Friday 21 October 2011

பேசும் அனுபவங்கள்

எந்தப் பிரச்சினையையும் கடக்கும்போதுதான் வலிக்கும்.பின்னர் நினைக்கும்போது அது ஒரு சுகமான தழும்பு.
----------------------------------------------------------
வெற்றி,தோல்வி இரண்டுமே விளையாட்டின் முடிவுகள்தான்.நமக்குத் தேவை விளையாட்டின் முடிவுகள் அல்ல.விளையாடும்போது கிடைக்கும் அகமகிழ்வும் பரபரப்பும்தான்.வெற்றி தரும் கரவொலி மைதானத்தில் தங்கி விடுவதில்லை.அது ஒரு நிமிட நேர மகிழ்ச்சி.
------------------------------------------------------------
தொட்டால் சிணுங்கி இலை கூட நாம் விரலால் தொட்டால்தான் சுருங்கிக் கொள்கிறது.ஆனால் ஒன்றைப் பற்றி மோசமாக நினைத்தாலே போதும்.உடனே மனம் சுருங்கி விடுகிறது.மனிதன் தான் இன்னும் புரிந்து கொள்ள முடியாத தாவரம்.
-------------------------------------------------------------
பயம் என்பது என்ன?  தைரியக் குறைவுதான்.
பயத்திலிருந்து வெளியேறுவது எப்படி?பயத்தை தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள்.
எது புகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட நிறைகள்.
எது இகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட குறைகள்.
யார் வாலிபர்? மாறாத குதூகலத்தோடு இருப்பவர் வயதில் கிழவர் கூட வாலிபர்தான்.
யார் கிழவர்? குதூகலமில்லாதவர் வாலிபராயிருந்தாலும் கிழவர்தான்.
---------------------------------------------------------------
ஒரு ஆப்பிளுக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கலாம்.ஒரு விதைக்குள் எத்தனை ஆப்பிள்கள் இருக்கின்றன என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
----------------------------------------------------------------
உலகம் முழுவதும் மனிதர்கள் பல மொழிகளில் பேசுகிறார்கள்.ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.
-----------------------------------------------------------------
பலர் வெற்றியைக் கனவு காண்கிறார்கள்.ஆனால்
சிலர் அதற்காக உழைக்கக் கிளம்பி விடுகிறார்கள்.
--------------------------------------------------------------------
எல்லோரிடமும் அழகு இருக்கிறது.ஆனால்
எல்லோராலும் அதைப் பார்க்க முடிவதில்லை
-------------------------------------------------------------------------
உங்கள் மனமே நீங்கள் விரும்பியபடி இயங்காதபோது மற்றவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்ப இயங்கவில்லை என்று கோபம் கொள்வது என்ன நியாயம்?
--------------------------------------------------------------------------
எப்போதும் நம் எதிர்பார்ப்புக்கு ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள்.உங்களையும் இதே காரணத்துக்காக முட்டாளாகப் பார்க்க நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
---------------------------------------------------------------------------
ஒவ்வொரு பாலைவனத்திலும் ஒரு சிறிய பசுமையான  சோலையாவது இருக்கிறது.ஆனால் எல்லா ஒட்டகத்தாலும் அதைக் கண்டு பிடிக்க முடிவதில்லை.
------------------------------------------------------------------------------
தான் கூவுவதைக் கேட்பதற்காகத்தான் சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால் அதுதான் அகந்தை.
---------------------------------------------------------------------------
அற்பப் பொருளுக்கும் மதிப்பு உண்டு.சிறு ஊசிதான் தையற்காரருக்கு உணவு அளிக்கிறது.
--------------------------------------------------------------------------------
பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்.
தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
---------------------------------------------------------------------------
ஆண்களின் மனம் பளிங்காக இருக்கிறது.
பெண்களின் மனம் மெழுகாக இருக்கிறது.
---------------------------------------------------------------------------
எது தேவை?
தீர்மானிக்க மனம்.
வழி வகுக்க அறிவு.
செய்து முடிக்கக் கை.
---------------------------------------------------------------------------
ஆரோக்கியம் அற்புதமானது என்பதை
நோயுற்றுக் கிடக்கும்போதுதான் உணருகிறோம்.
---------------------------------------------------------------------------
நாம் நல்ல வசதியுடன் இருக்கும்போது நண்பர்கள் நம்மைப்பற்றித் தெரிந்து கொள்கிறார்கள்.
நம்மிடம் வசதி குறையும்போதுதான் நாம் நம் நண்பர்களைப்பற்றித் தெரிந்து கொள்கிறோம்.
---------------------------------------------------------------------------
ஒருவன் எப்போதும் வீரனாய் இருக்க முடியாது.ஆனால்
ஒருவன் எப்போதும் மனிதனாய் இருக்க முடியும்.
---------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் இயல்பை அறிய வேண்டுமானால் அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப்  பாருங்கள்.
---------------------------------------------------------------------------
குற்றம் என்னும் புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
---------------------------------------------------------------------------
வயது செல்லச்செல்ல தோல் சுருங்கி விடுகிறது.-ஆனால்
மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடும்.
---------------------------------------------------------------------------
சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம்.
---------------------------------------------------------------------------
நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்.
பூ என்பது காயையும் சேர்த்துத்தான்.
கடல் என்பது நுரைகளையும் சேர்த்துத்தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்.
---------------------------------------------------------------------------
மீனுக்குக்கூடத் தொல்லை வராது-அதுதன்
வாயை மூடிக் கொண்டிருந்தால்.
---------------------------------------------------------------------------
சின்னக் கவலைகள் என்பது கொசு போல:
ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.
---------------------------------------------------------------------------
மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே உண்டு.
ஒன்று திறமையானவர்கள்.
இரண்டு,திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
---------------------------------------------------------------------------
முகத்தை அழகாக வைத்துக்கொள்ள
செலவில்லாத ஒப்பனை புன்னகை.
---------------------------------------------------------------------------

ஆசைப்படுவது மனம்.
ஆசைப்பட வைப்பது புத்தி.
அவதிப்படுவதோ உடல்.
---------------------------------------------------------------------------
உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் உள்ளது.
---------------------------------------------------------------------------
இவ்வளவு நீண்ட வாழ்வில் ஒரே ஒரு முறைதான் சாகிறோம்.
---------------------------------------------------------------------------
கோபத்தில் ஆரம்பமாவது எல்லாம்
இறுதியில் வெட்கப்படும்படி முடியும்.
---------------------------------------------------------------------------
ஆபத்து பயத்தையும்,பயம் அதைவிடப் பெரிய ஆபத்தையும் தருகிறது.
---------------------------------------------------------------------------
வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம்,தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல:மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்றுதான்.
---------------------------------------------------------------------------
தன செயலுக்குத்  தானே சிரிக்காதவன் \
மற்றவர்களிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுகிறான்.
---------------------------------------------------------------------------
'என் அபிப்பிராயத்தை சொல்லவா?'என்று யாரேனும் ஆரம்பித்தால் நிச்சயம் அவர் உங்கள் கருத்துக்கு மாறான கருத்தை சொல்லப் போகிறார் என்று பொருள்.
---------------------------------------------------------------------------
தம்மிடம் இல்லாத பணத்தைக் கொண்டு
தமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி அடுக்கி
தமக்குத் தெரியாதவர்களைக் கவர எண்ணுவது
பலருக்கும் வாடிக்கை ஆகி விட்டது.
---------------------------------------------------------------------------
நமக்கு எது வசதி என்பதில்
எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.
---------------------------------------------------------------------------
நகைச்சுவை உணர்வு நிரம்பிய மனிதன்,மென்மையான இலவம் பஞ்சு அடைத்த தலையணை போன்றவன்.அவனும் லேசாக இருப்பான்.அடுத்தவருக்கு இதமாகவும் இருப்பான்.
---------------------------------------------------------------------------
தைரியம் என்பது அச்சம் இன்றி இருப்பது அல்ல.பயந்தபின்,
அந்த நிகழ்வை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பதுதான்.
---------------------------------------------------------------------------
பயம் கதவைத் தட்டுகிறதா?நம்பிக்கையை எழுந்து போய் கதவைத் திறக்க சொல்லுங்கள்.வெளியே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
---------------------------------------------------------------------------
வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும்  அனுபவித்து விடுங்கள்.
நாளை,ஒருவேளை,திரும்பிப் பார்க்கையில் அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத் தெரியும்.
---------------------------------------------------------------------------

நீங்கள் வயதாவதால் சிரிப்பை நிறுத்துவதில்லை.
நீங்கள் சிரிப்பை நிறுத்துவதால்தான் வயதானவராகிறீர்கள்.
---------------------------------------------------------------------------

கற்பனைதான் மிக உயரத்தில்  பறக்கக்கூடிய பட்டம்.
---------------------------------------------------------------------------
பொய் சொல்வது என்பது
ஒரு சிறுவனைப் பொறுத்த மட்டிலும் அது தவறு;
ஒரு காதலனைப் பொறுத்த மட்டிலும் அது ஒரு கலை.
ஒரு மணமானவனைப் பொறுத்த மட்டிலும் அது இயற்கை.
---------------------------------------------------------------------------
ரசித்ததை பொறாமை காரணமாக பாராட்டாத ஒருவன்
கொலைகாரனுக்கு சமமாவான்.
---------------------------------------------------------------------------
ஒரு விஷயம் மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதில் ஏற்படும் அவமானம் பற்றிப் பேசாதே;அந்த ஒன்று இருப்பதே அவமானம் தானே.
---------------------------------------------------------------------------
இங்கிதம் தெரியாத பெண்ணுக்கு
சங்கீதம் தெரிந்து என்ன பயன்?
---------------------------------------------------------------------------
கடமையைச்செய்;மௌனமாக இருப்பதே அவதூறுக்கு சரியான பதில்.
---------------------------------------------------------------------------
மனிதனுடைய ஆசைகளுக்கு அளவில்லை;அதேபோல அவனுடைய ஆற்றல்களுக்கும் அளவில்லை.
---------------------------------------------------------------------------
கிளிகள் கூண்டில் அடைக்கப்படுகின்றன.காக்கைகளோ உல்லாசமாகத் திரிகின்றன.நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள்;அல்லாதவர்கள் சுகப்படுகிறார்கள்.
---------------------------------------------------------------------------
நமது கெட்டிக்காரத்தனம் நமது அனுபவத்தில் இருந்து வருகிறது.
நமது அனுபவமோ நமது முட்டாள்தனத்திலிருந்து வருகிறது.
ஆக நமது கெட்டிக்காரத்தனம் நமது முட்டாள்தனத்திலிருந்தே வருகிறது.
---------------------------------------------------------------------------
பேச்சில் ஆழம் அதிகம் இல்லாதபோது நீளம் அதிகமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------
வலி இல்லையா?கை இல்லை.
முள் இல்லையா?சிம்மாதனம் இல்லை.
துன்பம் இல்லையா?புகழ் இல்லை.
சிலுவை இல்லையா?மகுடம் இல்லை.
---------------------------------------------------------------------------
சும்மா எச்சரிக்கையுடன் நின்று கொண்டிருந்தால் மட்டும் உலகில் உங்களுக்கென்று தனி இடம் கிடைத்து விடாது.தாக்குங்கள்;அடிபடுங்கள்;அப்போதுதான் கிடைக்கும்.
---------------------------------------------------------------------------
ஏமாற்றுக்காரனை ஏமாற்றுவது எமாற்றமல்ல.
---------------------------------------------------------------------------
சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்;அவற்றைக் கிளிசல்கலாகவும்,அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!
---------------------------------------------------------------------------
பாதிப்பணக்காரன் ஆகி விட்டால் முழுப் பணக்காரன் ஆவது எளிது.
---------------------------------------------------------------------------
சட்டங்களை சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன.
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
---------------------------------------------------------------------------
நீ விரும்புவதை செய்வதில் உன் சுதந்திரம் அடங்கி உள்ளது.
நீ செய்வதை விரும்புவதில் உன் மகிழ்ச்சி அடங்கி உள்ளது.
---------------------------------------------------------------------------
மனிதன் பகுத்தறிவு சொல்கிறபடி நடப்பதில்லை.
ஆசை சொல்கிறபடிதான் நடக்கிறான்.
---------------------------------------------------------------------------
குழந்தை இளமையாய் இருக்கும்போது பெற்றோருக்குத் தலைவலி.
அதுவே வயதாகிவிட்டால் பெற்றோருக்கு நெஞ்சுவலி.
---------------------------------------------------------------------------
விளையாடி விளையாடி இறந்து போனவர்கள் உண்டு:
சாப்பிட்டு சாப்பிட்டு இறந்து போனவர்கள் உண்டு:
குடித்துக் குடித்து இறந்து போனவர்கள் உண்டு.ஆனால்
சிந்தித்து சிந்தித்து இறந்து போனவர்கள் யாருமில்லை.
---------------------------------------------------------------------------
குறுகலாகப் பார்த்தால் குறுகலாகத் தெரியும்.
மட்டமாகப் பார்த்தால் மட்டமாகத் தெரியும்.
சுயநலத்தோடு பார்த்தால் சுயநலமாகத் தெரியும்.
பரந்த,தாராளமான சிநேகிதமான மனத்தோடு
பாருங்கள்.அற்புதமான மனிதர்கள் உங்கள்
கண்ணில் படுவார்கள்.
---------------------------------------------------------------------------
துரதிருஷ்டம் இரண்டு வகை:
ஒன்று நமக்கு வரும் துரதிருஷ்டம்.
மற்றது பிறருக்கு வரும் அதிருஷ்டம்.
---------------------------------------------------------------------------
உயர்ந்த மனிதன் மூன்று நெறி அம்சம் உடையவன்.
அவன் ஒழுக்கமானவன்.
ஆகவே அவன் கவலைகளிலிருந்து விடுபட்டிருக்கிறான்.
அவன் அறிவாளி:
ஆகவே குழப்பங்களிலிருந்து விடுபட்டிருக்கிறான்.
அவன் தைரியசாலி.
ஆகவே அச்சத்தினின்றும் விடுபட்டிருக்கிறான் .
---------------------------------------------------------------------------
ஒரு மனிதனுக்கு என்ன நடந்ததோ
அது அனுபவமாகி விடாது.
தனக்கு நடந்ததை வைத்து அவன் என்ன
செய்கிறான் என்பதுதான் அனுபவம்.
---------------------------------------------------------------------------
அவனுடைய வேலையை நான் இன்னும் நன்றாகச் செய்வேனே,இவனுடைய வேலையை இன்னும் பிரமாத மாகச்  செய்வேனே என்று எண்ணி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் உங்கள் கையிலுள்ள வேலையை இன்னும் நன்றாகச் செய்யுங்கள்.
---------------------------------------------------------------------------
குழந்தை வளர்ப்புதானே! அது ரொம்ப சுலபமான வேலை!குழந்தை நம்முடையது அல்ல:பிறருடையது என்று பாவித்துக் கொள்ள வேண்டும்.அவ்வளவுதான்!பிறருடைய குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது தெரியாதவன் எவனுமே இவ்வுலகில் இல்லை!
---------------------------------------------------------------------------
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி நினைக்காததை  எல்லாம் நினைப்பதாக நீங்களே நினைத்துக் கொள்வீர்கள்.
---------------------------------------------------------------------------
அன்பு டெலஸ்கோப  வழியாக எதையும் பெரிதாகப் பார்க்கிறது.பொறாமை மைக்ராஸ்கோப  வழியாகச் சின்னதாகப் பார்க்கிறது.
---------------------------------------------------------------------------
இரண்டு பொருட்களை நாம் இழந்த பிறகுதான் அதன் மதிப்பை உணர்கிறோம்.ஒன்று ஆரோக்கியம்,மற்றொன்று  இளமை.
---------------------------------------------------------------------------
வீரம் உள்ளவன் என்று பாராட்டப்படுபவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் தைரியசாலி அல்ல.சாதாரண மனிதனைக் காட்டிலும் பத்து நிமிடம் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கிறான்.அவ்வளவுதான்.
---------------------------------------------------------------------------
அனுபவம் என்பது ஒரு புது விதமான ஆசிரியர்.அது பாடங்களைக் கற்றுத் தந்தபின் தேர்வு வைப்பதில்லை.தேர்வின் மூலம் தான் பாடங்களைக் கற்றுத் தருகிறது.
---------------------------------------------------------------------------
வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற அளவுக்கு இன்பங்களும் மடிந்தே ஆக வேண்டும் என்ற அளவுக்குத் துன்பங்களும் சம விகிதத்தில் கலந்ததே இவ்வுலகம்.
---------------------------------------------------------------------------
சொர்க்கம் தாயின் காலடியில் இருக்கிறது.
வணக்கங்களின் தாய் பாவங்களை விடுதல்.
பேராதரவின் தாய் பொறுமையாய் இருத்தல்.
மருந்துகளின் தாய் குறைவாகச் சாப்பிடுதல்.
ஒழுக்கங்களின் தாய் குறைவாகப் பேசுதல்.
---------------------------------------------------------------------------
ஒரு மனிதன் தினம்,
கொஞ்சம் சங்கீதம் கேட்க வேண்டும்.
ஒரு நல்ல கவிதையைப் படிக்க வேண்டும்.
சிறந்த ஓவியத்தைப் பார்க்க வேண்டும்.
முடிந்தால் அர்த்தத்தோடு சில வார்த்தைகள் பேச வேண்டும்.
---------------------------------------------------------------------------
இளமை ஒரு குழப்பம்:
வாலிபம் ஒரு போராட்டம்:
முதுமை ஒரு மனமிரக்கம்.
---------------------------------------------------------------------------
சுடத் தெரியாதவன் கையில் துப்பாக்கி இருந்தாலும் சுடத்தெரிந்தவன் அவனிடம் சரணடைகிறான்.ஆட்சி ஒரு முட்டாளிடம் இருந்தால் கூட அறிவுள்ளவனும் அவனுக்கு அடி பணிகிறான்.
---------------------------------------------------------------------------
கிடைக்காதவரை எது பெரிதாகத் தோன்றுகிறதோ
கிடைத்ததும் எது அற்பமாகத் தோன்றுகிறதோ,
மேலும் கிடைக்காதா என்று எது ஏங்கச் செய்கிறதோ,
அது ஆசை எனப்படும்.
---------------------------------------------------------------------------
அதிகமாகக் கடன் வாங்கும் தந்தை மகனுக்கு எதிரி:
வாயாடியான தாயார் பெண்ணுக்கு எதிரி.
மிகவும் அழகான பெண் கணவனுக்கு எதிரி:
ஆமாம் போடும் அமைச்சன் அரசனுக்கு எதிரி.
---------------------------------------------------------------------------
தாய் நாட்டை நேசிப்பது இயல்பு.
மனித குலம்முழுவதையும் நேசிப்பதே சிறப்பு.,
---------------------------------------------------------------------------
நல்லவனாக இருப்பது எளிது:
நேர்மையானவனாக இருப்பது கடினம்.
---------------------------------------------------------------------------
நம் மனச்சான்று தவறு செய்யாத நீதிபதி.
---நாம் இன்னும் அதைக் கொல்லாமல் இருந்தால்.
---------------------------------------------------------------------------
சிறு புண்களையும்,ஏழை உறவினர்களையும்
ஒருபோதும் அலட்சியப் படுத்தி விடக்கூடாது.
---------------------------------------------------------------------------
எந்தச்செய்தியையும் எப்படிச்சொன்னாலும் நம்பாத மக்களை நம்ப வைப்பதற்கு சிறந்த வழி,கிசுகிசுவெனப் பேசுவதுதான்.
---------------------------------------------------------------------------
ஒவ்வொருவர் கையிலும் தராசு:
தன்னை எடை போட இல்லை.
---------------------------------------------------------------------------
நாயுடன் உறங்குபவன் உண்ணியுடன் எழுந்திருப்பான்.
---------------------------------------------------------------------------
நூறு அசடுகளுக்கு தலைவனாய் இருப்பதைவிட
ஒரு அறிவாளிக்கு அடிமையாய் இருப்பதே மேல்.
---------------------------------------------------------------------------
மனிதன் பாவம் செய்யாத நேரம்
அவன் தூங்கும் நேரம்தான்.
---------------------------------------------------------------------------
சீவப்பட்ட பென்சில் அழகாக எழுதுகிறது.அனுபவங்களால்
காயப்பட்ட மனிதன் உயர்ந்த தத்துவங்களைப் பேசுகிறான்.
---------------------------------------------------------------------------
அறிவுரை என்பது விளக்கெண்ணெய் போல.
கொடுப்பது சுலபம்.ஏற்றுக் கொள்வது கடினம்.
---------------------------------------------------------------------------
குழந்தைகள் ஈரமான சிமெண்ட் மாதிரி.அதன் மேல் எது விழுகிறதோ ,
அது ஆழப் பதிந்து விடும்.
---------------------------------------------------------------------------
ஓடிச் செல்வதில் பயனில்லை:முன்கூட்டியே
புறப்படிருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
---------------------------------------------------------------------------
தவறான அபிப்பிராயங்கள் பொய்களை விடப் பெரிய எதிரிகள்.
---------------------------------------------------------------------------
ஒவ்வொரு பொய்யும் ஒவ்வொரு பல்லைத் தட்டுவதாக
இருந்தால் யாருக்கும் பல்லே இருக்காது.
---------------------------------------------------------------------------
பலர் இன்ன ஜாதியில் பிறந்தோம்என்பதற்காகப் பெருமை கொள்கின்றனர். சிலர் சிறுமை அடைகின்றனர்.ஆனால் நாம் பிறந்த ஜாதி என்பது நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வில்லை.நமக்கும் தெரியாமல் நடந்த ஒரு பாலியல் விபத்து.இதில் பெருமை என்ன?சிறுமை என்ன?
---------------------------------------------------------------------------
பொறுமையிலும் உயர்ந்த தவம் இல்லை.
திருப்தியிலும் உயர்ந்த இன்பம் இல்லை.
அவாவிலும் பெரிய தீமையில்லை.
கருணையிலும் பெரிய அறமில்லை.
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.
---------------------------------------------------------------------------
சிறிது காலம் வாழக் கூடிய
ஒரு கொடுங்கோல் ஆட்சி -அழகு.
---------------------------------------------------------------------------
நல்லவற்றைக் கூட்டிக்கொள்.
தீயவற்றைக் கழித்துக்கொள்.
அன்பைப் பெருக்கிக்கொள்.
வாழ்வை வகுத்துக்கொள்.
---------------------------------------------------------------------------
நன்மையை செய்யுங்கள்.
யாருக்கென்று மட்டும் கேட்காதீர்கள்.
---------------------------------------------------------------------------
அதிர்ஷ்டம் எதிர்ப்பட்டால் அதன் முன் தலையைப் பிடித்து வசப்படுத்து.
ஏனெனில் அதன் பின்புறம் வழுக்கை.
---------------------------------------------------------------------------
அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்ற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.
---------------------------------------------------------------------------

செய்த தவறை மறைப்பது,இரண்டு முறை தவறு செய்ததற்கு ஒப்பாகும்.
---------------------------------------------------------------------------
சமாதானம் என்பது இரண்டு சண்டைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி.
---------------------------------------------------------------------------
இறைவனைத் தேடிச்சென்று  வணங்கக்கூட நேரம் இல்லாமலேயே உழைத்துக் கொண்டிருக்கிறீர்களா?கவலைப்படாதீர்கள்.உழைப்புத்தான் சிறந்த வழிபாடு.
---------------------------------------------------------------------------
பணம் உள்ளவனுக்கு கருமித்தனம் அவசியமில்லை.
கருமித்தனம் உள்ளவனுக்கு பணம் அவசியமில்லை.
---------------------------------------------------------------------------
எவ்வளவு சொன்னாலும் அதனால் எந்த ஒரு பயனும் விளையாது என்று தெரிய வருமேயானால் அந்த ஒரு சொல்லைக்கூட விரயம் செய்யாதே.
---------------------------------------------------------------------------
இந்தியாவில் மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஒற்றுமையுடன் செயல்படுவதில்லை.ஒவ்வொருவரும் பட்டம் பதவிகளுக்காகப் போட்டி இடுகிறார்கள்.
---------------------------------------------------------------------------
பேச்சு...பேச்சு....எப்போதும் பேசிக்கொண்டிருப்பதே வியாதி இதை நன்கு உணர வேண்டும்.
---------------------------------------------------------------------------
கோழைத்தனத்தை விடப் பெரியதொரு பாவம் வேறெதுவுமில்லை.கோழைகள் என்றுமே காப்பாற்றப் பட மாட்டார்கள்.
---------------------------------------------------------------------------
வலிமையே வாழ்வு:கோழைத்தனமே மரணம்.வலிமையற்றவர்க்கு இங்கு இடமில்லை.பலவீனம் அடிமைத்தனத்தில் புகுத்தி விடும்.உடலளவிலும் உள்ளத்தளவிலும் வரக் கூடிய எல்லாத் துன்பங்களுக்கும் பலவீனமே காரணம்.
---------------------------------------------------------------------------
தீயோர்களுக்கு உலகம் நரகமாகத் தெரிகிறது.நல்லோருக்கு சுவர்க்கமாகத் தெரிகிறது.அருளாளருக்கு அருள் வடிவமாகத் தெரிகிறது.பகை உணர்ச்சி உடையவர்களுக்கு வெறுப்பு மயமாகத் தெரிகிறது.சண்டை சச்சரவு இடுபவர்களுக்கு போர்க்களமாகத் தெரிகிறது.அமைதியானவர்களுக்கு அமைதிக் களஞ்சியமாகத் தெரிகிறது.முழுமையுற்ற மனிதனுக்கு தெய்வமாகத் தெரிகிறது.
---------------------------------------------------------------------------
ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுக்க முடியும் என்றா நீ நினைக்கிறாய்?அது தானாகவே கற்றுக் கொள்ளும்.வாய்ப்புகளை உண்டாக்கித் தருவது,இடர்ப்பாடுகளை நீக்குவதுதான் உன் கடமை.
---------------------------------------------------------------------------
உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.
---------------------------------------------------------------------------
சூதாட்டம் பேராசையின் குழந்தை:அநீதியின் சகோதரன்.
---------------------------------------------------------------------------
தகுதியில்லாத ஒருவனைப் புகழ்தல் ,கள்ளச்சந்தையில் ஒரு பொருளை விற்பதற்கு சமம்.
---------------------------------------------------------------------------
ஒத்தாசைக்கு பத்துப் பேர்இருந்தால்,செத்துப்போன குதிரையும் பந்தயத்தில் ஓடும்.
---------------------------------------------------------------------------
ஒருவர் உங்களிடம் அறிவுரை கேட்கிறார்  என்றால்,உங்கள் வாயால்,தன்னைப் புகழ வேண்டும் என்று நினைக்கிறார் என்று பொருள்.
---------------------------------------------------------------------------
யாராவது தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால்,எனக்கு அவரைப் பிடிக்கும்.காரணம் ,நல்லதைத்தவிர எதுவும் என் காதில் விழாது அல்லவா ?
---------------------------------------------------------------------------
ஒரு காரியத்தை எப்போது தொடங்கலாம் என்று நாம் யோசிக்கும்போதே  காலம் கடந்து விடுகிறது.
---------------------------------------------------------------------------
உங்கள் பிரச்சினை என்றால் மூளையை உபயோகியுங்கள்:
மற்றவர் பிரச்சினை என்றால் இருதயத்தை உபயோகியுங்கள்.
---------------------------------------------------------------------------
ஒரே ஒருவர் உங்களை கழுதை என்று சொன்னால் அதை லட்சியம் செய்யத் தேவையில்லை.இரண்டு பேர் சொன்னால் ஒரு சேணம் வாங்கிக் கொள்வது நல்லது.
---------------------------------------------------------------------------
முகஸ்துதிக்காரரிடம்  எச்சரிக்கையாய் இருங்கள்.அவர் உங்களுக்கு  விருந்து  அளிக்கிறார்--வெறும் கரண்டி கொண்டு.
---------------------------------------------------------------------------
புகழ் என்பது ஒரு வலை:இதனைக் கொண்டு எந்த மனிதனையும் பிடித்து விடலாம்.
---------------------------------------------------------------------------
மற்றவர்களின் தவறுகளிலிருந்து தான் நாம்பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.அவ்வளவு தவறுகளையும் செய்ய நம் ஆயுள் போதாது.
---------------------------------------------------------------------------

மௌனத்தின் சிறப்பைப் பற்றி என்னால் மணிக்கணக்காகப் பேச முடியும்.
---------------------------------------------------------------------------
ஆகாயக் கோட்டை கட்டுவதில் தவறில்லை.அஸ்திவாரம் மட்டும் தரையில் இருக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------
ஒவ்வொரு பறவைக்கும் கடவுள் உணவளிக்கிறார்.ஆனால்
அதை அவர் அதன் கூட்டினுள் போடுவதில்லை.
---------------------------------------------------------------------------
பழக்கிய யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பதுபோல  பணத்தைப் போட்டுத்தான் பணத்தை ஈட்ட வேண்டும்.
---------------------------------------------------------------------------
தன்னிடம் குவிந்த செல்வத்தை,தானும் அனுபவியாமலும்,நற்காரியங்களுக்கு செலவிடாமலும் இருப்பவன் சுகம் பெற மாட்டான்.அவன் பணம் படைத்த முட்டாள்.
---------------------------------------------------------------------------
சிங்கத்துக்கு முடிசூட்டு விழாவோ,சடங்குகளோ விலங்குகள் செய்து வைக்கவில்லை.தன்னுடைய பராக்கிரமத்தால் அல்லவோ சிங்கம் அரச பதவி வகிக்கிறது?
---------------------------------------------------------------------------
பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை.
முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை.
கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை.
அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை.
---------------------------------------------------------------------------
சமய சந்தர்ப்பம் தெரியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் வெகுமதி  பெறாமல் போவது மட்டும் அல்லாமல் வெறுப்பையும் தேடிக் கொள்கிறான்.
---------------------------------------------------------------------------
குதிரை,ஆயுதம்,வீணை,சொல்,புத்தகம்,ஆண்,பெண் இவை அனைத்தும் பயன்படுவதும்,பயன்படாமல் போவதும் உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து உள்ளது.
---------------------------------------------------------------------------
பிரம்மாவே பயமுறுத்தினாலும் தைரியசாலி தைரியத்தைக் கைவிடுவதில்லை.கோடை கால வெயில் குட்டையைததான் வற்றச் செய்யும்.சிந்து நதியோ,எப்போதும் பெருகி ஓடிக் கொண்டேயிருக்கும்.
---------------------------------------------------------------------------
நெருக்கடி இல்லாத சாதாரண காலத்தில் எல்லோரும் அறிவாளிகளாக இருக்க முடியும்.
---------------------------------------------------------------------------
செல்வம் சேர்ந்தவனிடம் அகம்பாவம் சேரும்.உணர்ச்சி வசப்படுபவன் ஆபத்தில் சிக்கிக் கொள்வான்.
---------------------------------------------------------------------------
அரசனின் அருகில் இருந்து ஊழியம் செய்பவன்,நல்ல குடும்பத்தில் பிறக்காதவனாகவோ,மூடனாகவோ,கருணை இல்லாதவனாகவோ இருந்தாலும் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள்.
---------------------------------------------------------------------------
பணத்தைசெர்ப்பதிலும் துன்பம்;சேர்த்த பணத்தைக் காப்பதிலும் துன்பம்;அதை இழந்து விட்டாலும் துன்பம்;செலவிட்டு விட்டாலும் துன்பம்.எப்போது பார்த்தாலும் பணத்தால் துன்பமே உண்டாகிறது.
---------------------------------------------------------------------------
புன்னகைக்குக்கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?தோட்டங்களைப் பயிரிட வேண்டிய விரல்கள் ஏன் தோட்டாக்களைத் துப்பாக்கியில் திணிக்க வேண்டும்?
---------------------------------------------------------------------------
மாடி ஏறுகிறவன் எந்த மாடிக்குச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் வைத்திருந்தால் போதாது.அடுத்த படியின் மீது கவனத்தை வைக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------
வாழ்கையை புளிக்க வைத்துவிட்டவர்கள்தான் புளித்த மதுவின் புறமுதுகில் ஏறி சவாரி செய்கிறார்கள்.சமாளிப்பதால்  எதையுமே சரி செய்து விட முடியாது.
---------------------------------------------------------------------------
மனதின் அளவற்ற ஆசைகளை அடைய முயற்சி செய்து உடல் தளர்ந்து விடுவதேநம்முடைய உள்ளச் சோர்வுக்குக் காரணம்.
---------------------------------------------------------------------------
மற்றவர்கள் புகழ்ச்சி ஒருவிதமான போதையை ஏற்படுத்தி விடும்.அதிலிருந்து மீள்வது சிரமம்.கொஞ்ச நாள் கழித்து நாம்மற்றவர்கள் அவ்வாறு புகழ வேண்டும் என்று எதிர் பார்க்க ஆரம்பித்து விடுவோம்.
---------------------------------------------------------------------------
நாம் யாரையாவது எதிரியாகப் பாவித்துக் கொள்கிறோம்.கோபமும் வன்மமும் நம் உடலைப் பலவீனப் படுத்தி நம்மை கருவச் செய்து வீழ்த்தி விடுகின்றன.
---------------------------------------------------------------------------
போதிக்கிறபலரும் தாம்  போதிக்கிற சுகத்திற்காகப் போதிக்கிறார்களே தவிர மற்றவர் திருந்த வேண்டும் என்பதற்காக அல்ல.திருந்திவிட்டால் நமக்கு வேலை இல்லாமல் போய்விடுமே என்கிற பயமும் அவர்களுக்கு உண்டு.
---------------------------------------------------------------------------
குண்டூசி தொலைந்ததற்கு கடப்பாரை அளவு விசனம் தேவையா?
---------------------------------------------------------------------------
காது குத்துவதர்காகக் கடன் வாங்கியவர்கள் கொடுத்தவர்களுக்கும் சேர்த்து  காது குத்திவிடுகிறார்கள்.
---------------------------------------------------------------------------
உன் கையிலுள்ள ஓட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால்,உன் எதிர் காலம் காப்பாற்றப்படும்;ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்.
---------------------------------------------------------------------------
ஒரு நடிகையின் கணவனாக இருப்பதில் உள்ள மதிப்பு என்ன?சிங்கம் மார்க் பீடியிலே சிங்கத்துக்கு என்ன மதிப்போ,அவ்வளவு மதிப்பு அவனுக்கும் உண்டு.பீடியை யார் பிடித்தால் என்ன, லேபில் சிங்கம் தானே!
---------------------------------------------------------------------------
வெற்றியிலே நிதானம் போகிறது;அதோடு வெற்றியும் போய் விடுகிறது.
---------------------------------------------------------------------------
தலைவர்கள் ஜனங்களை ஏமாற்றுவதற்குப் பெயர் ராஜதந்திரம்;ஜனங்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்குப் பெயர் ஜனநாயகம்.
---------------------------------------------------------------------------
சருமம் பளபளப்பாக இருந்தால் உடம்பிலே நோய் இல்லை என்று பொருளல்ல.தட்டிக் கொடுப்பவர்கள் எல்லாம் அன்புள்ளவர்கள் என்றும்  பொருளல்ல.
---------------------------------------------------------------------------
உலகத்திலுள்ள எல்லோரும் யோக்கியர்களே!எப்போது?தூங்கும் போது!
---------------------------------------------------------------------------
இரண்டு பக்கமும் கூர்மையாய் உள்ள கத்தியை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்;எந்தப் பக்கமும் சேரக் கூடிய மனிதர்களிடம் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.
---------------------------------------------------------------------------
அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்லும் போது இருக்கும் தைரியம் ,தனக்குத் தேவைப்படும் போது அடுத்தவனிடம் போய்விடுகிறது.
---------------------------------------------------------------------------
பாத்திரத்தின் நிறமல்ல,பாலின் நிறம்;ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.
---------------------------------------------------------------------------
விஸ்கியைக் குடித்தவன் தான் ஆட வேண்டும்; விஸ்கி பாட்டிலே ஆடக்கூடாது.நம்மைப் பிறர் தான் புகழ வேண்டும்,நாமே புகழக்கூடாது.
---------------------------------------------------------------------------
குடித்திருப்பவரோடு  விவாதம்  செய்தால் ,உங்களில்  யார் குடித்திருப்பவர்  என்பது  தெரியாது
---------------------------------------------------------------------------
அறிவாளிகளுக்கு அறிவு தான் அதிகம்.
முட்டாள்களுக்குத்தான் அனுபவம் அதிகம்.
---------------------------------------------------------------------------
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
---------------------------------------------------------------------------
அறிஞர்கள் அகப்பட்டால் விட மாட்டார்கள்.
திருடர்கள் விட்டால் அகப்பட மாட்டார்கள்.
---------------------------------------------------------------------------
மனிதர்கள் பெரும் வெற்றிக்கு அவர்களே காரணம்.
தோல்விக்குத்தான் கடவுள் காரணம்.
இல்லை என்றால் அவர்களா தோல்வி அடைவார்கள்?
---------------------------------------------------------------------------
சாதாரண மனிதன் புகழ் பெறத் துவங்கும்போது ,
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறத் தொடங்குகின்றன.
---------------------------------------------------------------------------
காமம் என்பது எப்போது ஆரம்பமானது?
நிர்வாணமாக இருந்த மனிதன் ஆடை கட்டத் துவங்கியபோது.
---------------------------------------------------------------------------
கஷ்டமான நேரத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் மரியாதை வருகிறது.
வழி தெரியாத நேரத்தில் ஒவ்வொரு யோசனையும் நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.
நீண்ட நாள் சிறையில் இருப்பவனுக்குக் கிழவி கூட அழகாகத் தெரிகிறாள்.
பல நாள் சாப்பிடாதவனுக்குக் கோதுமைக் கஞ்சியே அல்வா ஆகிறது.
கிடைக்கக் கூடாதவனுக்கு சிறிய பதவி கிடைத்தாலும் அவனே தெய்வமாகிவிட்டதாகக் கனவு காண்கிறான்.
---------------------------------------------------------------------------
கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாயை வேண்டுமானாலும் எழுதலாம்.செய்யப்போவதில்லை என்று முடிவு கட்டி விட்டால் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.
---------------------------------------------------------------------------
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன வேண்டும்?
எந்த விமரிசனத்தையும் தூக்கி எறிய வேண்டும்.
---------------------------------------------------------------------------
நட்பு உடையக்கூடிய பொருள் அதைக் கவனத்துடன் கையாள வேண்டும்.
---------------------------------------------------------------------------
முதுமைக்கு முன் இளமையையும்
நோய்க்கு முன் உடல் நலத்தையும்
வறுமைக்கு முன் செல்வத்தையும்
வேலையில் ஈடுபடுமுன் ஓய்வையும்
மரணம் வருமுன் வாழ்க்கையையும்
அரிதாகக் கருதி நன்றாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
---------------------------------------------------------------------------
ஒரு பணக்காரன் சொல்வதை பத்து ஏழைகள் சேர்ந்து மாற்றி விடலாம்.
இது ஜனநாயகத்தின் பலம்.
ஒரு அறிவாளி சொல்வதைப் பத்து முட்டாள்கள் சேர்ந்து மாற்றிவிடலாம்.
இது ஜனநாயகத்தின் பலவீனம்.
---------------------------------------------------------------------------
விருப்பம் நிறைவேறாத போதுதான் ஒருவனின்உண்மையான குணம் வெளிப்படும்.
---------------------------------------------------------------------------
நாம் பிறரிடம் கண்டு கேலி செய்யும் குற்றங்கள்,நமக்குள் நம்மையே கேலி செய்யும்.
---------------------------------------------------------------------------
வன்மம் மிகுந்தவன் தன எதிரியை இழிவு செய்வதற்காக எவ்வளவு கீழான செயலையும் செய்யத் தயங்க மாட்டான்.
---------------------------------------------------------------------------
முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு;ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.
---------------------------------------------------------------------------
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனின் பலவீனம்.
---------------------------------------------------------------------------
அடக்கி வைக்கப்பட்ட கோபமே வெறுப்பு.
---------------------------------------------------------------------------
துயரத்திற்கு ஒரே மாற்று மருந்து சாதனை தான்.
---------------------------------------------------------------------------
சொல்லில் இங்கிதம் நாவன்மையை விடச் சிறந்தது.
---------------------------------------------------------------------------
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
---------------------------------------------------------------------------
நல்ல வரவேற்பு பாதி விருந்துக்கு சமம்.
---------------------------------------------------------------------------
முகம் மனிதனின் ஓவியம்
கண்கள் அதன் தூதுவர்கள்.
---------------------------------------------------------------------------
தவறு செய்வது மனிதத் தனம்.
அதன் பழியை மற்றவர் மீது சுமத்துவது மனித குணம்.
---------------------------------------------------------------------------
கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.
---------------------------------------------------------------------------
கசப்புச் சொற்களும்,கடுமையான சொற்களும் சொல்பவன் பக்கத்தில் நியாயமில்லை என்பதைப் பறை சாற்றுகின்றன.
---------------------------------------------------------------------------
அடுத்தவன் தோள் மீது ஏறி சவாரி செய்பவனுக்கு அடுத்த ஊர் அருகிலிருந்தால் என்ன?தொலைவில் இருந்தால் என்ன?
---------------------------------------------------------------------------
வாழ்க்கை என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் போது,வாழ்க்கை முடிந்து விடுகிறது.
---------------------------------------------------------------------------
சகிப்புத்தன்மை என்பது,சமயோசித உணர்வால் அடக்கப்பட்ட கோபமே தவிர வேறொன்றுமில்லை.
---------------------------------------------------------------------------
நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் நிதானம் காட்டு.
நண்பனைத் துறப்பதில் அதை விட நிதானம் காட்டு.
---------------------------------------------------------------------------
நாணயம் தயாரிக்கப்பட்ட போதே மனித நாணயம் தவறிப் போய்விட்டது.
---------------------------------------------------------------------------
பொறுமை கசப்பு;ஆனால் அதன் கனி இனிப்பு.
---------------------------------------------------------------------------
ஒரு பிழையை உணர்ந்து நீங்கள் திருந்த மறுக்கும் போது தான் அது தவறாகிறது.
---------------------------------------------------------------------------
குழந்தைகளைக் கழுதைகள் ஆகவும் ,ஒன்றுக்கும் மதிப்பில்லாதவராகவும்  நீங்கள் கருதினால்,உங்கள் வயது நாற்பதைத் தாண்டி விட்டது என்று அர்த்தம்.
---------------------------------------------------------------------------
வெற்றி  என்பது குறிக்கோள் அன்று ;அது ஒரு பயணமே.
---------------------------------------------------------------------------
வேலை மனிதனைக் கொல்லாது;கவலைதான் கொல்லும்
---------------------------------------------------------------------------
''குற்றங்குறைகளைச் சொல்லுங்கள்,''என்று கேட்பார்கள்.ஆனால் புகழ்ந்து சொல்வதைத் தான் விரும்புவார்கள்.
---------------------------------------------------------------------------
''இளமையாக இருக்கிறீர்களே,''என்று உங்களை உங்கள் நண்பர்கள் பாராட்டினால் உங்களுக்கு வயதாகிறது என்று அவர்கள் நினைப்பதாக அர்த்தம்.
---------------------------------------------------------------------------
பணம் என்பது ஆறாவது அறிவு;அது இல்லாவிட்டால் ஐந்து அறிவும் வீண்.
---------------------------------------------------------------------------
பிறக்கும் போது எல்லோருமே பைத்தியம் தான்.சிலர் கடைசி வரை அப்படியே இருந்து விடுகிறார்கள்.
---------------------------------------------------------------------------
பணம் என்பது கடல் நீர்.குடிக்கக் குடிக்க தாகத்தை அதிகமாக்குவது தான் அதன் தன்மை.
---------------------------------------------------------------------------
தனி மரம் தோப்பாகாது.ஆனால் அது ஒரு தோப்பு உருவாக துணை புரிகிறது.
---------------------------------------------------------------------------
ஓடுவதில் பயனில்லை;நேரத்தில் புறப்படுவது தான் முக்கியம்.
---------------------------------------------------------------------------
அகங்காரம் வரும் போது அவமானமும் கூடவே வரும்.
---------------------------------------------------------------------------
நம்முடைய முக்கிய  குறைபாடு என்னவென்றால்,நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக,அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறோம் என்பது தான்.
---------------------------------------------------------------------------
மனித இனத்தை மாற்ற வேண்டும் என்று எல்லோரும் கூறுகிறார்கள்;தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யாருமே சிந்திப்பதில்லை.
---------------------------------------------------------------------------
நழுவாமல் எதிர் நோக்குங்கள்.எந்தப் பிரச்சினையும் சின்னதாகி விடும்.
முள்ளை மெல்லத் தொட்டால் குத்தும்.அழுத்திப் பிடித்தால் நொறுங்கி விடும்.
---------------------------------------------------------------------------
பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவது பன் மடங்கு மேல்.
---------------------------------------------------------------------------
துரதிருஷ்டம் இரண்டு வகை;ஒன்று நமக்கு வரும் துரதிருஷ்டம்;மற்றது பிறர்க்கு வரும் அதிருஷ்டம்.
---------------------------------------------------------------------------
ஒருவன் உயரும் போது உலகம் அவனைப் பார்க்கிறது.
வீழ்ச்சி அடையும் போது தான் அவன் உலகத்தைப் பார்க்கிறான்.
---------------------------------------------------------------------------
வெற்றி தலைக்கும் ,தோல்வி இதயத்திற்கும்
செல்லாது பார்த்துக்கொள்.
---------------------------------------------------------------------------
காலம் என்பது........
நம்பிக்கைகளின் தொட்டில்;
ஆசைகளின் கல்லறை;
முட்டாள்களுக்குக் கற்றுத் தரும் குரு.
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்.
---------------------------------------------------------------------------
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
---------------------------------------------------------------------------
இளமையாக இருக்கும் போது ரோஜா மலர்கள் மேல் படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மேல் படுக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------
செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கும்;
ஆளைப் பார்த்து எடை போடக் கூடாது.
---------------------------------------------------------------------------
பரவசத்தோடு பார்;எல்லாம் பரவசமாகும்!
எல்லாமே பார்க்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.
---------------------------------------------------------------------------
பயம் எப்போதும் எலியைக் கூடப் புலியாகக் காட்டும்.
---------------------------------------------------------------------------
மனிதனுடைய பெரிய பிரச்சினை அடுத்த மனிதன் தான்.
கூடவே இருந்தாலும் பிடிக்காது;இல்லாவிட்டாலும் பயம்.
---------------------------------------------------------------------------
தன கோபத்துக்கு மரியாதை இல்லை என்று தெரிந்தால்
யாரும் கோபப் படுவதில்லை.

No comments:

Post a Comment