Saturday 8 June 2013

உயிர்களின் ஜீவ நாடி....

                 


                கிருஷ்ணர் ஸ்ரீமத் பாகவதத்தில் இவ்வாறு கூறுகிறார், ''காற்று, மழை, வெய்யில், பனி இவை யாவற்றையும் தாமே தாங்கி, நம்மை இவற்றினின்று காக்கும் பாக்கியப் பேறு  பெற்ற மரங்களைப் பாருங்கள்...ஆஹா, எவ்வாறு மேன்மக்களிடம் செல்பவர்கள் தாம் வேண்டிய பொருளைப் பெறாது திரும்ப மாட்டார்களோ, அது போல, வேண்டியதை எல்லா உயிர்களுக்கும் தந்து வாழ்வளிக்கும் இந்த மரங்களின் பிறப்பே தலை சிறந்த பிறப்பு...இலை, மலர், கனி, நிழல், வேர், பட்டை, கட்டை, மணம், பிசின், சாம்பல், கரி, தளர் இவையாவற்றாலும் அவை பிறருக்கு உதவுகின்றன...அவ்வாறே, மனிதனும்,உயிராலும்,பொருளாலும்,அறிவாலும்,உரையாலும் உதவுவதாய்ப் புரிவதே, ஜீவனின் பிறவியை நிறைவு பெறச் செய்கிறது.''' என்கிறார்........

                 அவ்வாறே, ஒரு மரம்,ஒரு நாளில் 200 மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது...33% மழைநீரை மரங்களால் தேக்கி வைக்க முடிகிறது. மரங்களின் மூலம் கிடைக்கும் குளிர்ந்த காற்று 1000 மின் விசிறிகள் சுற்றினாலும் நமக்குக் கிடைக்காது..
                 
                ஆனால் , இந்தியாவில் இருந்த 33% காடுகள் அழிக்கப்பட்டு இன்று 20% காடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.. இதனை ஈடு செய்ய சுமார் 54 கோடி மரங்களளை  நட்டு வளர்க்க வேண்டும்.வனத்துறை மட்டுமே இவ்வரிய காரியத்தை செய்துவிட முடியாது. நாமனைவரும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டினால் மட்டுமே நமது இக்கடமையை நிறைவேற்றிட முடியும்.
                  
                 மரங்கள் நம் வாழ்வோடு இணைந்தவை . பிறப்பு முதல் இறப்பு வரை நாம் மரங்களோடு தான் இணைந்து வாழ்கிறோம். மனிதன் இன்றி மரங்கள் வாழும்...ஆனால் மரங்கள் இன்றி மனிதனால் வாழ முடியாது. பல நூற்றாண்டுகளாக கோவில்களில் ஸ்தலவிருட்சம் என்று மரம் வளர்த்துப் போற்றிப் பாதுகாக்கப்படுவது, அந்த இனம் அழிந்து விடாமல்   காக்கவும் மரங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும்தான்.
                 
                  ஒரு மனிதன்  ஒரு நாளில் சுமார் 3 சிலிண்டர் ஆக்சிஜன் அளவு சுவாசிக்கிறான். ஒரு சிலிண்டர் 700/- என்றாலும் ஒரு நாளில் 2100/- வரை ஆகிறது. ஒரு ஆண்டிற்கு 7,66,500/- ம் , சராசரியாக 65 ஆண்டுகள் வாழும் மனிதனால் சுமார் 5 கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் சுவாசிக்கப்படுகிறது. இவையெல்லாம் நமக்கு இலவசமாக, சுற்றியுள்ள மரங்களிலிருந்து கிடைக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்த்ததுண்டா? 
                  
                  மரங்களே இயற்கை தந்த பொக்கிஷங்கள் எனக்கருதி, ஒவ்வொருவரும் தம் பிறந்தநாளிலும், மணநாளிலும் மரங்களை நட்டு பெருமையடையலாம். 
தனி மரம் தோப்பாகாது என்பார்கள், ஆனால் ஒரு தனி மனிதனாலும் ஒரு தோப்பை உருவாக்க முடியும். இதற்கு நல்ல உதாரணம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள வேட்டுவன்புதூர் கிராமத்தை சேர்ந்த, 79 வயது பெரியவர், அய்யாசாமி என்பவர்தான், எழுதப் படிக்கத் தெரியாத , ஆடுமாடுகள் மேய்க்கும் தொழில் செய்து வரும் இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வானொலி ஒலிபரப்பிய செய்திகளையும், கருத்துக்களையும் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 
                   
                   ஒரு நாள் வானொலியில் ஒலிபரப்பான, '''நமது நாட்டில் நீர்வளம் மிகவும் குறைந்து கொண்டே போகிறது . மழை பொய்த்துப்போக ஆரம்பித்து விட்டது. பூமி நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டே போவதால் நமக்கு அதிகமான மரங்கள் தேவைப்படுகின்றன. அவைகளால் தான்  நமக்கு மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் எனவே ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம்..அதை நமது கடமையாக ஏற்போம் "" எனும் செய்தியைக் கேட்ட பெரியவர் அய்யாசாமி, அந்த நிமிடம் முதலே மரம் வளர்ப்பதை தமது முக்கியக் கடமையாக ஏற்றார்.அன்று முதலே ஆங்காங்கு கிடைக்கும் விதைகளை  சேகரித்து புறம்போக்கு நிலங்களில் தூவி அவை, சிறிய செடியாக வளர்ந்தவுடன் அதற்கு வேலிகள் அமைத்து,தண்ணீர் ஊற்றி பராமரித்து, இன்று 3000 க்கு மேற்ப்பட்ட மரங்களை பெரிய அளவில் உருவாக்கி அந்தப் பகுதியை பசுஞ்சோலையாக மாற்றியுள்ளார். அத்தனை மரங்களையும் தனது பிள்ளைகள் என்று சொல்லி பெருமை கொள்கிறார் அந்த படிக்காத மேதை........