Saturday 31 December 2011

தஞ்சை பிரகதீஸ்வரர் - அறிந்து இராத சில அதிசய தகவல்கள்......


சின்ன வயதில் ராஜ ராஜ சோழன் படம் பார்த்தபோது , ஏற்கனவே சரித்திர நாவல்கள் படித்து அறிமுகம் இருந்ததால் ,கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.( சிவாஜியின் பிரமாதமான நடிப்பைத் தவிர்த்து).  பொன்னியின் செல்வன் அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு பாலாவின் உடையார் படித்தபோது , பெருவுடையார் ஆலயம் எழுப்பப் பட்டதை அவரின் பார்வையில் இருந்து , நம் மனத்துக்குள் செலுத்தும் வித்தையை உணர முடிந்தது. நாமும், ஆலயம் கட்டும்போது கூட இருந்து இருப்போமோ என்கிற கேள்வியை மனம் எழுப்புவதை தாண்டி, நம் மனத்திலும் ஒரு கோவில் கட்டபப்ட்டு இருந்ததை , வாசகர்கள் உணர்ந்து இருப்பீர்கள். . இது ஒரு எழுத்தாளனின் ஆளுமை. படிக்கும்போது உள்ள சுகம், பார்க்கும்போது கொஞ்சம் கம்மிதான்.


பிரபல நாவல்களை படமாக எடுக்கும்போது , நம் மனத்துக்கு அவ்வளவு திருப்தி ஏற்படுவது இல்லை. தி. ஜா.வின் மோகமுள் அதற்க்கு சரியான உதாரணம். கும்பகோணத்தின் புழுதியும், காப்பி மணமும் , குளக்கரையும் , பாபுவையும், யமுனாவையும், ரங்கண்ணாவையும்   - நம் மனம் எடுக்கும் படத்தை உலகத்தின் எந்த பிரமாதமான டைரக்டரும் , நம் கண் முன்னே காட்டுவது கஷ்டம் தான்.

இருக்கும் இடத்திலேயே ஓடும் அனுபவத்தைத் தரும் ஓர் அருவி இந்த மோகமுள் போன்ற நாவல்கள். கதையின் ஜீவனைத் திரைப்படம் சொல்ல முடியவில்லை. படிப்பவரின் எழுத்து வீச்சில் திளைத்தபடி, பாத்திரங்களை நம் முன் உயிரோடு நமக்கு மிகவும் நெருக்கமான நபர்களாகவே உலவ விட்ட விந்தையைப் படித்துத் தான் உணர முடியும்.

சரி, எதற்கு திடீர் என்று ராஜ ராஜன் ஞாபகம் என்கிறீர்களா?

படிக்கும்போது நாம் உணர்ந்து இருந்த பிரம்மாண்டத்தை விட - நேரில் பார்க்கும்போது , இன்னும் பிரமாதமாக இருக்கும் ஒரு அற்புதம் தான் , இந்த  பிரகதி ஈஸ்வரர் . தமிழ் நாட்டின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படும் சோழர் காலத்து மாபெரும் சக்கரவர்த்தி.

 டிஸ்கவரி சானலில் கோவில் எப்படி அந்த காலத்தில் கட்டி இருந்து இருப்பார்கள் என்று டாக்குமெண்டரி அடிக்கடி காட்டுகின்றனர். அதைப் பார்த்த பிறகுதான், நமக்கும் பல கேள்விகள் எழுகின்றன <
எப்படிய்யா, அவ்வளவு பெரிய கல்லை , தூக்கி மேல வைச்சாங்க..? எங்கே கிடைச்சு இருக்கும், எப்படி அங்கே இருந்து  தூக்கி வந்து இருப்பாங்க..? அதோட எடை இவ்வளவுன்னு எப்படி கண்டுபிடிக்கிறாங்க? அதுக்கு என்ன வழி ? >

எதற்கு வேலை மெனக்கெட்டு இப்படி செய்யனும்? இவ்ளோ பெரிய விஷயம் பண்ணனும்னா, அப்போ உள்ள இருக்கிற கர்ப்பகிரகம் எவ்வளவு சக்தி வாய்ந்த கதிர்களையும் ஈர்க்க கூடியதா இருக்கணுமே! முகத்தில் அறையும் பிரமாண்டத்தையும் தாண்டி, காலம் காலமாக அருள் பாலித்து வரும் அந்த இறைவனின் மகத்துவம் எப்பேர்ப்பட்டது என்பதையும் மனப்பூர்வமாக உணர முடிகிறது.

எண்பது ஆயிரம் கிலோ  எடையுள்ள கல்லை, தற்போது உள்ள எந்த தொழில் நுட்பமும் இருந்து இருக்க வாய்ப்பில்லாத அந்த காலத்தில் , எப்படி கோபுரத்தின் உச்சியில் வைத்து இருக்க கூடும்? அதை தாங்கும் அளவுக்கு கோபுரம் வடிவமைக்கப்பட்டது? இவையெல்லாம், தற்போது இருக்கும் பொறியியல் வல்லுனர்களையே வியப்பில் ஆழ்த்தும் அதிசயங்கள்...

கிட்டத்தட்ட தென் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், ஒன்றுகூடி - உடல் உழைப்பு , பொருள் உதவி எல்லாம் செய்து  எழுப்பிய மகத்தான ஆலயம் இது. ராஜ ராஜ சோழன் என்னும் அரசன், ஒரு தனிமனிதன் தன் பெருமையை காலம் காலமாக நிலைக்க செய்த ஒரு செயல் , என்று நினைத்து , இங்கு நிலவும் தெய்வ சாந்நித்தியத்தை மறந்துவிட போகிறீர்கள்...

இங்கு உள்ள வராஹி - ஒரு மாபெரும் வரப்பிரசாதி. சோழர்களின் குல தெய்வமாக இருந்த துர்க்கை அம்மனுக்கு போர்படைத் தளபதி. கணபதிக்கு இணையாக முதல் வழிபாடு இங்கு இவளுக்கே என்னும்போது - நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிகிறது.  அடுத்து நந்தி எம்பெருமான். பிரதோஷ நேரத்தில் , ஒருமுறை சென்று பாருங்கள்...

பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் - ராஜ ராஜ சோழனின் காலத்தில் , அரசருக்கு பலவிதங்களில் இந்த ஆலயம் அமைக்கும்போது வழி காட்டி இருந்து இருக்கிறார். சிவலிங்கம் மட்டும் 25 ,000  கிலோ எடையுள்ளது என்கிறார்கள்..... இப்போது புரிகிறதா? இது மனிதமுயற்சியையும் தாண்டி, தன் செல்லப் பிள்ளைகளான சித்தர்களையும் உடன் வைத்துக்கொண்டு - அருண்மொழி என்னும் கருவியின் மூலம் , சிவம் தன் சித்து விளையாட்டை நிகழ்த்தி இருப்பதை!

அருண்மொழித் தேவருக்கு, சிவம் எப்பேர்பட்ட பேறை அளித்து இருக்கிறது தெரியுமா? அவர் மூலமாக , சிவம் தான் உறைய  , தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட மாபெரும் அதிசயம் தான் , இந்த ஆலயம்.

மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பாருங்கள்...

புராதனக் கல்வெட்டு சாசனங்களையும் ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தையும் பற்பல தெய்வீக ரகசியங்களையும் உள்ளடக்கியது, தஞ்சை பெருவுடையார் கோயில். சுந்தர சோழர் வம்சத்தில் வந்த  சக்ரவர்த்தி ராஜராஜ சோழனால்  கோயில் எழுப்பப்பட்ட வரலாறு, நாடிச் சுவடியில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.



சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் காவிரியின் கரையில் கம்பீரமான 216 அடி விமான உயரமும், அதன் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட 80 டன் எடையுள்ள கலசத்தையும் பொருத்தி 9 அடி உயரமும், 23.5 அடி சுற்றளவும், 25 டன் எடையும் கொண்ட ஒரே கல்லால் ஆன பெருவுடையார் லிங்கத்தையும் தனது குருவான ஹரதத்தர்ஆலோசனை பேரில் உருவாக்கினார் ராஜராஜ சோழன். நந்தி தேவனார் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உயிர் ஊட்ட பெற்றவர். கோயிலுக்கு வாஸ்து சாந்தி செய்த பின்னரே நந்தி தேவரை நிறுவினார், சோமன் வர்மா என்ற தலைமை சிற்பி. 12 அடி உயரமும் 19.5 அடி நீளமும் கொண்டவர் நந்தி. ஆதலால், வாஸ்து புருஷன் தன் அருளாசியை பக்தர்களுக்கு எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.


சொந்த வீடு, கடை, நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்க எண்ணுபவரும், வாங்கிய சொத்துகள் விருத்தி ஆகவும் அமாவாசை திதியில் உச்சி வேளையில் நந்தியின் வால்புறத்தில் நின்று நந்தி சகஸ்ரநாமம் சொல்ல சித்திக்கும் என்கிறார் அகஸ்தியர்.

பெருவுடையார், பஞ்ச பூதங்களின் அம்சம். இவரை தொழுவது பஞ்ச பூத லிங்கங்களை தொழுவதற்கு சமம். சரும நோயினால் அவஸ்தைப்பட்ட சோழ மன்னர், நோயின் கொடுமை தீர ஆலய யாத்திரையை மேற்கொண்டார். அருணகிரிநாதருக்கு வந்த நோய்க்குச் சமமான நோயால் பீடிக்கப்பட்ட சோழன், தனது ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை என இந்நாளில் அழைக்கப்படும் தலை மன்னார் காடு உறை ஈசனைத் தொழச் சென்றார்.


அப்போது மன்னரின் குலகுருவும் உடன் இருக்க, கருவறையின் உள்ளிருந்து அசரீரி ஒலித்தது: ''ராஜராஜனே, எமக்கொரு கோ இல் சமை''.இம்மொழி கேட்ட மன்னர் தன் நாடு மீண்டு மனைவி லோகமாதேவியோடு திருவாரூர் தியாகராசரைத் தொழுது நாடி கேட்டனர். அப்பொழுது அகஸ்திய மகரிஷியே வானில் தோன்றி ஆசி கூற, ஓலைச்சுவடி படிக்கப்பட்டது.

அதில் தஞ்சை, உறையூர், காஞ்சி என்ற மூன்று தலைநகர்களில் தஞ்சையில் காவிரிக்கரையில் கோயில் கட்டவும், இதற்கான கற்கள் திருச்சி மலைப் பகுதியிலிருந்து எடுக்கவும் ஆணை வந்தது. சிவனே நாடி படித்ததாக கூறுகிறார், சிவ வாக்கியர். நர்மதை தீரத்திலிருந்து மூலவருக்கு கற்களை கொணர்ந்து, அதில் ஒளி பொருந்தியதும், நீரோட்டம் நிறைந்ததுமான ஒரு லிங்க ஸ்வரூப கல்லை ப்ரஹந் நாயகி என்ற சோழரின் குலதெய்வம் காட்டி மறைந்தது. இந்தக் கல், லிங்க வடிவில் தானே பெரு வளர்ச்சி அடைந்ததால் இந்த லிங்க மூர்த்திக்கு பெருவுடையார்என்ற பெயர் வழங்கி வருகிறது.

கோபுரத்தின் ஒரு பகுதியில் ஆங்கிலேயரின் உருவம் காணலாம். இது பின்னர் இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆள்வர் என்பதன் குறிப்பாகும். மேலும் பற்பல ரகசிய கல்வெட்டுக்கள் தேசத்தை ஆள்பவரின் பெயரையும் காட்டுகின்றன. ராஜராஜ சோழ மன்னரின் படமும், அவரது குரு ஹரி தத்தர் ஓவியமும் உள்ளது உள்ளபடியே வரையப்பட்டுள்ளன. நாடிச் சுவடிகளை படித்த முனிவர், ராஜராஜனின் நோய் நீங்கும், வம்சம் தழைக்கும் என்றெல்லாம் கூறி வந்தவர்காலத்தால் கோயில் சிதிலம் அடையாது இருக்க,  திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேருஎன்ற யாகத்தை செய்யச் சொன்னார்.


இந்த யாகம் 288 நாட்கள் நடைபெற்றது. சுமார் ஆறு மண்டல காலம். கோவிலை கைப்பற்றும் எண்ணத்தில் - மாற்று அரசர்கள், அமைச்சர்கள், அரசு பிரதானிகர்கள் யாரும், ஆலயத்துள் எவ்வகையில் நுழைந்தாலும் அவர்கள் சிம்மாசனத்தை இழப்பர்; குலம்  நசியும் என்று நந்தி மண்டபத்திலிருந்து அசரீரி ஒலித்தது. இதனாலேயே, பிரகதீஸ்வரன் சந்நதியுடைய தஞ்சை பெருங்கோயிலுக்கு அரசரோ, அவர் குடும்பத்தவரோ நுழைவது தீமை பயக்கும் என்கிறது, நாடி. இதனாலேயே மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களிடமிருந்து இந்தக் கோயில் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

இங்கே, அஷ்டதிக் பாலகர்கள் அமர்ந்து வழிபாடு செய்கின்றனர். ஆறு அடி உயரம் கொண்ட இந்திரன், வருணன், அக்னி, ஈசானன், வாயு, நிருதி, யமன், குபேரன் போன்ற விக்ரகங்களைக் காணலாம். இவை ஜீவன் உடையவை. கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 தேய்பிறை பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது நாடி.

வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், கண்டிப்பாக விமோசனம் உண்டு. நாடியும் இதைத்தான் சொல்கிறது:

‘‘பேரிடர்  நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான்  பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க்கே.’’

பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.


நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி,நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர்.


நடந்தவை எல்லாம், கதை, திரைக்கதை, வசனம் எழுதப்பட்ட ராஜ ராஜ சோழன் திரைப்படம் போன்று இருக்கிறது என்று சாதாரணமாக நினைத்துவிடப் போகிறீர்கள். நம் கண் முன்னே நிகழ்ந்த நிஜம் என்பதற்கு - கம்பீரமாக நிற்கும் இந்த பிரகதீஸ்வரர் சாட்சியாக நிற்கிறார்.



ரமணானுபவம்.........


அண்ணாமலையில் இன்றும் அற்புதமான ஆன்மீக அதிர்வுகளை ஏற்படுத்தும், மகத்தான இடம் ரமணர் ஆஷ்ரமம். மயில்களின் அகவலும், அண்ணாமலையின் கம்பீர அழகும், உங்கள் மனதில் என்றும் அகலாத ஓவிய கல்வெட்டாய் நிற்கும். இங்கு உள்ள தியான மண்டபத்தில், மனம் ஒருமுகப்படும் பரவசத்தை, நான் பலமுறை வியந்து அனுபவித்து இருக்கிறேன். அந்த மகானின் வாழ்வில் நடந்த , ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை , உங்கள் அனைவரிடம் பகிர்ந்துகொள்வதில், நான் பெருமைப் படுகிறேன்...


அவரது உபதேசங்களில் ஒரு நான்கு மட்டும் கீழே கொடுத்து இருக்கிறேன். இதை, நீங்கள் மனதில் அசை போட்டாலே , ஒரு பரவச நிசப்தத்தில் அமிழ்வது உறுதி.

நான் என்பது யார்..? நான் என்பதை அறிய முயலும் அந்த நான் யார்...? தேட ஆரம்பிங்க தங்கங்களே...!


படிச்சு முடிச்ச பிறகு, உங்களோட ஒரே ஒரு கெட்ட விஷயத்தை , உங்களால நிறுத்த முடிஞ்சா, அதுவே இந்த கட்டுரையின் மிகப் பெரிய வெற்றி...! அண்ணாமலையார் ஆசீர்வாதம்!  வாங்க உள்ளே போவோம்..!

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.


தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்என்ற ஞான உபதேசத்தை அருளியவர் பகவான் ரமணர். பாலப் பருவத்திலேயே திருவண்ணாமலையைத் தேடி வந்து தஞ்சம் புகுந்தவர். தனது இறுதிக் காலம் வரை அண்ணாமலையை விட்டு நீங்காதவர்.

ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை.

மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுஎன்றார்.

உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு சிறு சிறு உருண்டைகளாக்கிப் பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு எல்லாம் ரமணரருள்என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள்.

எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார். எதிலும் பற்றற்று இருப்பது தானே ஞானிகளின் இயல்பு.


 சதா ஞான நிலையிலேயே பகவான் இருந்து வந்த போதிலும் ஆசிரம வாழ்வில் அவருடைய நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.

ஒருநாள்…  விடியற்காலை மூன்றுமணி இருக்கும். மகரிஷியை பார்க்கச் சிலர் ஆசிரமத்திற்கு வந்தனர்.  ஆசிரமத்தில் யாரையும் காணாததால், அவர்கள் நேரே சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே ஆசிரம சமையல் பாத்திரங்களை ஒருவர் மெதுவாகக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம்,  ‘ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டனர்.

அதற்கு அந்த மனிதரும், ’, ரமணரா, இதோ இருக்கிறாரே, இதுதான் ரமணர்என்று சொல்லி, தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவர்களிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்காதோ என நினைத்துக் கொண்டு, மீண்டும் அதையே கேட்டனர்.

அதற்கு அந்த மனிதர் மீண்டும் தன் கையில் இருந்த அண்டாவைக் காட்டி,  ‘பாருங்கள்இதுதான் ரமணர். ரமண மகரிஷி என்று பேர் கூடப் பொறித்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்றார்.
வந்தவர்கள்இவர் யாரோ சித்த சுவாதீனமில்லாத மனிதர் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு தரிசன ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.
பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் பகவான் வருகிறார், பகவான் வருகிறார்என்ற குரல் கேட்டது.

அனைவரும்  மரியாதையுடன் எழுந்து நின்று பார்த்தனர், அங்கே பாத்திரம் தேய்த்த அந்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.
அவர் தான் பகவான் ரமணர் என்று அறிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. அதே சமயம், பகவான் ஏன் தங்களிடம் அப்படி நடந்து கொண்டார் என்று அறிய விரும்பினர்.  அவரை அணுகிக் காரணம் கேட்டனர்.
அதற்கு பகவான்,  ‘நான்தான் ரமணன்னு நெற்றியில எழுதி ஒட்டிக் கொண்டா இருக்க முடியும்.?’ என்று கேட்டார், புன் சிரிப்புடன். பின், ‘நான் என்பது இந்த உடலல்ல; இதைத் தான் நான் இத்தனை வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அப்படிச் சொல்லியும் என்ன பயன், எல்லோரும் அதை  உணராமல் இருக்கிறீர்களே!என்றார் வருத்தத்துடன்.

தங்களுக்காக வாழாமல் பிறர்க்காகவே வாழ்ந்ததால்தான் அவர்கள் மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.

மகான்களின் பெருமை பேசவும் இனிதே!



மனிதனை மாற்றும் மந்திரங்கள்....


மனதுக்கு திறம், திடம் கொடுப்பது தான் மந்திரம். மந்திர ஜெபங்களை - இந்த காரிய பலிதம் வேண்டும் என்று மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு, அதை மனதுக்குள் உருவேற்றும் போது - அது உங்கள் மனதை திடப் படுத்துகிறது.

அதன் பிறகு உங்கள் மனதில் ஏற்படும் ஒலியே - பல இன்னல்களை தகர்த்து , நீங்கள் விரும்பிய பாதையில் , உங்களை அழைத்துச் செல்கிறது.

கோபுரங்கள் கூம்பு வடிவத்தில் ஏன் அமைக்கப் பட்டு இருக்கின்றன? விண்ணில் விரவிக் கிடக்கும் நல் அலைகள் கோபுரத்தின் முக்கோண பரிமாண வடிவில் பட்டு , அங்கேயே சுழன்று கொண்டு இருக்கும்படி செய்வதற்காக , திட்டமிட்டே கோபுரங்கள் இந்த வடிவில் அமைக்கப் படுகின்றன. 

மனதின் சக்தி, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டது.அதே சமயம், அந்த மன சக்தியை ஒருநிலைப்படுத்திடவே மனிதனின் முன்னோர்கள், தெய்வீக சக்தியை பூமியில் சில குறிப்பிட்ட இடங்களில் குவியச்செய்து,அதன் மூலம் எல்லாமனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப் படுத்திட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

அலைந்து திரியும் மனதுடன் ஒருவர் இருந்தாலும், சக்தி வாய்ந்த இந்த கோபுரங்கள் அமைக்கப் பெற்ற ஆலயத்தில் ஒருவர் நுழையும்போதே , அவரது மனது சாந்தியும், சந்தோசமும் பெறுவது அங்கு நிலவும் இந்த தெய்வீக கதிர் வீச்சினால்தான்.  

ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் குரு ஓரையில் சித்தர்கள், மகான்கள், துறவிகளின் ஜீவ சமாதிகள், சதுரகிரி மலைப்பகுதி,சதுரகிரியின் கோவில் சன்னதி, திரு அண்ணாமலையின் கோவில்பகுதி, திருவண்ணாமலையின் கிரிவலப்பாதை, அஷ்ட லிங்கங்களின் சன்னதிகளில் அமர்ந்து பின்வரும் மந்திரத்தை 90 நிமிடங்கள் (முற்காலக் கணக்கின்படி ஒரு நாழிகை) ஜபித்துவரவேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான ஒவ்வொரு ஆலயமும், அற்புத சக்தி நிரம்பிய ஆலயங்களே.

இதனால்,முற்பிறவி கர்மம்,நம் முன்னோர்கள் செய்த கர்மம்(பாவம்) தீரும். அப்படித் தீர்ந்தாலே, நாம் செல்வச் செழிப்பின் உச்சத்தை நோக்கி நகரத் துவங்குவோம்.

அதற்குமுன்பாக, இந்த மந்திரத்தை ஒரு சிவ பக்தர் / சிவாச்சாரியார் / சைவச்சித்தாந்த மாணவர் / உங்கள் ஆஸ்தான ஜோதிடர் / உங்களது ஆஸ்தான துறவி / உங்களது ஆசிரியர் என யாரையாவது இதை ஒருமுறை வாசிக்கச் சொல்லி அதை நீங்கள் கேட்டு, குரு உபதேசம் பெற்றிருத்தல் அவசியம்.
சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும்
விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.

ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவானய நமஹ

நம் முன்னோர்கள் பல ஆராய்ச்சிக்குப் பிறகு , தெரிவித்த சில நல்ல அறிவுரைகளை கீழே கொடுத்துள்ளேன். நம் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத்
துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்
அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.

கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.

பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.

தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.

நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும். 
வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும்
மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.

கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.

கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும்
நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள், பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும். ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது. பணம், முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால், வாங்கியவர் வளமடைவார்.

கார்த்திகை,மகம்,உத்திரம்,சித்திரை,மூலம்,ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.

வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி, அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால் ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
======================================================

முருக பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அதி சூட்சும ஷண்முக மந்திரம்
ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

-இந்த மந்திரத்தை தினமும் முருகன் உருவப்படத்தின் முன்பு  11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும்.