Tuesday, 6 December 2011

மீனம் : 2012 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்




பூரட்டாதி - 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்த மீன ராசி நேயர்களே : 

ஜனவரி

இந்த மாதம் குடும்பத்தில் சச்சரவுகளும் சலசலப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் தவறாக நினைப்பார்கள். அவர்களின் நலனுக்காகத்தான் நீங்கள் பாடுபடுவீர்கள். மாமியார்- மருமகளுக்கிடையே பனிப் போர் நிலவி வரும். உங்களுடைய பாசத்தையும் அன்பையும் அவர்கள் புரிந்துகொள்ள அதிக நாட்கள் தேவைப்படாது. பிரச்சினைகள் பிரச்சினைகளாகவே இருந்துவிடாது. ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கத்தானே செய்யும். கூடிய விரைவில் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கத்தான் செய்யும்.

பிப்ரவரி

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற முறையில் உங்களுடைய திட்டங்களும் செயல்களும் நடக்கும். போட்டியும் பொறாமையும் எதிர்ப்பும் இடையூறும் நீங்கள் எந்தப் பக்கம் போனாலும் அந்தப் பக்கம் வழிமறைத்து நிற்கும். வீண் அபவாதங் களும் விமர்சனங்களும் உருவாகும். இவை எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். தசாபுக்திகள் பாதகமாக நடந்தால் கடன் தொல்லை மிகப் பெரிய கவலையாகவும் தொல்லையாகவும் இருக்கும்.

மார்ச்

உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் செயல்களிலும் திசை திருப்பத்தை உருவாக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்ய முடியும். ஆனால் மனைவி அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலக் குறைவாலும் அல்லது செயல்படமுடியாத தன்மையாலும் நிம்மதிக் குறைவும் சங்கடங்களும் ஏற்படும். மாதப் பிற்பகுதியில் உங்களுக்கு ஆறுதலான பலன்கள் அமையும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வைத்தியச் செலவும் கடன் தொல்லையும் பிரச்சினைகளும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏப்ரல்

உங்களுக்கு தெய்வ பலம் அதிகம் உண்டு. எந்த முயற்சியையும் விடாது செய்து வெற்றி காண்பீர்கள். வைராக்கிய மனம் பெற்ற நீங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதிகபட்ச விழிப்புணர்ச்சி காட்ட வேண்டும். சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பொல்லாதவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்கள் பின்னணியில் இருப்பார்கள். எடுத்த காரியத்தில் வெற்றிபெற சற்று கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும். அசதியும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த ஒற்றுமைக் குறைவு நீங்கி மகிழ்ச்சி கைகூடும்.

மே

அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்குக் குறைவிருக்காது. உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. என்றாலும் தேவையற்ற சங்கடங்களும் பிரச்சினைகளும் உங்களை டென்ஷனாக்கும். உங்களுக்கு என்று சொந்தப் பிரச்சினைகள் எது வந்தாலும் சமாளிப்பீர்கள். ஆனால் மற்றவர்கள் தங்கள் பிரச்சினைகளை உங்களிடம் வந்து ஒப்படைத்து, ஒட்டுவார் ஒட்டி நோய் தொட்டால் ஒட்டிக் கொள்வதுபோல உங்களை சம்பந்தப்படுத்தி இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். பாலைப் பார்ப்பதா? பானையைப் பார்ப்பதா என்று எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறும் நிலை உருவாகும்.

ஜூன்

பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இயற்கையாகவே உங்கள் உள்ளத்தில் பதிவாகியிருக்கும். நினைத்ததை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவதில் சில தடைகள் ஏற்பட்டு விலகும். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். பெயரும் புகழும் கூடும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆர்வத்தோடு சில காரியங்களைச் செயலாற்றுவீர்கள். எண்ணங்களை எளிதில் செயலாக்குவது இறை வழிபாடுதான். நெடுநாட்களாக நிறைவேற்றாமல் இருந்த தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்ற புனித யாத்திரை செல்லும் திட்டம் செயல்படும்.

ஜூலை

அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி அடையும். காரியங்களும் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறும். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் செலவுகளை மட்டும் கட்டுப்படுத்த முடியாது. வருவது தெரியும்; போவது தெரியாது. அதேசமயம் அவ்வளவும் கடன் வாங்கித்தான் செலவு செய்யும் சூழ்நிலையாக இருக்கிறது. வியாபாரமும் தொழிலும் நடக்கும். இருந்தாலும் ஏதோ பேருக்கு இருப்பதுபோல் இருக்கிறது. விலாசமும் போர்டும் இருக்கிறது. அதாவது வியாபார பணப்புழக்கம் இல்லை. கடையைக் காட்டி, உங்கள் செல்வாக்கைக் காட்டி கடன் வாங்கித்தான் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

ஆகஸ்ட்

உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை கடல் அலையைப் போலவும், சங்கிலித் தொடர்போலவும் வந்து வந்து நொந்துபோக வைக்கும். என்றாலும் எந்த ஆபத்தும் உங்களை அணுகாமல் தெய்வ அருள் காப்பாற்றும். நீங்கள் கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும், தெய்வசக்தி உங்களை வழிநடத்திச் செல்லும். ஆனால் சிலர் பெற்றோரை அல்லது குடும்பத்தைப் பிரிந்து செயல்பட நேரும். அல்லது சில வசதிக் குறைவுகளை அனுபவிக்க நேரும். சரியான தூக்க நேரத்தில் மின்தடை ஏற்பட்டு கொசுக்கடி நித்திரையைக் கெடுப்பதுபோல, வசதிக்குறைவு ஏற்படும்.

செப்டம்பர்

பணவரவு நன்றாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் நாணயத்தின் பேரில் நடக்கும். வீட்டில் இருந்து வந்த குழப்பங்களும் ஒற்றுமைக் குறைவும் மாறி கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். பொது நிகழ்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொள்வீர்கள். கவுரவம், புகழ் ஆகியவை மேலோங்கும். உறவினர்களால் சிறிது சிரமத்தையும், பொருள் விரயத்தையும் மேற்கொள்ள வேண்டிவரும். சகோதரர்களின் போக்கில் சற்று மாறுதல் தெரியும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்துசேரும். வியாபாரிகளுக்கு சற்று சுமாரான மாதமாக அமையும்.

அக்டோபர்

கடந்த மாதத்தைவிட இந்த மாதம் வியாபாரத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மாதம். எதிர்பாராத வகையில் வியாபாரம் நல்ல முறையில் பெருகும்; விருத்தியடையும். சிலர் குடியிருப்பை மாற்றுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய கடன்களே உங்கள் பணவரவைப் பூர்த்தி செய்யும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பெயரும் புகழும் உண்டாகும். சில பொது விவகாரங்களில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் தங்களை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புண்டு. வழக்கு விவகாரங்கள் வெற்றிகரமாக முடியும். புதிய வாகன முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

நவம்பர்

அநாவசிய அலைச்சலும் புதிய இடத்தில் தங்குதலும் தவிர்க்க முடியாதது; அதே சமயம் அவசியமானது. பணப் புழக்கம் சாதாரணமாக இருக்கும். பழைய கடன்களில் சில இப்போது தீர்க்கப்படும். சிறிது தாமதத்துடன் தங்களது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. போட்டி பந்தயங்களில் சிறிதளவே லாபம் தெரிகிறது. நண்பர்களால் செலவினங்கள் காணப்படுகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். இதுநாள் வரை போட்டிருந்த திட்டங்களில் சிறு சிறு மாறுதல்கள் ஏற்படும். உடல்நலனிலும் சற்று அக்கறை காட்டுவது நலம்.

டிசம்பர்

மனைவியின் சகோதரர் ஒருவரால் சிரமும் அலைச்சலும் ஏற்படும். தாயாரின் உடல் நலம் சற்று பாதிக்கக்கூடும். தந்தையின் வசதி பெருகும். பணவரவு நல்ல முறையில் அமையும். சிலர் தகப்பனார் வழக்கு விவகாரமாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அவ்வாறு சென்று வருவதன் மூலம் காரிய அனுகூலமும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தற்போதைய கம்பெனியைவிட அதிக சம்பளம் வரக்கூடிய வேலை வாய்ப்புகளும் பிற கம்பெனியின் மூலம் எதிர்பார்க்கலாம்.



No comments:

Post a Comment