Monday, 19 September 2011

stephen hawking --கடவுட் கோட்பாடா? கண்மூடி விளக்கங்களா?

stephen-hawking3 
ஸ்டீபன் ஹாவ்கிங் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக நம் தலைமுறையில் அறியப்படுபவர் ஸ்டீபன் ஹாவ்கிங். மிகமோசமான நோயினால் பாதிக்கப்பட்டு, உடலியக்கமும், பேசும் திறனையும் இழந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரபஞ்ச ரகசியங்களைத் தேடும் ஹாவ்கிங், மானுட அறிவின் மகத்தான வெற்றிக்குறியீடாகவே காணப்படுகிறார். எனவே அவர் சில முக்கிய இறையியல் கோட்பாடுகள் குறித்து கூறியுள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையை எழுப்பியிருப்பது ஆச்சரியமல்ல.
சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ள அக்கருத்துகள் இவைதான்: இறைவன் உலகை படைத்தான் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஒரு சிருஷ்டிகர்த்தர் இல்லாமலே பிரபஞ்ச உருவாக்கத்தை நாம் விளக்க முடியும். சுவர்க்கம், சுவனம் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான கற்பனை (fairy tale notion) மட்டுமே.
டர்ஹாம் பகுதியின் ஆங்கிலிக்கன் பிஷப் நிகோலஸ் வ்ரைட் என்பவர் ஹாவ்கிங்கின் கருத்துகள் மனச்சோர்வடைய வைப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மிகவும் மலினமாகக் கோட்பாடுகளை வைத்து ‘சுவர்க்கத்துக்குப் போவது குறித்த’ விவிலிய நம்பிக்கைகளை ஹாவ்கிங் விமர்சித்திருக்கிறார் என்பது அவருடைய ஆதங்கம். மேலும் பிரபஞ்சம் சுயம்புவாக உருவாகியிருக்கலாம் என்கிற ஹாவ்கிங்கின் கருத்தும் பிஷப்பின் கண்டனத்துக்குத் தப்பவில்லை. ஹாவ்கிங் ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. பழைய தத்துவமான எபிகூரிய தத்துவம்தான் இது என்று சொல்லியிருக்கிறார் பிஷப். (இப்படிச் சொல்லிவிட்டால் அது எப்படி ஹாவ்கிங் சொன்னதை எதிர்கொள்வதாகும் என்றால், இது ஒரு பழைய தந்திரம், ஹாவ்கிங் ஒரு பாகனீய தத்துவத்தைதான் முன்வைக்கிறார் என்று தன் நம்பிக்கையாளர் மந்தைக்குச் செய்திசொல்கிறார் சங்கைக்குரிய ஆங்கிலிக்கன் பிஷப்).
மற்றொரு இஸ்லாமிய பேராசிரியர், இஸ்லாமின் அறிவியல் பங்களிப்புகளைப் பேசும்போது ஹாவ்கிங் இறைவனைக் குறித்து திமிர்த்தனம் காட்டுவதாகக் கூறியிருக்கிறார். இவையெல்லாம் ரொம்ப மென்மையான எதிர்வினைகள். தொடக்க காலங்களில் (மறைந்த) போப் இரண்டாம் ஜான் பால், ஹாவ்கிங்கிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “இதோ பாருங்க,… பிரபஞ்சத்தை உருவாக்கிய பெரும் அதிர்வை (Big Bang) ஆராய்ச்சி செய்வதெல்லாம் சரிதான். ஆனா அதுக்கு முன்னாடி உள்ள விஷயங்களையெல்லாம் மனிதர்கள் ஆராயக் கூடாது. ஏன்னா அதெல்லாம் கர்த்தருக்கே சொந்தமான ரகசியங்கள்” என்று எச்சரித்திருந்தார்.
stephen_hawking_vs_god
அப்படி ஸ்டீபன் ஹாவ்கிங் சொன்னதில் எது மேற்கத்திய இறையியலாளர்களையும் மத பீடங்களையும் ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது? ஹாவ்கிங்கின் வார்த்தைகளிலேயே இதை நாம் காணலாம்…
காலமும் வெளியும் ஒரு முடிவெல்லையைக் கொண்டிராத தன்னளவில் மூடிய ஒன்றாகக் கொண்டால் அது இறைவனுக்கு பிரபஞ்ச இருப்பில் என்ன பங்கு எனும் கேள்விக்கு மிகவும் தொடர்புடையது. … பிரபஞ்சத்துக்கு ஒரு தொடக்கம் இருந்தால், அந்தத் தொடக்கம் ஓர் ஒற்றைத்தன்மையானதாக (singularity) இருந்தால், இப்பிரபஞ்சம் அதற்கு அப்பாற்பட்ட ஒன்றால் படைக்கப்பட்டது எனக் கருத இடம் இருக்கிறது. ஆனால் பிரபஞ்சம் தன்னளவிலேயே முழுமையுடையதாக இருந்தால் அதற்கு ஒரு முடிவு அல்லது எல்லைக்கோடு என்பது இல்லாமல் இருந்தால் அது தொடக்கமும் முடிவும் இல்லாதது. அது (தன்னளவில் சுயம்புவாக) இருக்கிறது. அவ்வளவே. என்றால் அங்கே ஒரு கர்த்தரின் தேவை என்ன வந்தது?
மற்றொரு தருணத்தில் அவர் சொல்கிறார்..
எம்-கோட்பாட்டு (M-theory) என்ன சொல்கிறதென்றால் நமது பிரபஞ்சம் மட்டுமே முழு பிரபஞ்சம் அல்ல. பற்பல பெரும் பிரபஞ்சங்கள் ஏதுமின்மையிலிருந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் உருவாக்கம் இயற்கைக்கு மேலான கர்த்தர் ஒருவரையோ இறையையோ சார்ந்திருக்கவில்லை.
பொதுவாக இன்றைய சூழலில் மதம் என்று பேச்சு வரும்போதெல்லாம் அது ஆபிரகாமிய கோட்பாடுகளைக் கொண்ட மதத்தைக் குறித்த பார்வையாகவே அமைகிறது. மதம் என்றாலே பிரபஞ்ச கர்த்தராக வழிபடப்படும் ஒரு தெய்வம் இருக்க வேண்டும். ஒரு கட்டுப்பாடான நம்பிக்கை இருக்க வேண்டும். இறப்புக்கு பின் மறுமை, அதில் சுகபோகங்கள் கொண்ட சுவர்க்கம், சித்திரவதை செய்யும் நரகம் எல்லாம் இருக்க வேண்டும். மேற்கத்திய மதத்தின் இந்த ஆதார நம்பிக்கைகளைத்தான் ஸ்டீபன் ஹாவ்கிங் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்:
மேற்கத்திய பண்பாட்டில் பழைய ஏற்பாட்டில் பிரபஞ்ச ஆரம்பம் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட படைப்பு என்கிற கதை ஒன்று உள்ளது. பாரம்பரிய கிறிஸ்தவத்தின் உலகப் பார்வையானது அரிஸ்டாட்டிலால் மிகவும் தாக்கம் பெற்ற ஒன்றாகும். அரிஸ்டாட்டில் உலகம் ’ஒரு பெரும் அறிவு கொண்டவரால் நடத்தப்படுவதாக’ இயற்கை உலகைக் கண்டார். இயற்கையில் (அறிவார்ந்த படைப்புக்கு ஆதாரமான) வடிவமைப்புகள் இருப்பதாக அவர் கருதினார். மத்திய கால கிறிஸ்தவ இறையியலாளரான தாமஸ் அக்குயுனஸ் (Thomas Aquinas) அரிஸ்டாட்டிலின் பார்வையின் அடிப்படையில் இயற்கையைப் பார்த்து அதனை இறைவன் இருப்பதற்கு ஆதாரமாக முன்வைத்தார். 18-ஆம் நூற்றாண்டில் ஒரு கிறிஸ்தவ இறையியலாளர் இதை எந்த அளவுக்கு எடுத்துச் சென்றாரென்றால், அவர் சொன்னார்: “முயல்களை ஏன் வெள்ளைவாலோடு இறைவன் படைத்தார் தெரியுமா? ஏனென்றால் அப்போதுதான் அவற்றை நாம் வேட்டையாடும் போது சுடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான்.”
இந்த சிருஷ்டி-கர்த்தர் என்கிற கோட்பாட்டைத்தான் கேள்விக்குள்ளாக்கி, தெளிவாக மறுத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாவ்கிங். அப்படிச் செய்ய அவர் விரும்பியதால் அதை அவர் செய்தார் என்று சொல்லமுடியாது. அவரது அறிவியல் அளிக்கும் பார்வையில் இப்படி ஓர் ஆபிரகாமிய சிருஷ்டிகர்த்தருக்குத் தேவை இல்லை என்பதுதான் தெளிவான அடிப்படை உண்மை..
இத்தகைய கோட்பாடுகளெல்லாம் இல்லாத ஒரு வேறுபட்ட மதம் இருக்கமுடியும் என்கிற சாத்தியக்கூறு கூட மேற்கத்திய மையம் கொண்ட ஊடகங்களுக்கு இல்லை என்பதுதான் கொடுமையான விஷயம். பாரதிய ஆன்மிக ஞான மரபுகள் அவை வேதம் சார்ந்த மரபுகளோ அல்லது பௌத்த சமண மரபுகளோ, ஆன்மிக அனுபவத்துக்கும் ஞான நிலை அடைவதற்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றனவே ஒழிய அவை நம்பிக்கைகள் சார்ந்தவை அல்ல. அறிவியலுக்கும் மதத்துக்குமான மோதல் சார்ந்த உரையாடல் மேற்கத்திய ஊடக உலகில் ‘ஊடக சர்க்கஸ்’ என்பதாகவே ஒளிவட்டம் பெறும் சூழலில் அத்தகைய ஓர் அறிவியல்-சமயம் என்கிற உரையாடல் பாரத ஞான மரபின் சூழலில் முழுக்க வேறு ஒரு தன்மையை அடைகிறது.
ஸ்டீபன் ஹாவ்கிங்கின் மிகவும் புகழ்பெற்ற நூலான ‘காலத்தின் சுருக்கமானதோர் வரலாறு’ (‘A Brief History of Time’), அதன் முதல் பதிப்பில் மறைந்த பிரபஞ்சவியலாளர் கார்ல் சாகனின் ஓர் அறிமுக உரையைக் கொண்டிருந்தது. அதில் சாகன் எழுதியிருந்தார், “இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் கடவுள் என்ற வார்த்தை நிரப்புகிறது.” இப்படி படைப்பையும் இறையையும் இணைப்பதன் மூலம் கார்ல் சாகன் மேற்கத்திய இறையியலுடன் ஒவ்வாத ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைத்தார்.
பிறிதோர் இடத்தில் சாகன் இந்த வேறுபாடை மேலும் விரிவாகவே பேசியிருக்கிறார்:
மேற்கத்திய உலகில், இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் யூதேய-கிறிஸ்தவ-இஸ்லாமிய கருத்துலகில், நாம் இறைவன் என்கிற வார்த்தையைச் சொல்லும்போது அதனுடன் சில குணாதிசயங்களை இயல்பாகவே இணைத்துக் கொள்கிறோம். யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய மதங்களுக்கிடையில் இருக்கும் இந்த ஒற்றுமையுடன் ஒப்பிடுகையில் இவற்றுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த உலகத்தை உருவாக்கிய இறைவன், கருணைமிக்க, சர்வசக்தி வாய்ந்த, சர்வ அறிவு பொருந்திய ஒருவர் என்பதாக நாம் கற்பனை செய்கிறோம். அவர் நம் பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்க்கிறார். மானுட விசயங்களில் தலையிட்டு நடத்திச் செல்கிறார் என்றெல்லாம் நம்புகிறோம்…. இந்த இறைக் கோட்பாட்டை மற்றொரு இறைக் கோட்பாட்டுடன் வித்தியாசப்படுத்திப் பார்க்கலாம். நான் சொல்லும் இந்த வேறுபட்ட இறைக் கோட்பாடு பாரூச் ஸ்பினோஸாவாலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனாலும் முன்வைக்கப்பட்டது. ஐன்ஸ்டைன் இந்தக் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி, ‘கடவுள் இதை செய்வாரா (பகடை ஆடுவாரா) மாட்டாரா’ என்பதாக எல்லாம் கேள்விகள் எழுப்புவார் ஆனால் இந்தக் கடவுள் இப்பிரபஞ்சத்தின் இயற்கை விதிகள் அனைத்தின் கூட்டுக்கணமாக விளங்கும் அதிலிருந்து வேறுபடுத்த முடியாத ஒரு கடவுள்…
இந்த இரண்டாவது வகை கடவுள் நிர்க்குணக் கடவுள் அனைத்திலும் உறையும், அனைத்திலும் படர்ந்த, ஒரு கடவுள் இந்தக் கடவுளை தன்னில் உணரும் ஞானத்தேடலை மிகவும் ஆழமாக ஹிந்து ஞான மரபுகள் முன்வைக்கின்றன. அந்தத் தேடலை மையப்படுத்திய ஒரு பண்பாட்டுச்சூழலை கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாரதம் உருவாக்கியிருக்கிறது. பாரத தத்துவ ஞான மரபை மேற்கத்திய அறிவுலகம் முதன் முதலில் கண்ட போது வேதாந்தத்துக்கும் அவர்கள் வெறுத்து ஒதுக்கிய ஸ்பைனோஸாவின் தத்துவப்பார்வைக்கும் இருந்த ஒற்றுமை அவர்களை மிகப் பெரிய அளவில் கவர்ந்தது.
உதாரணமாக மேக்ஸ்முல்லர் எழுதினார்:
“உபநிடதங்கள் கூறி சங்கரர் வரையறுத்த பிரம்மம் எனும் கோட்பாடு, ஸ்பைனோஸா கூறும் அடிப்படை வஸ்து (‘Substantia’) ஆகும். ஸ்பினோஸா அதை, தன்னில் நிலைபெற்று தானாக இருப்பது எனக் கருதுகிறார். அது முடிவற்றது, பிரிக்கமுடியாதது. ஏக வஸ்து, அழிவற்றது. சங்கரர் கூறும் பிரம்மமும் உபநிடதங்களில் ‘பிறக்காதது, இறவாத்து, அழிவற்றது, பிரிவுகள் அற்றது, செயல்களுக்கு அப்பாலானது, நிர்தோஷமானது, சாந்தமானது’ என்றே வர்ணிக்கப்படுகிறது.”
ஹிந்து ஞான மரபுகளின் அழகும் மேதமையும் எதில் உள்ளதென்றால் இத்தகைய உயர்ந்த ஞானக் கோட்பாடுகளுக்கும் அன்றாட சமய செயல்பாடுகளுக்கும் இடையே எவ்விதத் தொடர்பின்மையும் இல்லாமல் அவற்றை ஒரே உயிரோட்டம் கொண்ட அமைப்பாக சமைத்ததில்தான் உள்ளது. ஹிந்து தெய்வ திருவடிங்கள், ஆன்மிகக் குறியீடுகள், கோயில் வடிவமைப்புகள், கிராமக் கோயில் சடங்குகள், வேள்வி மேடை அமைப்புகள், பக்திப் பாசுரங்கள் – என இவை அனைத்துமே தனிமனித ஆன்மிகத் தேடலுக்குப் பங்களிக்கின்றன. இவை அனைத்துமே சமுதாயத்தையே அத்தகைய ஞானத்தேடலுக்கு முக்கியத்துவம் தரும் ஒன்றாக மாற்றுவதில் பங்களிக்கின்றன. இவை அனைத்தும் இணைந்து ஒரு மாபெரும் உயிரியக்கமாக விளங்குகின்றன. அதன் ஆதார மையமாக சத்தியத் தேடல் அமைகின்றது. ஹிந்து ஞான மரபுகள் இந்த பௌதீகக் பிரபஞ்சத்தை இறை உடலாகவே சித்தரிக்கின்றன.
உதாரணமாக நற்றிணை:
மாநிலம் சேவடி ஆகத் தூநீர்
வளைநரம் பௌவம் உடுக்கை ஆக
விசும்புமெய் ஆகத் திசைகை ஆகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே
பிரம்மமே இப்பிரபஞ்சமாக வடிவெடுத்தது என்றும் அது பல சுழல்களில் தொடரும் ஓர் உயிரியக்கம் என்றும் பாரத ஞான மரபுகள் ஆதித் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து சொல்லி வருகின்றன.
எது முடிவோ அதுவே தொடக்கமாக அமையும் இந்தச் சுழல் பிரபஞ்சவியலை கார்ல் சாகனும் கூறுகிறார். இதனை அழகிய வடிவமாகக் காட்டும் சிவ நடராஜ வடிவத்தை ‘நவீன வானவியல் கோட்பாடுகளின் முன்னுணர்தலாக காண்கிறேன்’ என சொல்லும் சாகன் மேலும் விளக்குகிறார்:
“ஆதிப் பெரும்வெடிப்புக்குப் பிறகு பிரபஞ்சம் விரிவடைந்தபடியே உள்ளது. ஆனால் இந்தப் பிரபஞ்சம் எப்போதும் இப்படி விரிவடைந்து கொண்டே போகுமா என்று கேட்டால் அப்படி இருக்க வாய்ப்பில்லை. இந்த விரிதல் மெல்ல வேகம் குறைந்து நின்று பின்னர் சுருங்க ஆரம்பிக்கலாம். இப்பிரபஞ்சத்தில் பொருண்மை ஒரு குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் குறைவாக இருந்தால் விரிந்து வெளி செல்லும் விண்மீன் கணங்களின் ஈர்ப்பு சக்தியே இந்த விரிதலை நிறுத்திவிடப் போதுமானதாக இருக்கலாம்… ஆனால் நாம் பார்ப்பதைக் காட்டிலும் அதிகப் பொருண்மை இப்பிரபஞ்சத்தில் மறைக்கப்பட்டுள்ளது. அவை கருந்துளைகளில் இருக்கலாம். அல்லது கேலக்ஸிகளுக்கு நடுவே வெப்பம் கொண்ட வாயுக்களில் படர்ந்திருக்கலாம். எனில் இப்பிரபஞ்சம் மீண்டும் ஒருங்கிணைந்து இந்தியத் தத்துவங்கள் சொல்வது போன்ற ஒரு சுழற்சி இயக்கத்தை ஆரம்பிக்கக் கூடும், அத்தகைய ஓர் ஊஞ்சலாடும் பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்ச தொடக்கம் என்பது உண்மையில் முந்தைய சுழலின் முடிவுதான்.”
எது நாமரூபங்களாக விரிந்திருக்கும் இப்பிரபஞ்சம் கரைந்த பிறகு எஞ்சுமோ அதுவே ஆதி வஸ்து அதுவே அடுத்த சுழலின் தொடக்கம். எது இறுதியோ அதுவே தொடக்கம். சைவ சித்தாந்த்த்தின் சாரமன ‘சிவஞான போத’த்தின் முதல் சூத்திரமே இதை கூறுகிறது ’…தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம். அந்தம் ஆதி என்மனார் புலவர்.’
திருஞான சம்பந்தரும் இதை சுட்டுகிறார்: ’ஈறாய் முதல் ஒன்றாய்…’
இந்த நாமரூபப் பன்மைக்கு உள்ளே இருப்பது ஒன்றான ஒரே வஸ்துவே. அது பிரம்மம். வெளிப்படும் ஒவ்வொரு வடிவத்திற்குள்ளாக செல்பவர்கள் இறுதியில் முழு முதற் பரம்பொருளை அடைய முடியும். இந்தப் பிரம்மம் உறைகிறது. சைவம் மட்டுமல்ல பிற பாரத மரபுகளும் இந்த உண்மையைக் காட்டும் அருள் வடிவங்களை நமக்குத் தந்திருக்கின்றன.
விஷ்ணுவின் வியூகங்கள் குறித்து இந்தியவியலாளர் டென்னிஸ் ஹட்ஸன் விளக்குகிறார்:
நாராயண வாசுதேவர் எப்படி தன்னையே கால-வெளியாக விரிக்கிறார் என்பதை பஞ்சராத்ரக் கோட்பாடு விளக்குகிறது. வியூகம் எனும் பதம் ‘வெளிப்படுதல்’ (emanation) எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு ’மீள்-அமைத்தல்’, அல்லது ’உருவாதல்’ (‘‘re-arrangement’’ or ‘‘formation’’) எனும் பயன்பாடுகளும் உண்டு…. கடவுள் ஒரு வியூகநிலை அடையும் போது அவர் தனியாகவே இருக்கிறார்… கடவுள் தன் யோகமாயையால் தன்னுணர்வின் வெளிப்பாட்டுத்தன்மையை மாற்றுகிறார். ஆனால் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் ஒவ்வொரு வியூகநிலையிலும் கடவுள் முழுமையாகவே இருக்கிறார். அதன் ரூபம் நமக்கு அவரது பிற ரூப வெளிப்பாடுகளை மறைத்தாலும் ஒவ்வொரு வியூகத்திலும் அவர் முழுமையாக உறைகிறார்.
மேலே சொல்லப்பட்ட விஷயத்துக்கு அதிசயிக்கத்தக்க விதத்தில் இணைத்தன்மை கொண்ட வேறு சில சமாசாரங்களும் உள்ளன. இயற்பியலாளர் டேவிட் போமின் (David Bohm) அறிவியல் கோட்பாடொன்றை ப்ரிட்ஜாஃப் கேப்ரா பின்வருமாறு விளக்குகிறார்:
“போம் தான் முன்வைக்கும் கோட்பாடான உள்ளுறை ஒழுங்கு (Implicate order) என்பதற்கு ஹோலோக்ராமை (hologram) ஓர் எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார். அதன் ஒவ்வொரு பகுதியும் ஒருவிதத்தில் முழுமையை தன்னில் கொண்டிருக்கிறது. முழுமையிலிருந்து வேறுபட்டு குறைந்த ஒரு வடிவமாக அது இருந்தாலும் கூட அதிலிருந்து முழுமையை மீண்டும் கண்டடைய முடியும். டேவிட் போமின் பார்வையில் நாம் காணும் இந்த உலகம் ஒவ்வொரு பகுதியிலும் முழுமை உள்ளடங்கி இருக்கும்படியாகவே அமைந்துள்ளது.”
விஷ்ணு ஆதி சேஷனில்தான் (சேஷம் – மிஞ்சியது) அறிதுயில் புரிகிறார். பிரபஞ்சப் பரிணாமத்தில் நாமரூபப் பேதங்கள் கரைந்த பிறகு எஞ்சுவதிலேயே (சேஷம்) பரம்பொருள் துயில் கொள்கிறது. அதன் நாபியிலிருந்து மலர்வதே பௌதீகக் பிரபஞ்சம். சிருஷ்டி என்பது இந்த ஞானமரபில் வெளிப்படுவதே ஆகும்.
இந்த பௌதீகப் பொருண்மையின் வெளிப்பாடும் கூட திடமான பிரக்ஞையின் வடிவே. அவை பொய்யானவை அல்ல. அவற்றின் வெளிப்பாடுகள் இயக்கங்கள், பரிணாமம் உட்பட பிரக்ஞையின் அலகிலா விளையாட்டாகவே அவை அமைகின்றன. ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் யாவுமாகி நிற்கும் இப்பரம்பொருளை பெண்மையாக வடிவமைத்துத் துதிக்கிறது. ஸ்ரீ நடராஜ வடிவத்தில் கார்ல் சாகன் கண்டது போலவே நவீன அறிவியல் காட்டும் பிரபஞ்சவியல் சாத்தியக்கூறுகளின் கவித்துவ வடிவ முன்னுணர்தல்களை இங்கு நாம் காணமுடிகிறது. அவற்றுள் சிலவற்றை இங்கே காணலாம்.
shakthi
பற்பல பிரபஞ்சங்களை சஹஸ்ரநாமம் கூறுகிறது.
அவை கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் உருவாகின்றன. (உந்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன புவனாவளீ) அவளே ஆதி இயற்கை. (மூலப்ரக்ருதி) அவளே இருப்பும் இருப்பின்மையுமாக இருக்கிறாள். அவள் வெளிப்படையாகத் தெரியாத ஆதி இயற்கையிலிருந்து வெளிப்படும் ’மஹத்’ ஆக உருவெடுக்கிறாள் (வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி) அவளே அனைத்துமாகி நிற்கிறாள். (வ்யாபின்யை) அவளே எண்ணிலடங்கா ரூபங்களில் விரிகிறாள். (விவிதாகாரா)
ஆனால் அவள் ஏன் இதை செய்ய வேண்டும்? அவள் இப்பிரபஞ்சங்களை விளையாட்டாகவே செய்கிறாள். (லீலா-க்லுப்தப்ரஹ்மாண்ட மண்டலா) இந்த மாய வெளிப்பாட்டுப் பிரபஞ்சத்தின் அடிநாத சத்தியமாக அவளே இருக்கிறாள். (மித்யாஜகத்திஷ்டானா) ஏன்? அதற்கு அடுத்த இரண்டு நாமங்களும் பதிலளிக்கின்றன. எது விளையாட்டோ அதுவே மற்றொரு கோணத்தில் விடுதலை தருவதாக அமைகிறது. (முக்திதா). அவளே அந்த விடுதலையின் வடிவம்தான் (முக்திரூபிணி).
அபிராமி அந்தாதி ஏறக்குறைய பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்த சாக்த பக்தி-ஞான இலக்கியம். இதில் காட்டப்படும் ஓர் அழகிய உருவகம்: மலரும் பிரபஞ்சம். தேவியே பிரபஞ்சத்தைப் பூப்பவள். அவளே அதைப் பூத்த வண்ணம் காப்பவள். பின் கரந்தவள்.
மற்றொரு பாடல் அவளை பொருண்மையின் பற்பல மலர்களாகப் பூத்து விரியும் ஆதி மொட்டாக உருவகிக்கிறது: ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிபவள்
இந்த உருவகம் எத்தனை ஆழமாக நம் அறிதலில் வேர் பதித்துள்ளது என்பதை உணர வேண்டுமென்றால் இந்த ’பிரபஞ்ச மலர்’ உருவகத்தை ஜே.கிருஷ்ணமூர்த்தி டேவிட் போமுடன் உரையாடுதலில் பயன்படுத்தியிருப்பதிலிருந்தும், அந்த உருவகம் டேவிட் போமின் உணர்வில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். தத்துவப் பேராசிரியர் ரென்னே வெப்பரிடம் (Renée Weber) உரையாடும் டேவிட் போம் இதனைக் குறிப்பிடுகிறார்:
வெப்பர்: பிரபஞ்சம் அதன் அடியாழங்களிலிருந்து வெளிப்படும் போது விதவிதமான சேர்க்கைகளில் பரிணமிப்பதை நாம் படைப்பாக்க விளையாட்டு (சமஸ்கிருதத்தில் லீலா) எனலாம்.
போம்: ஆம், அதன் மூலம் அது மடலவிழ்கிறது, வளர்கிறது, மலர்கிறது (அதாவது நீங்கள் அந்த வார்த்தையை ஜெ.கிருஷ்ணமூர்த்தி கூறிய அதே பொருளில் பயன்படுத்தினால்); எனவே பரிணாமம் என்பது அடிப்படையானது. இது காலம் வெளி இரண்டுமே சம்பந்தப்பட்டது. காலம் என்பதே இந்த வெளிப்படுதலின் ஓர் ஒழுங்குத்தன்மைதான்.
இறை குறித்த இத்தகையதோர் பார்வையே இன்று மேலெழும் பௌதீகப் பிரபஞ்சவியல் காட்டும் தத்துவத்தன்மைக்கு ஏற்றதாக உள்ளது. இனிவரும் சாத்தியக் கூறுகளையும் அதனால் உள்வாங்க இயலும். பாரதப் பண்பாட்டின் மேதமை இந்த உள்வாங்கும் தன்மையை தனது வெளிப்பாட்டின் அனைத்துத் தளங்களுக்கும் விரித்ததுதான்.
stephen_hawking1
மீண்டும் ஹாவ்கிங் சொன்னவற்றுக்கே வருவோம். அவருடைய அண்மை நூலில் அவர் இந்தக் ’கர்த்தர்’ எனும் இறைக்கோட்பாட்டை எப்படி நிராகரிக்கிறார் என்பதைக் காணலாம்:
வெவ்வேறு விதமான இயற்கை விதிகளைக் கொண்ட பல்வேறு பிரபஞ்சங்களில் நம்முடைய பிரபஞ்சமும் ஒன்று… என்பதை நாம் கண்டோம். அதிசயமாக இப்பிரபஞ்சம் நாம் உருவாக ஏதுவாக இருப்பதை விளக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட கோட்பாடு அல்ல- இந்த பல-பிரபஞ்சக் கோட்பாடு. எல்லை-வரையறை மேலும் சில பிரபஞ்சவியல் கோட்பாடுகளை ஏற்கும் போது அதன் விளைவான சாத்தியக் கூறுகளில் ஒன்றே இது…. பார்ப்பதற்கு வடிவமைக்கப்பட்டது போலவே தோன்றும் உடல் அமைப்பு அற்புதங்கள் எப்படி ஆண்டவன் எனும் கோட்பாட்டின் தலையீடு இல்லாமலே விளக்கப்பட முடியும் என்பதை எப்படி டார்வினும் வாலஸும் காட்டினார்களோ அதே போல பல-பிரபஞ்சக் கோட்பாடு எப்படி இந்த பிரபஞ்சத்தின் விதிகள் நம் இருப்பை உருவாக்கும் தன்மைகளுடன் இருப்பது போலத் தோன்றுவதை, அப்படி உருவாக்கிய ஒரு இறைவன் என்பது இல்லாமலே, விளக்க முடியும்…
பலபிரபஞ்சக் கோட்பாட்டை (multiverse) உள்வாங்க ஆபிரகாமிய மதங்கள் சிரமப்படுகின்றன. அதனைத் தங்கள் இறையியல் சட்டகங்களுக்குள் அவற்றால் அடைக்கவோ அல்லது அதை உள்வாங்கும் விதமாக தம் இறையியலை வளர்க்கவோ அவற்றால் இயலவில்லை. ஆனால் பாரத ஞான மரபின் பிரபஞ்ச தரிசனங்களில் அது எளிதாகச் சாத்தியமாவதுடன் நம் புராணக்கதைகள் நம் உளவியலை இத்தகைய பிரபஞ்சவியல் கோட்பாடுகளை மனத்தடைகளில்லாமல் உள்வாங்கும் பக்குவத்தை நமக்கு அளிக்கின்றன. இயற்பியலாளர் மிக்கியோ காகு (Michio Kaku) இதனை சுட்டிக்காட்டுகிறார்:
[ஹிந்து-பௌத்த] புராணங்கள் சொல்லும் பிரபஞ்சமானது காலமற்றது. தொடக்கமும் முடிவும் இல்லாதது. இருப்பின் பல தளங்களில் மிகவும் உன்னதமான நிலை நிர்வாணமாகும். அது நிரந்தரமானது. அதை தூய தியானத்தின் மூலமாகத்தான் அடைய முடியும். ஹிந்து மகாபுராணத்தில் ‘இறைவன் உலகைப் படைத்தால் அப்படைப்புக்கு முன்னர் அவர் எங்கிருந்தார்?’ எனும் கேள்வி எழுப்பப்படுகிறது. ’இப்பிரபஞ்சமும் படைக்கப்படாதது. காலத்தைப் போலவே ஆதியும் அந்தமும் அற்றது.’ என்கிறது அப்புராணம்.
பின்னர் ஹாகு ஒரு பெரும் இணைப்பைக் குறித்துப் பேசுகிறார்:
அறிவியலாளர்கள் என்ன ஊகிக்கிறார்களென்றால், படைப்பு என்பது தொடர்ந்து காலமற்ற நிர்வாணப் பேராழி ஒன்றில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தபடியே உள்ளது. இந்தப் புதிய பார்வையில் நமது பிரபஞ்சம் என்பது ஒரு பெருங்கடல் பரப்பின் மீது மிதக்கும் சிறு குமிழியே, இத்தகைய சிறு குமிழ்கள் உருவாகியபடியே உள்ளன. நிர்வாணமெனும் பதினொன்று பரிமாணங்கள் கொண்ட அதிவெளியிலிருந்து உருவாகும் சிறு குமிழே நம் பிரபஞ்சம். இப்பிரபஞ்சத்தை பெரு வெடிப்புதான் உருவாக்கியது. ஆனால் அது ஓர் அழிவற்ற பேராழியில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பது. இது சரியென்றால், இதோ இந்த வாக்கியத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது கூட பல புதிய பிரபஞ்சங்களின் ஆதி முதல் தருணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.
இதை வாசிக்கும் போது ஒரு சஹஸ்ர நாம உபாசகர் வெகு இயல்பாக இதனை ’உந்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன புவனாவளீ’ நாமத்துடன் இணைத்து மெய் சிலிர்க்க முடியும். ஆனால் ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளருக்கு? அவருக்கும் ஒரு வழி இருக்கிறது. தன்னுடைய இறைக்கோட்பாடு பிரம்மம் எனும் முடிவிலாப் பெருங்கடலில் கரையும் மாயையின் நாமரூப பேதத்தின் ஒரு சிறு துளி மட்டுமே அன்றி அதுவே ஆழியல்ல என்பதை அவர் உணரும் போது.

1 comment:

  1. கலை - ஒளிக்கலை! கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வர் ஞானம்
    பெறார்! ஏன்? கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்பவர்களுக்கு மாயை கலையாக ஒளியாக வெளிப்பட்டு மனம் மயங்கும்படியாக பலபல காட்சிகளை காட்டும். உடனே ஆஹா எனக்குப் பல அற்புத காட்சிகள் காண கிடைக்கின்றது. நானே ஞானம் பெற்றவன் நானே பெரியவன் என , ஏமாந்து, இறுமாந்து, பிதற்றுவான்!! கண்ணை மூடி தியானம் செய்பவன் நிச்சயம் ஏமாந்து போவான்!
    http://sagakalvi.blogspot.com/2012/01/blog-post_28.html

    ReplyDelete