விஜயதசமி அன்று போரூர் சேது க்ஷத்திரத்தில் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் "கடவுளை நேரில் கண்டவர்கள்' என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். கருத்தாழமிக்க அச்சொற்பொழிவின் தொகுப்பு:
வழிபாட்டு முறைகள் உருவ வழிபாடு, அருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு என்று மூன்று வகைப்படும். தனக்குப்பிடித்த தெய்வத்தை, தனக்கு விருப்பமான வடிவத்தில் வழிபடுதலே உருவ வழிபாடாகும். கண்ணுக்குத் தெரியாத சக்தியாக, கடவுள் சக்தியை போற்றி வழிபடுவது அருவ வழிபாடு.
அருஉருவ வழிபாடு என்பது வடிவம் மட்டும் கொண்டு, கண், காது போன்றவைகளின்றி வழிபடுவது. சிவலிங்க வழிபாடு அருஉருவ வழிபாட்டு வகையைச் சேர்ந்தது. உயிர்கள் எல்லாவற்றிலும், இறைச்சக்தி உறைந்து இணைந்துள்ளது என்ற அடிப்படைத் தத்துவத்தை விளக்கும் நோக்கிலேயே, நவராத்திரி விழாவில் கடவுள் வடிவில் மட்டுமின்றி பிராணிகள் செடிகொடி மரங்கள், என எல்லா வடிவங்களிலும் பொம்மைகளை வைத்து நாம் வழிபடுகிறோம்.
இந்த யுகத்திலும் நம்மோடு வாழ்ந்த பல ஞானிகள், கடவுளை நேரில் கண்டுள்ளார்கள். அத்தகைய ஞானிகளை மக்கள் கடவுளாகவே பாவித்து, வழிபட்டு அவர்கள் காட்டிய நல்வழியில் நடக்கிறார்கள். அத்தகைய ஞானிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் வடஇந்தியாவைச் சேர்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், தென்னிந்தியாவின் ராமலிங்க வள்ளலார், வடக்கில் பிறந்து வளர்ந்தாலும், தெற்கில் தன் ஆன்மீகப் பணியைச் செய்த அரவிந்தர்.
இவர்கள் மூவரின் வரலாற்றிலும், இவர்கள் கடவுளை நேரில் தரிசித்ததைத் தேதி வாரியாகப் பதிவு செய்துள்ளார்கள். அறுபத்து நாலுவித சாதனைகளில் தோய்ந்திருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், அனுமத் உபாசனைக்காக மரத்திலேயே பலகாலம் தவமிருந்து வாழ்ந்தார். குரங்குகள் போலவே மரத்திலேயே தேங்காய் உண்டார். உபாசனையை முடித்து, மரத்திலிருந்து கீழே வந்தபோது, அவருடைய முதுகுத் தண்டு வால்போல் தொங்கிவிட்டது. சில நாட்கள் கழித்தே முதுகுத் தண்டு சாதாரண நிலைக்குத் திரும்பியது. இவ்வாறு பக்தியில் பரிபூரணமாக ஒன்றிப்போகும் பக்குவ நிலையை அடைந்துவிடும் பரமஹம்சர், காளி கோயிலில் அர்ச்சனை செய்து வாழ்ந்து வந்தார். வெறும் கற்சிலையாக இல்லாமல், காளியை உயிர்த் துடிப்போடு கண்டவர் பரமஹம்சர். நிவேதனங்களைக் காளிக்கு அவர் ஊட்டிவிட, காளியும் உண்டு மகிழ்வாள். கங்கையில் குளித்த மகா காளி, கோவில் கோபுரத்தின் மேல், தன் கூந்தலை உலர்த்தி, முடியைச் சீவுவதை நேரில் கண்டார். வள்ளல் மதுர்பாபு என்பவர், பரமஹம்சர் நடந்து செல்லும்போது காளியாகவும், திரும்பி நடந்து வரும்போது பரமசிவனாகவும் காட்சியளித்ததைக் கண்டு நெகிழ்ந்து தன் வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்.
வள்ளலார், திருவொற்றியூரில் குடிகொண்டுள்ள வடிவுடை அம்மனை நேரில் காணத் தவமிருந்தார். மிகச் சிறுவயதிலேயே இறை நாட்டம் கொண்ட வள்ளலார், ஒருநாள், இரவெல்லாம் ஆலயத்தில் அம்மன் சந்நிதியில் தியானத்தில் இருந்து, நடு இரவுக்குப் பின் வீட்டுக்குவந்து, அன்னை ஸ்தானத்தில் தன்னை வளர்க்கும் அன்பு அண்ணியை தொந்தரவு செய்யலாகாது என்று வாசல் திண்ணையிலேயே பசியோடு படுத்துறங்கினார். அந்த நடுநிசியில் ஜொலிக்கும் முகத்தோடு, அன்பு நிறைந்து, அண்ணியின் உருவில் வடிவுடை அம்மன் வந்து, வள்ளலாரை எழுப்பி, தாயாகவே மாறி பசியைப் போக்கினாள். மறுநாள் தனக்கு காட்சியளித்தது அண்ணியல்ல, அம்பிகை எனத் தெரிந்து கொள்கிறார் வள்ளலார்.
அரவிந்தர், நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டபோது, சிறையிலடைக்கப்பட்டார். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட அரவிந்தர் சிறையிலிருந்த ஓராண்டு காலமும், கிருஷ்ண பகவானைத் தியானம் செய்தவாறே இருந்தார். சிறையில் கைதிகளுக்குத் தலையில் தடவிக் கொள்ளத் தேங்காய் எண்ணெய் கொடுக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் அரவிந்தரின் தலைமுடிகள் எண்ணெய் தடவி பளபளவென்றிருக்கும். இதுபற்றி அரவிந்தரிடம் கேட்டபோது, தனது தியான சக்தியின் பலனாய், இயற்கையிலேயே, காற்றிலிருந்து தேவையானவற்றை தன் உடல் பெற்றுக்கொண்டுவிடும் எனக் கூறினார். இந்த அரிய செய்தியை அவருடனிருந்த பண்டித உபேந்திர நாத் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் தியானத்திலிருந்த அரவிந்தருக்கு, கண்ணன் புல்லாங்குழலோடு காட்சியளித்தார். தரிசனம் தந்ததோடு மட்டுமில்லாமல், சிறையிலேயே அரவிந்தருக்கு கீதையும் போதித்தார். பகவான் கிருஷ்ணர் போர்முனையில் அர்ச்சுனனுக்குக் கீதையை விளக்கிய கண்ணன், சிறையில் அரவிந்தருக்கு கீதையை போதித்தார். இந்தச் செய்தியை, அரவிந்தர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
இதைச் செய்தித்தாள்களில் கண்ட மகாகவி பாரதியார், தன்னுடைய "இந்தியா' பத்திரிகை நிருபர் ஒருவரைக் கல்கத்தாவுக்கு அனுப்பி, அரவிந்தரிடம் கிருஷ்ணரை நேரில் பார்த்த விவரங்களைக் கேட்டறிந்து வரச்சொன்னார். அரவிந்தர், தான் சூட்சும ரூபத்தில் புல்லாங்குழல் ஊதும் கண்ணனைத் தரிசித்தது உண்மை என்றும், பகவானைத் தொட்டு பேசிய அனுபவத்தையும் விளக்கினார். திரும்பி வந்த நிருபர், பாரதியாரிடம் தன் அனுபவங்களைச் சொன்னபோது அரவிந்தரின் முகம் எப்படி இருந்ததெனக் கேட்டார். அதற்கு நிருபர், நெகிழ்ச்சியுடன் பேசிய அரவிந்தரின் முகம் பரிபூரண அடக்கத்துடன் அமைதியாக இருந்ததெனச் சொன்னார்.
பாரதியார், "இந்தியா' இதழில், அரவிந்தரை "கடவுளை நேரில் கண்ட சித்தபுருஷன்' என்று குறிப்பிட்டார்.'' சொற்பொழிவின் முடிவில், திருப்பூர் கிருஷ்ணன், "கடவுள் நமக்குத் தாய் போல, கேட்டதெல்லாம் தருபவள்' என்று சொல்லி, பாண்டிச்சேரியில் வாழ்ந்த ஸ்ரீ அன்னை, மணக்குள விநாயகரிடம், பக்தியோடு மனமுருகி தன் அன்பர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிட, அயல் நாட்டார் ஒருவர் அளித்த நன்கொடையில் உடனே அவர்கள் குறைகள் தீர்க்கப்பட்ட நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்தார்.

No comments:
Post a Comment