர். நகை மாளிகைகளும் கூட இவர்களிடம் செய்து வாங்குகிறார்கள் என்றாலும் லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்போடு சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின் வரவால் ஏற்பட்டது.

மாற்றம் என்பது ஏற்கனவே உள்ள சக்திகள் (resourse) ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதல்ல. அந்த சக்திகளின் நிலை மாற்றமாக இருக்க வேண்டும். இப்போது அறிமுகமான நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் முன்பு இருந்த தொழிலாளிகளை உள்வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்; அவர்கள் அத்தனை நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக கற்றுக் கொண்ட உத்திகளோடு இணைந்து முன்னேறியிருக்க வேண்டும் -மாறாக தனது வரவையே அந்தத் தொழிலாளிகளின் தற்கொலைகள் மூலம் தான் முன்னறிவித்துக் கொண்டது.

தொன்னூறுகளின் இறுதியில் பாரம்பரிய நகைப்பட்டரை தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டார்கள். பலர் வேறு தொழில்களுக்கு விரட்டப்பட்டனர். எஞ்சிய சிலர் தாம் அதுவரை கற்று வைத்திருந்த தொழில்நுட்பங்களை மறந்து கம்பி பட்டரையிலோ பால்ஸ் பட்டரையிலோ குறைகூலிக்கு மாரடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டனர்.

1997ம் ஆண்டு தங்க இறக்குமதியில் இருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டது. இனிமேல் தங்கத்திற்கு என்.ஆர்.ஐ இந்தியர்களையோ கடத்தல்காரர்களையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை எனும் நிலை உருவானது. தொன்னூறுகளின் இறுதியில் சங்கிலித் தொடர் நகைமாளிகைகள் உருப்பெறத் துவங்கியது. வட்டார அளவில் பிரபலமாயிருந்த டிசைன்கள் தவிர ஒரே கூரையின் கீழ் வெவ்வேறு பிராந்திய டிசைன்களை குவித்து வைக்க வேண்டியது அவசியமானது. ஈரோட்டிலிருக்கும் ஒரு நகை மாளிகையினும் நுழையும் நுகர்வோர் ஒருவனின் கண்முன்னே ஜெய்பூர் டிசைன், மலபார் டிசைன், பெங்காலி டிசைன் என்று அணிவகுக்கிறது.

பொருளாதார பின்புலம், பிற்போக்கு அடித்தளம் இயல்பாகவே இருந்து வந்த சேமிப்புப் பழக்கம் இவைகளின் காரணமாய் இந்தியர்களுக்கு இருக்கும் தங்க மோகம் உலகமயமாக்கல் சூழலில் முதலாளிகளுக்கு மெய்யாகவே ஒரு வாய்ப்பை தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தது.
நாடெங்கும் பரவலாக பரவியது சங்கிலித் தொடர் நகைக் கடைகள். ஜாய் ஆலூக்காஸ், கல்யான் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ் & சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின.

இவர்களுக்கு ஏற்கனவே இருந்த தங்கவெறி போதுமானதாக இல்லை;  புதிதாக வெறியுட்ட வேறு விஷயங்கள் தேவைப்பட்டது. ஒரு பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகை பரணிலிருந்து தூசு தட்டி எடுக்கப்பட்டது. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அக்ஷய திரிதியை நாளில் நகை வாங்கினால் நல்லதுஎன்றும் ஐசுவரியம்பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர். போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியையும் துனைக்கழைத்துக் கொண்டனர். பிரபலமான நடிகர்களை ப்ராண்டு அம்பாசிடர்களாக வைத்துக் கொள்வது, நடிகைகளை நடமாடும் நகைக்கடைகளாக விளம்பரங்களில் உலாத்த விடுவது என்று தங்க மோகத்தில் மக்களை மூழ்கடித்தனர்.

இயல்பாகவே மேல் வர்க்கத்தாரின் மேல் பிரமிப்புடன் இருக்கும் உழைக்கும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. இதே சமயத்தில் மற்ற சேவைத் துறைகளிலும் ஐ.டி துறையிலும் ஏற்பட்ட வளர்ச்சியானது நுகர்வையே கலாச்சாரமாகக் கொண்ட புதிய ரக மேல்தட்டு வர்க்கம் ஒன்றை உருவாக்குகிறது. செயற்கையான முறையில் தேவையில் ஏற்படுத்தப்பட்ட மிதமிஞ்சிய வீக்கம் உற்பத்தியிலும் அதேவிதமான மாற்றத்தைக் கோருகிறது.

இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டியது ( ஆதாரம் – http://southasia.oneworld.net/Article/indian-goldsmiths-face-a-doomed-future) இணைப்பில் உள்ள கட்டுரையின் கடைசி பத்தியிலிருந்து நவீன நகை மாளிகைகள் நடத்திய ஒரு நகைக் கண்காட்சியில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டரைகள் பெரும் நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போனது. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது. சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டரை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜெண்டுகளாக மாற்றம் பெற்றனர்.

மேலும் இயந்திரங்களில் வேலை செய்ய வேறு மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். இவர்களுக்கும் சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும் மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள். அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி.

இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத்
தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தாயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும்.

இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள். அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் ( தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்கானிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.

முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது. டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப் பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆபரண உருவாக்கத் திரனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற பட்டறையில் தொழிலாளியாய் வேலைக்குச் செல்கிறார்.

இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும் (தப்பித்தவறி தங்கம் பட்டறை முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுக்க) தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது.

சீசன் உள்ள அந்த சில நாட்கள் தொழிலாளிகள் தங்கள் உயிரை தங்கத்தோடு சேர்த்து உருக்கியும், தமது சுயமரியாதையை வளைந்து நெளியும் அந்தத் தங்கக்கம்பியைப் போல நெளித்தும் சம்பாதிக்கும் சொற்பப் பணம் தான் எங்கோ சொந்தங்களின் பசியாற்றப் போகிறது.
நகைக்கடை ஷோரூம்களில் கண்ணாடி அலமாரிகளுக்குள் பளபளக்கும் ஒவ்வொரு நகைகளுக்கும் பின்னேயும் கோவையின் இருட்டுச் சந்துகளில் நெரிசல் மிகுந்த தெருக்களிலோ உள்ள ஏதோ ஒரு பட்டறையின் உள்ளே கண் எரிச்சலோடு புழுங்கிச் சாகும் தொழிலாளியின் உழைப்பு மறைந்து கிடக்கிறது.

தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் உறங்காமல் வேலைபார்த்துக் கொண்டிருப்பவர்கள் , தூக்கம் வராமல் இருக்க கணமான உணவு எதையும் உட்கொள்ளக் கூடாது என்பதற்காக  மூன்ற நாட்களும் பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிட்டு தாக்குப்பிடித்து வேலை செய்து கொண்டிருப்பவர்களும் உண்டு .தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர்.

ஊரே பண்டிகைக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் நேரம்.. பட்டாசுகளும் வாண வேடிக்கைகளுமாக வெளியில் எல்லோரும் குதூகலித்துக் கொண்டிருக்கும் போது, ஆசாரிகள் ஆயிரக்கணக்கானவர்கள் நாட்கணக்கில் தூக்கம் மறந்து தண்ணீர் மறந்து சோற்றை மறந்து உழைத்துக் கொண்டிருப்பர்

அந்த நகை எங்கோ ஒரு அல்பையின் கழுத்தை அலங்கரிக்குமோ அல்லது ஏதோவொரு முதிர்கண்ணியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிவிடுமோ தெரியவில்லை ஆனால் அந்த நேரத்தில் அந்த இடத்தில் அந்த பெயர் தெரியாத தொழிலாளர்களின் உயிரை உருக்கியெடுத்துக் கொண்டிருப்பதை மட்டும் காண முடியும் 

ஆம்.. நிறைய வேலைகளை உலகமயமாக்கம் கொண்டுவந்துள்ளது; கூடவே அதேயளவுக்கு ஜோம்பிகளையும் உருவாக்கி விட்டிருக்கிறது உழைக்கும் ஜோம்பிகள்..! இப்படி உழைக்கும் மக்களை நடைபிணங்களாய் மாற்றுவதும், மேல்நடுத்தர வர்க்க மக்களை ஏன் எதற்கு என்றில்லாமல் வாங்கிக் குவிக்கும் நுகர்வு இயந்திரங்களாய் மாற்றுவதும், நடுத்தர வர்க்க மக்களி மேலே பார்த்து ஏங்கி நிற்க வைப்பதுவுமான ஒரு சமூக எதார்த்தமே இந்த மறுகாலனியாதிக்க கால சமூக எதார்த்தம்.

இத்தனை வேலைப் போட்டிகளுக்கிடையிலும் உள்ளூர்த் தொழிலாளிகளிடையேயும் வெளிமாநில தொழிலாளிகளிடையேயும் ஒருவிதமான ஒத்திசைவை சிலசமயம் காண முடிகிறது. மொழி, இனம், மதம் கடந்து தமது பாடுகளைத் தோள் சேர்ந்து பகிர்ந்து கொள்ளும் அவர்கள் அந்தப் பாடுகளுக்குக் காரணமான சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களிலும் இணைவார்களானால் அந்த நாள் பகாசுர சங்கிலித் தொடர் நகைமாளிகை முதலாளிகளின் இறுதி நாளாயும் புதியதொரு சமுதாயத்தின் முதல் நாளாகவும் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாளாக இருக்கும்………………………

2 comments:

  1. நண்பரே,நீங்கள் நகை தொழிலாளர்களின் மனசாட்சியை படித்துவிட்டீர்கள்,இந்த சமுதாயம் இறக்கமே இல்லாமல் அவர்கள் வாழ்வை சிறுக சிறுக அழித்துக்கொண்டிருக்கிறது.வாழ்வு விடியும் என்ற நம்பிக்கை தேய்கிறது.முடிவு மரணம்.

    ReplyDelete
  2. இல்லை தோழரே காலம் ஒரு நாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்.

    ReplyDelete