Thursday 20 October 2011

தோஷம், தடை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்


கோவையில் இருந்து மருதமலை செல்லும் வழியில்  நவாவூர் பிரிவில் இருக்கும் ஸ்ரீராம்நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கம்பீரமாக காட்சியளிக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள் பாலிக்கிறார். இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் செல்கிறார்கள்
 
பக்த ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயராக அவதாரம் எடுத்தது ஏன்ப  பஞ்ச பூதங்கள் கொண்ட இந்த  உலகில்  காக்கும் தொழிலை  செய்பவர் பகவான்  நாராயணன். அவரது  கையில்  உள்ள சுதர்சன சக்கரத்தை அபகரிக்க முயன்றான் மயில் ராவணன்.
 
அவன் எண்ணிய படியே அபகரித்தும் சென்று விட்டான். அதை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர். நேர்மைக்கு பெயர் போனவர் ஆஞ்சநேயர். அவருடன் எதிரில்  நின்று போர் புரிந்து யாராலும் வெற்றி காண முடியாது.
 
மயில் ராவணன் சகல சக்திகளிலும் உருமாறும் நிலையில் உள்ளவன். அவனாலும்  ஆஞ்சநேயரை போரில்  எதிர்கொள்ள முடியவில்லை. எனவே பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை   தாக்கினான். இந்த தாக்குதலை அனுமனால் எதிர்கொள்ள முடிய வில்லை.
 
இதை அறிந்த எம்பெருமான் நாராயணன் ஆஞ்சநேயரை அழைத்து உபதேசித்தார். மயில்ராவணன் சகல சக்திகளாக உருமாறும் நிலையை கொண்டவன். அவனை உன்னால் மட்டும் எதிர் கொண்டு வெற்றியடைய முடியாது. ஆதலால் அவன் பறவையாக மாறினால் அதை எதிர் கொள்ள நீ கருடனாகவும், மிருகமாக மாறினால் மிருகமாகவும் அவதாரம் எடுக்க வேண்டும்.
 
மயில் ராவணன் பூமிக்கு அடியிலோ, கடலுக்கு அடியிலோ மறைந்து  தாக்கினால் அதனை துச்சமாக மதித்து தாக்க வராக மூர்த்தியாக  அவதரிக்க வேண்டும். சமயோசிதமாக யோசித்து செயல்பட ஹயக்ரீவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து கொடுக்கிறேன்.
 
இந்த 4 சக்திகளோடு உன் பலத்தையும் கொண்டு மயில் ராவணனை நீ வெல்வாய் என்று சொல்லி கருடன், நரசிம்மர், வராகமூர்த்தி, ஹயக்கிரிவர் ஆகிய தனது 4 அவதார சக்திகளை வழங்கினார். மறுகனமே ஆஞ்சநேயர்  பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.
 
இந்த அவதாரத்தை கண்ட பார்வதி பத்மத்தையும், பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணையும், கருடன் தனது இறக்கைகளையும், ராமன் தனது வில் மற்றும் அம்பையும், சரஸ்வதி தனது ஸ்படிக மாலையையும், லட்சுமி தனது சக்திகளையும், மற்ற தெய்வங்கள் தங்கள் சக்திகளையும், ஆயுதமாக வழங்கினார்கள்.
 
ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் இந்த சக்தியையும், ஆயுதங்களையும் கையில் ஏந்தி மயில் ராவணனை எதிர்கொண்டு வெற்றி பெற்று ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் பாதக் கமலங்களில் சமர்ப்பித்து தலை வணங்கினார்.
 
இதுவே பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஆன்மீக வரலாறு. மருதலை ரோடு நவாவூர் பிரிவு ஸ்ரீராம் நகரில் குடிகொண்டுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் சகல தெய்வங்களையும் வணங்கி அருள்பெற்ற பலன் கிடைக்கும். ஆஞ்சநேயரை வணங்கினால் தோஷம், தடை, சத்ரு இல்லாமல் இருந்தால் மட்டும் காரியசித்தி அருளுவார்.
 
ஆனால் பஞ்சமுக ஆஞ்சநே யரோ தடை, சத்ரு, தோஷம் இருந்தாலும் அதையெல்லாம் முறியடித்து காரியசித்தி அருளுவார்.     கோவில் பூஜை முறை குறித்து பஞ்சமுக ஆஞ்சநேயா டிரஸ்ட் தலைவர்  கே.எஸ்.ராமன் கூறியதாவது:- தினமும் காலை 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.
 
மதியம் 12 மணி வரை நடை திறந்திருக்கும். பின்னர் நடை சாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும் வரை பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கிறார்கள். சனிக்கிழமை ஆஞ்ச நேயருக்கு உகந்த நாள் என்பதால் அன்று கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.
 
அன்று பக்தர்கள் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடு கிறார்கள். பெண் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி மனமுருக அனுமனை வேண்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் வெற்றிலை மாலை அணிவித்தும், வெண்ணை சாத்தியும் வழி படுகிறார்கள். சில பக்தர்கள் வடை மாலை அலங்காரம் செய்து மகிழ்கிறார்கள்.
 
சந்தனம் மற்றும் செந்தூர அலங்காரத்திலும் ஆஞ்சநேயர் அருள் பாலிப்பது கண் கொள்ளா காட்சியாகும். பஞ்சமுக ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனவே மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
 
இதனை காண பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். அவர்கள் பசியாற அன்ன தானம் வழங்கப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் காத்திருந்து பசியாறிச் செல்கிறார்கள். புரட்டாசி 3-வது சனிக்கிழமை பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மிகவும் சிறப்பான நாளாகும்.
 
அன்று 10 ஆயிரத்து 8 வடை மாலை அவருக்கு சாத்தப்படுகிறது. இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அழகுற ஜொலிப்பதை தரிசிக்க திரளான பக்தர்கள் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.         

No comments:

Post a Comment